Search
Tuesday 17 September 2019
  • :
  • :

வடக்கு மாகாணசபையை கொதி நிலையில் வைத்திருக்க விரும்பும் முத்தரப்புக்கள்!

வடக்கு மாகாணசபையை கொதி நிலையில் வைத்திருக்க விரும்பும் முத்தரப்புக்கள்!

நரேன்-

ஒரு தனிநாடு கோரிய ஆயுதப் போராட்டம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் 2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்க்காலில் மௌனிக்கச் செய்யப்பட்டது. அதன் பின்னரும் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கை தீர்க்கப்படாமல் இருந்தமையானது ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கு ஒரு தர்ம சங்கடமான நிலைமையை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்’டு வந்ததன் பின்னர் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைக்கு சாதகமான தீர்வை அளிப்பதாக சர்வதேசத்திற்கு வாக்குறுதியளித்திருந்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமையே சர்வதேச சமூகத்தை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியிருந்தது. இராஜதந்திர ரீதியிலான அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் அன்றைய மஹிந்த அரசாங்கம் தனது வெற்றிக் களிப்பில் திளைத்ததேயன்றி தான் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்ற முனையவில்லை. மறுபுறத்தில் சர்வதேச சமூகம் தார்மீக கடமையை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்ததால் தன்னோடு ஒத்துழைக்காத மஹிந்த அரசாங்கத்தை ஜனநாயாக ரீதியில் அப்புறப்படுத்த தீர்மானித்து இருந்தது.

இதன் பின்னனியிலேயே வடக்கு மாகாணசபைத் தேர்தலையையும் அதன் பின்னர் இன்று வரை நடந்து கொண்டிருக்கும் அரசியல் சூழலையும் அவதானிக்க வேண்டியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் மக்கள் பல்வேறு துன்பங்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழ் மக்கள் இருந்த போதும் தமது கதவுகளைத் திறந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அமோகமாக வாக்களித்து 30 உறுப்பினர்களை மாகாணசபைக்கு தெரிவு செய்திருந்தனர். தமிழ் மக்களின் ஒற்றுமையையும், தமிழ் மக்கள் தமக்கான தீர்வு விடயத்தில் தொடர்ந்தும் உறுதியாக இருக்கின்றார்கள் என்பதையும் அது மீளவும் சர்வதேசத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் வெளிப்படுத்தியிருந்தது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் மலர்ந்த வடமாகாண சபை கடந்த மஹிந்தாவின் ஆட்சியில் முறையாக செயற்பட முடியாத ஒரு சபையாக இருந்து வந்தது. அதன் ஒவ்வொரு செயலுக்கும் ஆளுனரால் முட்டுக்கட்டை போடப்பட்டும் இருந்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்த நிலையில் சற்று தளர்வு அல்லது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இருப்பினும் ஆளும் கட்சியினரே தமக்குள் முட்டி மோதும் சம்பவங்கள் இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. ஏன் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டது என்பது ஆராயப்பட வேண்டியதும், சிந்திக்க வேண்டியதுமே.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்றத்திற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவளித்திருந்தது. கடந்த மஹிந்தா அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த வெறுப்புணர்வை சர்வதேச சமூகமும் சரியாக பயன்படுத்திக் கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆட்சி மாற்றம் ஏற்படும் நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினக் தலைவர் தென்னிலங்கை ஆளும் வர்க்கத்தினுடைய ஆதரவாளராக மாறினார். இதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய இனம் பொருவாரியாக தற்போதைய நல்லாட்சி அரசாஙகம் எனக் கூறப்படும் இந்த அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏற ஆதரவளித்திருந்தது.

அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போர்க்குற்ற விசாரணை, நிரந்தர தீர்வு, காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை கண்டறிதல், பலாக்காரமாக கபளீகரம் செய்யப்பட்ட காணிகளை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்பேறு கோரிக்கைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனமாக முன்னுறுதித்தி தேர்தலில் அமோக வெற்றி பெற்று இன்று எதிர்கட்சி தலைவர் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுடன் இருக்கின்றது. அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் இருந்த நெருக்கடிகளை சமாளிப்பதற்கும், சர்வதேச இராஜதந்திர உறவுகளைப் வளப்படுத்துவதற்கும் அரசாங்கம் கூட்டமைப்பிடனான உறவை நன்கு பயன்படுத்தியும் இருந்தது. தற்போது பயன்படுத்தியும் வருகின்றது. இதேபோன்று சர்வதேச சமூகமும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவ பிரதேசங்களை பயன்படுத்திக் கொள்வதற்காக கூட்டமைப்பின் இத்தகைய உறவை பயன்படுத்தியும் உள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை குறிப்பாக தமிழரசுக் கட்சியினர் இணக்க அரசியல் செய்வதாக சொல்லிக் கொண்டு சரணாகதி அரசியல் என்ற நிலைக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையிலேயே அரசாங்கத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் குறிப்பாக தமிழரசுக் கட்சி உயர் பீடத்திற்கும் வில்லனாக மாறியிருக்கிறார் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். தமிழரசுக் கட்சியின் உயர்மட்டத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு முதலமைச்சர் வில்லனாக தென்பட்டாலும், தமிழ் மக்களை பொறுத்தவரை அவர் இன்று கதாநாயகனாகவே பார்க்கப்படுகிறார். இதனையே நடந்து வரும் சம்பவங்களும், முதல்வருக்கான அமோக வரவேற்புக்களும் உணர்த்தியிருக்கின்றது. கடந்த காலத்தில் இங்கு இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்பதை தனது மாகாண சபையின் ஊடாக தீர்மானத்தை நிறைவேற்றி புதிய அரசாங்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் அழுத்தத்தை முதலமைச்சர் ஏற்படுத்தியிருந்தார். தன்னை சந்திக்க வருகின்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் அதனை வெளிப்படுத்தி வருவதுடன் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள், அபிலாசைகள் தொடர்பாக தொடர்ந்தும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறியவாறு வெளிப்படுத்தி வருகிறார்.

தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகள் சராணாகதி நிலைக்கு தமிழரசுக் கட்சியை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனை தமிழரசுக் கட்சியின் அண்மைய செயற்பாடுகள் வெளிப்படுத்தியும் இருக்கின்றன. இந்த நிலையில் வடக்கு முதலமைச்சரை அகற்ற வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் விருப்பாகவும் அதுவே உள்ளது. சர்வதேச சமூகத்திற்கும் இதுவே தேவையாகவுள்ளது. முதலமைச்சரின் நேர்மையானதும், நீதியானதும், தமிழ் மக்கள் நலன் சார்ந்ததுமான காத்திரமான செயற்பாடுகள் தடுமாறி செல்லும் தலைவர்களுக்கும், தலைமைக்கும் அச்சுறுத்தலாக மாறத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையிலேயே வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றது.

வடக்கு முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரம் தோல்வியில் முடிவடைந்த போதும் வடக்கு மாகாண சபை ஒரு குழப்ப நிலையில் இருக்க வேண்டும் என்பதையே மேற்சொன்ன மூன்று தரப்புக்களும் விரும்புகின்றன. அதனாலேயே அண்மைய நாட்களில் வடக்கு மாகாண சபை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்பின் முரணாக வெளிவந்து கொணடிருக்கின்றது. தமிழ் மக்களையும், தமிழ் அரசியல்வாதிகளையும் மகாணசபை தொடர்பில் திசை திருப்பி விட்டு தென்னிலங்கையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கான ஒரு முயற்சி நடைபெற்று வருகின்றது. இதற்கு தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலரும் உடந்தையாக செயற்படுகின்றார்கள் என்பதை இந்த பத்தி முன்னரும் சுட்டிக்காட்யிருந்தது.

வடக்கு முதலமைச்சர் கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வடக்கு மாகாணசபையினையும் அதன் செயற்பாடுகளையும் திட்டமிட்ட வகையில் குழப்புவதன் மூலம் தமிழ் மக்களின் கவனத்தினைத் திசை திருப்புவதற்கு அரசாங்கமும் அவர்களோடு சேர்ந்து இயங்குகின்ற தமிழ் அரசியல்வாதிகளும் முனைந்து வருகின்றார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது. அரசியலமைப்பு திருத்தத்தினூடாக தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வினைப் பெற்றுத் தர வேண்டிய அரசாங்கம் அதனைச் செய்து முடிக்காது காலத்தினை இழுத்தடித்து வருவதோடு உத்தேச அரசியல் அமைப்பில் தமிழர் தரப்புக்கு அதிகாரங்களை முழுமையாகப் பகிர்ந்தளிக்காத விதத்தில் மாற்றங்களை உள்ளடக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருகின்றது. இதிலிருந்து தமிழர்களுடைய கவனத்தினைத் திசை திருப்புவதற்காகவே அவர்கள் வடமாகாண சபையினைக் குழப்ப முனைகின்றனரோ என்ற சந்தேகம் எம்முள் பலரிடம் எழும்புகின்றது என்றும்

சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அதிகாரம்இ வடக்கு கிழக்கு இணைப்பு, நிதி உட்பட பல்வேறு ஆக்க பூர்வமான அதிகாரப் பகிர்வினை தமிழர் தரப்பு எதிர்பார்த்துள்ள வேளையில் அவற்றினை வழங்காது ஒரு அரைகுறைத் தீர்வினைத் திணிப்பதற்கு அரச தரப்பு முயன்று வருகின்றது. இவ்விடயங்களைக் கையாளும் குறித்த சில தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் அரசின் இந்தப் போக்கிற்கு ஆதரவளித்து வருவதுடன் மக்களுக்கு இது தொடர்பிலான விடயங்களைத் தெளிவுபடுத்தாது மூடு மந்திரம் போன்று அவற்றைக் கையாண்டு வருகின்றனர். 13வது திருத்தச் சட்டத்திற்கு மேல் எதனையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது என்று சிலர் கூறி வருவது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றது’ எனவும் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபைத் தேர்தல் நேரத்திலும் அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் நேரத்திலும் ஜனாதிபதி தேர்தலின் போதும் இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி ஆட்சி முறை உள்ளிட்ட மேற்சொன்ன அன்றாட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சர்வதேச சமூகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்த நேரத்தில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எமது ஒற்றுமையை வெளிப்புடத்த வேண்டும் என்று ஐக்கியத்தை முன்னுறத்தியே கூட்டமைப்பின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இப்பொழுது கட்சியையும், சின்னத்தையும் கூட்டமைப்புக்காக கொடுத்தமையால் ஒட்டுமொத்த கூட்டமைப்பும் தனக்கே சொந்தம் என்ற தொனியில் தமிழரசுக் கட்சி செயற்படுகிறது. எந்த மாகாண சபை முறைமையை தும்புத்தடியாலும் தொடமாட்டோம் என்று சொன்னவர்கள் இன்று பதவிகளுக்காக போட்டி போடுகிறார்கள். அதுமட்டுமன்றி ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் கொடி பிடிக்கின்றனர். மாகாணசபை பதவியேற்றவுடன் முதலமைச்சரே அமைச்சர்களை முடிவு செய்வார் என்று சொன்னவர்கள் இன்று அமைச்சர்கள் நியமனத்தில் தங்களுடைய கட்சியை கேட்க வேண்டும் சொல்கிறார்கள். இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய பங்காளிக் கட்சிகள் பதவி கோரி முதலமைச்சரிடம் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாணசபையை அகற்ற வேண்டிய அல்லது அதன் செயற்பாடுகளை முடக்க வேண்டிய தேவை பல்வேறு சக்திகளுக்கு அவசியமாகியுள்ள இந்த வேளையில் தமிழ் தேசியத்தை முன்னுறுத்தி வாக்கு கேட்ட மாகாணசபை உறுப்பினர்களில் சிலரும், அந்த முயற்சிகளுக்கு துணை போவது என்பது தேசியத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் விசுவாசத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. அவர்கள் தேசியத்தின் மீது கொண்டிருக்கும் விசுவாசம் உண்மையாக இருக்குமானால் இந்த நேரத்தில் மாகாணசபையை எவ்வித தொய்வுமின்றி கொண்டு செல்வதற்கு முன்வர வேண்டும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *