Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வட மாகாண சபை ஒரு சதத்தையேனும் மத்திய அரசாங்கத்துக்கு திருப்பி அனுப்பவில்லை: முன்னாள் முதலமைச்சர்

வட மாகாண சபை ஒரு சதத்தையேனும் மத்திய அரசாங்கத்துக்கு திருப்பி அனுப்பவில்லை: முன்னாள் முதலமைச்சர்

வட மாகாண சபை தனது ஆட்சிக்காலத்தில் ஒருசதத்தையேனும் மத்திய அரசாங்கத்துக்கு திருப்பி அனுப்பவில்லை என்றும் பிரதேசசெயலாளர்களும் மத்தியின் அலுவலர்களுமே பணத்தை திருப்பி அனுப்பியதாகவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் றொட்டறிக் கழகமும் யாழ்ப்பாணம் தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பான Differently Abled Tamil Association ஆகியவை இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் இணைந்து நடத்திய “சுயமதிப்பீடு மாநாடு பாதிக்கப்பட்டோர் – பதின்மம் கழிந்தும்” என்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

‘பாதிக்கப்பட்டோர் – பதின்மம் கழிந்தும்’ என்னும் தலைப்பில் ஒரு சுய மதிப்பீட்டு நிகழ்வை யாழ்ப்பாணம் றொட்டறிக் கழகமும் யாழ்ப்பாணம் தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பான Differently Abled Tamil Association இன்றைய தினம் இணைந்து நடாத்த முற்பட்டிருப்பது மகிழ்விற்குரியது.

போரின் பின்னர் எமக்கான தேவைகள் ஏராளம் இருந்தன. அவற்றை அடையாளப்படுத்த வேண்டியிருந்தது. இருட்டில் தேட முற்படுபவர்களாக இல்லாது எமது தேவைகளைக் கண்டறிந்து, ஆராய்ந்து, அடையாளப்படுத்தி, அவற்றை எவ்வாறு தீர்த்து வைக்க முடியும் என்பது சம்பந்தமாக நான் 2013ல் பதவி ஏற்றதும் அப்போதைய ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி சுபினே நந்தி அவர்களுடன் பேசினேன். 2003ல் தயாரித்தது போல் வடக்கு மாகாணத்திற்கு ஒரு தேவைகள் மதிப்பீட்டை (Needs’ Assessment ) தயாரித்துத் தரும்படி வேண்டினேன். அப்போது இருந்த அரசாங்கம் மகிந்த இராஜபக்சவுடையது. ஐக்கிய நாடுகள் நிறுவனம் போரின் முடிவில் பாதிக்கப்பட்டோருக்காக எதையுஞ் செய்யாது வாளாதிருந்தது என்ற குற்றச்சாட்டுக்கள் அப்போது இருந்தன. அந்தக் குற்றச் சாட்டுக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய நிலையில் சுபினே நந்தி இருந்தார். அவருக்கும் அப்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் மிக நெருக்கமான உறவு இருந்தமை யாவரும் அறிந்ததே.

முழுமையான தேவைகள் மதிப்பீட்டைச் செய்வதாக ஒப்புக் கொண்டதன் பின்னர் மனிதஇன நலம் சம்பந்தமான ர்ரஅயnவையசயைn அறிக்கையை மட்டும் பெறவே அவர் முன்னின்றார். முழுமையான அறிக்கை பெறப்பட்டால் சாட்சியில்லா யுத்தத்தின் போது அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் வெளிவந்து விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கும் இருந்தது, அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணி வந்த சுபினே நந்தியிடமும் இருந்தது.

குறித்த அறிக்கையில் பல பிழையான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. உதாரணத்திற்கு கணவன்மார்களைப் போரில் இழந்த பெண்களின் தொகை வடமாகாணத்தில் சுமார் 49000மாக இருந்தது. ஆனால் அவர்கள் அறிக்கைப்படி சுமார் 7500 பேரே போரில் கணவன்மார்களை இழந்தவர்கள். 29000 பேரின் கணவன்மார்கள் இயற்கை மரணம் எய்தினார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 29000 பேர் அரச படைகளால் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள் என்ற விபரத்தை வெளிக் கொண்டுவர வதிவிடப் பிரதிநிதி கூட பின் நின்றார்.

அரசாங்கம் மாறிய பின்னர் இது சம்பந்தமாக பிரதம மந்திரியுடன் பேசினேன். தற்போது இது பற்றி பிரதமர் தலைமைத்துவத்தில் திரு.பாஸ்கரலிங்கம் அவர்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். இதுகாறும் இவை சம்பந்தமாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி நாம் அறிந்திருந்தால்த்தான் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். தரவுகள் சரியாக இருந்தால்த்தான் புள்ளிவிபரங்களை வழிநடத்திச் செல்லாம். பிழையான தகவல்களை அரசாங்கம் தந்துதவினால் எமது பிரச்சினைகள் சம்பந்தமாக உரியநிவாரணங்களைப் பெற முடியாது போய்விடும்.

ஆகவே உங்களின் சுயமதிப்பீட்டின் வழிமுறையானது இதுவரை ஐ.நா. ஸ்தாபனத்தினாலும் அரசாங்கத்தினாலும் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றிப் போதிய அறிவு பெற இடமளிப்பதாக இருக்க வேண்டும். தற்போதைய ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியிடம் வடகிழக்கு தேவைகள் பற்றி இதுவரை தயார் செய்த சகல அறிக்கைகளினதும் பிரதிகள் பெறப்படவேண்டும். திரு.பாஸ்கரலிங்கம் அவர்களுடன் அல்லது வடமாகாண பிரதம செயலாளர் திரு.பத்திநாதனுடன் ஒரு நேரத்தை ஒதுக்கி அவர்களால் இதுவரை காலமும் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள, பூரண விபரங்கள் போன்றவை பெறப்பட வேண்டும். அதன் பின்னர் தான் உங்களின் அமைப்பு முறையான சுயமதிப்பீட்டில் இறங்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சி அமைப்பாளர்கள் எம்மை சந்திக்க வந்த போது இந்த சுயமதிப்பீடு மேற்கொள்ளப்படுவதன் நோக்கம் என்னவென்று கேட்கப்பட்டது. இந்த நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற கொடிய இன அழிப்பு நிகழ்வு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் முழுமையாக நிறைவுற்றிருக்கின்ற நிலையிலும் இப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார நிலைகள் எந்த அளவில் இருக்கின்றது என்பதனை ஆராய்வதற்கும் கடந்த 10 வருட காலங்களில் இவர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள், வழங்கப்பட முடியாமல் போன உதவிகள் மற்றும் இவர்களின் வாழ்வாதார நிலைகளை எதிர்பார்க்கப்பட்ட அடைவு மட்டத்திற்கு உயர்த்த முடியாமல் போனமைக்கான காரணங்கள் பற்றியும் ஒரு தெளிந்த முடிவை எட்டுவதற்காகவே இந்த மகாநாடு என்றார்கள்.

இவ்வாறான சுயமதிப்பீடு ஒன்றினை மேற்கொண்ட பின்னர் இவ் அறிக்கையின் ஊடாக மேற்கொண்டு என்ன செய்யப் போகின்றீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவர்கள் இனிவரும் காலங்களில் வழங்கப்பட இருக்கின்ற உதவிகள் அனைத்தையும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட பொறிமுறை வழியாக வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதார நிலைகளை மேம்படுத்த முறையான ஒரு திட்டத்தை வகுக்க முடியும் என்றார்கள். தரவுகள் சரியென்றால் இவ்வாறன திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த முடியும். சரியான தகவல்களை, முறையான தரவுகளைப் பெறுவதே உங்களின் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நடந்தவற்றை மூடி மறைக்க தரவுகள் சரிபடுத்தப்பட்டுள்ளமையை மனதிற் கொள்ளுங்கள். எவ்வாறு ஒரு பிரச்சனை என்று வந்தவுடன் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டு செயலாற்ற முன்வந்துள்ளார்களோ அதேபோல் போர்க்கால அட்டூழியங்களை மறைக்க சிங்கள அரசியல்வாதிகளும் அலுவலர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒற்றுமையாகச் செயற்பட ஆயத்தமாக உள்ளார்கள் என்பதையும் நீங்கள் கணக்கில் எடுக்க வேண்டும். எம்முள் சிலர் தமது பிரத்தியோக நன்மைக்காக பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு ‘ஆமாம்’ போடத் தயங்காது வாழ்ந்து வருகின்றார்கள். உங்கள் பயணத்தின் போது நீங்கள் சந்திக்கக்கூடிய எதிர்மறை நிலைகளுள் இதுவும் ஒன்று.

நான் முதலமைச்சராக கடமையாற்றிய கடந்த 5 வருடங்களில் மாற்றுத் திறனாளிகள் மீதும் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட முள்ளந் தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் அதீத கவனம் செலுத்தியிருந்தோம். இவர்களுக்கு வழங்கப்படுகின்ற வாழ்வாதார உதவிகள் வெறுமனே பண உதவிகளாக மேற்கொள்வதானால் அவற்றால் பலன் எதுவுமில்லை என்பதனை உணர்ந்து கொண்டோம். நாம் வழங்குகின்ற உதவிகள் அனைத்தும் அவர்களின் அப்போதைய உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வனவாக அமைந்திருந்திருக்கலாம். ஆனால் அவை ஒரு நிரந்தரத் தீர்வாக அமைவதற்கு சாத்தியக் கூறுகள் மிக அரிதாகவே காணப்பட்டன. நாம் வழங்குகின்ற உதவிகள் அவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமைகின்ற போதே அவர்களின் வாழ்வாதார நிலைகள் உயர்த்தப்படலாம். அந்த வகையிலேயே எமது திட்டங்கள் அனைத்தும் அமைந்திருந்த போதும் வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளின் அளவுகள் அவ்வாறான பெரிய திட்டங்களை நிறைவேற்ற போதுமானதாக அமையவில்லை. எனினும் எமக்கு கிடைக்கப்பெற்ற சொற்ப நிதிகளில் இருந்து முடிந்த வரை உதவிகளை மேற்கொண்டிருந்தோம்.

ஒவ்வொரு வருடமும் முதலமைச்சரின் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 10 வீடுகள் வரை நிர்மாணித்து வழங்கியிருக்கின்றோம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்து வந்தோம். அது போன்று பாதிக்கப்பட்டவர்கள் தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக பல்வேறு உதவிகளை வழங்கி வந்தோம். உதாரணமாக விவசாய முயற்சிகளில் ஈடுபடக் கூடியவர்களுக்கு விவசாய உபகரணங்கள், நீர் இறைக்கும் இயந்திரம் போன்ற பொருட்களையும,; தையல் முயற்சியில் ஈடுபடக் கூடிய பெண்களுக்கு தையல் இயந்திரம் அதனோடு இணைந்த உபகரணங்கள் ஆகியவற்றையும் வழங்கி வந்திருந்தோம். அதே போன்று வர்த்தக முயற்சியில் ஈடுபடக் கூடியவர்களுக்கு வர்த்தக தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடிய உபகரணங்கள், இலத்திரனியல் நிறுவை இயந்திரங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் ஆகியவற்றை வழங்கி வந்திருந்தோம். ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு ஆகியவற்றுக்கான உதவிகளையும் முடிந்தளவு வழங்கி வந்திருந்தோம். அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தொடக்கம் பிரதம மந்திரி மற்றும் உயர் அதிகாரிகள் வரை அனைவரிடமும் இவர்களின் தேவைகள் பற்றியும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவிகள் குறித்தும் எடுத்துக் கூறியிருக்கின்றோம். இவை அனைத்துக்கும் மேலாக வெளிநாட்டு உயர் ஸ்தானிகர்களை சந்திக்கக் கூடிய வாய்ப்புக்கள் கிடைக்கின்ற போதெல்லாம் இவர்களின் தேவைகள் பற்றி எடுத்துக் கூறியிருக்கின்றோம்.

முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கென தனியான ஒரு அலகை சுகாதார அமைச்சின் ஊடாக நிறுவி அதனூடாக அவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. அவற்றின் தற்போதைய நிலை பற்றி எனக்குத் தெரியாது.

வீடமைப்பு உதவிகள் போன்ற வெளிநாட்டு உதவித்திட்டங்கள் கிடைக்கப்பெற்ற போதும் அவற்றை மக்களுக்கு வழங்குவதில் எமது அரச அதிகாரிகள் காட்டிய மெத்தனப் போக்கு விசனத்திற்குரியது. போரின் போது ஒரு இடத்தில் நிரந்தரமாகக் குடியிருந்தவர்களை அரச படைகள் அவர்களின் வீடு வாசல்களை உடைத்தெறிந்து அவர்களை இடம் பெயர செய்துவிட்டு பின்னர் மீள்குடியமர்வின் போது குடும்பத்தில் ஒருவருக்கு வீடில்லை, இரு உறுப்பினர்களுக்கு வீடில்லை, அரச உத்தியோகத்தர்களுக்கு வீடில்லை என தாமாகவே சட்டங்களை வகுத்து செயற்பட்டது மாத்திரமன்றி வழங்கப்பட்ட வீடமைப்பு உதவித் திட்டங்களில் அரைவாசிக்கு மேல் மீளத்திருப்பி அனுப்பப்பட்டதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இவை மாகாண சபையால் திருப்பி அனுப்பப்படவில்லை. நாங்கள் ஒருசதத்தையேனும் என்றுமே திருப்பி அனுப்பிவிடவில்லை. ஆனால் பிரதேசசெயலாளர்களும் மத்தியின் அலுவலர்களுமே இவ்வாறு திருப்பி அனுப்பி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது என்பது இடைத்தரகர்களின் கமிஷன் பணத்தில் தங்கியிருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் எமது மக்களின் இன்றைய நிலை. எமது மக்களின் வாழ்வாதார நிலைகளை மேலுயர்த்துவதற்கு எமது மக்களால் மட்டுமே முடியும். நாங்களாக முன்வந்து எம் மக்கள் நலம் காக்க வேண்டும். அதற்கான ஆணி வேராக இவ்வாறான சுய மதிப்பீட்டுத் திட்டங்கள் உதவக் கூடியன என்ற எதிர்பார்ப்புடன் உங்கள் முயற்சிகள் சிறப்பாக கைகூட வேண்டும் என இறைவனைப் பிரார்த்தித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

Wigneswaran2 Wigneswaran3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *