Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடமாகாண சபையின் எதிர்காலம்…?

வடமாகாண சபையின் எதிர்காலம்…?

ருத்திரன்-

தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் தமிழ் அரசியல் தலைமைகளின் மீதான வெறுப்பையும் ஏற்படுத்திய வடமாகாண சபை விவகாரம் முடிவுக்கு வந்து 97 ஆவது அமர்வு நடைபெற்றிருக்கிறது. வடமாகாண சபை முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீளப்பெறப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் செய்ததாக விசாரணைக் குழுவால் குறிப்பிடப்பட்டிருந்த விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் தமது பதவிகளை தாமாகவே முன்வந்து துறந்துள்ளனர். சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்களின் கட்டாய விடுமுறையை தளர்த்திய முதலமைச்சர் அவர்கள் மீதான விசாரணை தொடரும் எனவும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும், குறித்த அமைச்சர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற இணக்கத்தையும் பெற்றிருக்கின்றார். மாகாணசபையை வழிநடத்துகின்ற அதன் ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்களுக்கான நடுநிலைமைவாதியாக செயற்பட வேண்டிய அவைமுதல்வர் அந்த நிலையில் இருந்து விலகி தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக செயற்பட்டு ஆளுனரிடம் மகஜர் கையளித்த விவகாரம் விமர்சனத்திற்குரியதாக மாறிய போதும் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பாது மாகாணசபை உறுப்பினர்கள் அமைதியாகிவிட்டனர். இந்தநிலையிலேயே கடந்த 22ம் திகதி வடமாகாணசபை 97 ஆவது அமர்வு உறுப்பினர்களின் இருக்ககைளில் மாற்றங்களை ஏற்படுத்திய நிலையில் அமைதியாக நடைபெற்றுள்ளது. விலகிய இரு அமைச்சுக்களையும் முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட வடமாகாணசபையின் செயற்பாடுகள் இனி எவ்வாறு அமையும் என்பது பலரதும் கேள்வியாகவுள்ளது.

மலர்ந்தது தமிழர் அரசு என்று தமிழ் தேசிய இனம் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் அதிகாரங்கள் எதுவுமற்ற மாகாண சபை 2013 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கைகளில் கிடைத்திருந்தது. அப்போதைய மஹிந்தா அரசாங்கம் மாகாணசபையை எவ்வாறு என்றாலும் தான் கைப்பற்றி விட வேண்டும் என்ற மமதையில் போட்ட திட்டத்தை முறியடித்து தமிழ் மக்கள் அமோகமாக வாக்களித்து இந்த மாகாண சபையை உருவாக்கினார்கள். இன்று அந்த மாகாணசபை தனது பதவிக் காலத்தின் இறுதியாண்டை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. இன்னும் பதினைந்து மாதங்களில் அதன் பதவிக்காலம் இநிறைவடைய இருக்கின்றது. கடந்த ஒரு சதாப்த காலமாக உரிமைக்காக ஆயுத ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் போராடிய தமிழ் தேசிய இனம் வடக்கு மாகாண சபையில் பதவிப் போட்டிகளுக்காகவும், சுயநல அரசியல் கட்சி போட்டிகளுக்காகவும் தம்முள் முட்டி மோதிக் கொண்டமை மிகவும் வேதனையான விடயமே.

இந்து, கிறிஸ்தவ மதத்தலைவர்களினதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளினதும் செயற்பாட்டின் காரணமாகவும் மக்களின் எழுச்சி காரணமாகவும் அனுபவமும், முதிர்ச்சியும் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தரின் செயற்பாடு காரணமாகவும் வடமாகாணசபை குழப்பநிலை முடிவுக்கு வந்திருக்கின்றது. ஆனாலும் இந்த முரண்பாடு பனிப்போராக மாகாணசபையின் எதிர்கால செயற்பாட்டை பாதிப்படையச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மகாணசபையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு அங்கு ஏற்கனவே தனித் தனி குழுக்களாக செயற்பட்ட மகாணசபை உறுப்பினர்களை ஓருமித்து இரு அணியாக பிளவுபடுத்தியிருக்கிறது. இதில் ஒரு அணி முதலமைச்சருக்கு எதிரான அணியாகவும், ஒரு அணி முதலமைச்சருக்கு சார்பான அணியாகவும் செயற்பட்டிருந்தது. எதிர்காலத்தில் தாம் அவ்வாறு செயற்பட்டதையும் மறந்து அவர்கள் ஒற்றுமையாக செயற்படக் கூடிய சூழல் உருவாகும் என்று முழுமையாக எதிர்பார்ப்பது கடினம். சுயாதீன விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்தக் குழு அமைச்சர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கபடவுள்ளது. இதனை கடந்த அமர்வில் வடக்கு முதலமைச்சர் தெளிவாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அதற்கான தயார்படுத்தல்களில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஈடுபடவும் தொடங்கியுள்ளனர்.

வடமாகாணசபையால் முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்தி திட்டங்களை கூட அவர்கள் இனி வினைத்திறனுடன் முன்னெடுப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் வடக்கு மாகாண சபையின் வினைத்திறன் மிக்க செயற்பாடு குறித்து மக்கள் மத்தியில் கேள்வி இருந்தது. வெறும் தீர்மானங்களை நிறைவேற்றும் சபையாகவும்இ தமிழ் மக்கள் ஆளும் சபை என்ற அடையாளமாகவுமே அது இருந்திருக்கின்றது. அந்த மகாணசபையின் முதல்வர் என்ற வகையில் அந்த பதவியைக் கொண்டு சி.வி.விக்கினேஸ்வரன் சர்வதேசத்திற்கும், அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பிலும்இ உரிமைப் போராட்டம் தொடர்பிலும் அழுத்தம் கொடுத்தும் வந்திருந்தார். மத்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அவர் தடையாக இருந்தார். இதன் காரணமாக அரசியல் அரங்கில் இருந்து முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களை அகற்ற வேண்டும். அவரின் எழுச்சியை தடுக்க வேண்டும் என்ற காய் நகர்த்தல்கள் தென்னிலங்கையால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சி தலைமை கூட அவரை நீக்குவது குறித்தும் யோசித்து இருந்தது. இந்த நிலையில் மாகாண சபையில் ஏற்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரம் தென்னிலங்கையை குசிப்படுத்தியிருக்கிறது. இனிநடக்கப் போவவையும் இனிவரும் நாட்களில் இந்தச் சபையின் செயற்பாடுகளை குழப்புவதாக அமைந்து விடும் என்ற சந்தேகம் வலுப்பெற்றிருக்கிறது.

வடக்கு முதல்வரை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அவர் மீது இந்த மாகாணசபையை வைத்து சேறு பூசுவதற்கான முனைப்புக்கள் ஏற்படுவதற்கான காய் நகர்த்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஏற்கனவே முதலமைச்சர் வசமுள்ள அமைச்சுக் கூட வினைத்திறனுடன் செயற்பட வில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் பதவி விலகிய அமைச்சர்களின் அமைச்சுக்களை முதலமைச்சர் அடுத்த கட்ட விசாரணை முடியும் வரை தான் வைத்திருக்க எடுத்திருப்பது அந்த அமைச்சுக்களின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டை கேள்விக்குட்படுத்தும்.

தமிழ் மககளின் தற்போதைய தலைமையாக விளங்குகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இராசம்மந்தன் தன்னுடைய அரசியல் முதிர்ச்சி மற்றும் அனுபவம் என்பவற்றை கொண்டு மாகாணசபையில் ஏற்பட்ட குழப்பநிலையினை ஆரம்பத்திலேயே முதலமைச்சர் மற்றும் பங்காளி கட்சித் தலைவர்களையும் இணைத்து பேசி தீர்த்திருக்க வேன்டும். ஆனால் இவ்விவகாரம் பூதாகரமாகியதும் பங்காளி கட்சிகளின் தலைவர்களில் இருவருடனும் மத தலைவர்களுடனும் பேசி இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருந்தார். அவர் நிலைமை எல்லை மீறி செல்வதை உணர்ந்து அவ்வாறு செயற்பட்டிருந்தார். ஆனால் வடக்கு முதலமைச்சருக்கும் தனக்கும் இடையே உள்ள உறவு நிலையை அடிப்படையாக வைத்து இப்பிரச்சனையை தீர்த்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமை துரதிஸ்டமே.

வடமாகாணசபை இனியாவது காத்திரமாகவும் வினைதிறனாகவும் செயற்படுவதற்கு கூட்டமைப்பின் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது அந்த நடவடிக்கைக்கு பங்காளி கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம். வடமாகாண சபையின் இயக்கம் என்பது இனிவரும் நாட்களில் அதனை நம்பி வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கையை வழங்க வேண்டும்.

மாகாணசபையின் தொடக்க பகுதியில் அமைச்சுப் பதவிகளையும் தாமே தீர்மானித்த தமிழரசுக் கட்சி இன்று முதலமைச்சர் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர்களை நியமிக்கவுள்ள நிலையில் தன்னுடன் கலந்து பேசி அமைச்சர்களை நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு நிபந்தனை விதித்திருக்கிறது. இதிலிருந்து அந்தக் கட்சி இன்னமும் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் மத்தியிலும், கட்சிகள் மத்தியிலும் ஐக்கியத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை இல்லாமல் இருப்பது தெளிவாகிறது.

வயது முதிர்ந்த அரசியல் அனுபவமுள்ள தலைவர்களுக்கு இது அழக்கல்ல என்றே பலரும் விமர்சிக்கின்றனர். தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளே இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் என்பது அந்தக் கட்சியின் அண்மையகால செயற்பாடுகள் நிரூபித்துள்ளது. ஆகவே இந்த நிலைமைகளை புரிந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கட்சிகளுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களின் முன்னுள்ள நீண்டகால பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வினைத்திறனுடன் செயற்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *