Search
Thursday 22 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வட மாகாண முதல்வருடன் லண்டன் செல்விருந்த நிலையில் காலமான அன்ரனி ஜெகநாதன்: அவரின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று விக்னேஸ்வரன் இரங்கல்

வட மாகாண முதல்வருடன் லண்டன் செல்விருந்த நிலையில் காலமான அன்ரனி ஜெகநாதன்: அவரின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று விக்னேஸ்வரன் இரங்கல்

மறைந்த வட மாகாணசபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் மிகவும் வெளிப்படைத்தன்மை கொண்டவர் என்றும் எந்தவொரு விடயமாக இருந்தாலும் தமது கருத்துக்களை ஓங்கி உரைத்து இது சரி, இது பிழை என ஆணித்தரமாக அடித்துக் கூறக்கூடிய ஆளுமையும், மனத் தைரியமும் கொண்டவர் என்று அவரின் மறைவு குறித்து முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் கிங்ஸ்ரன் கவுன்சிலுக்கும் யாழ் நகரத்துக்கும் இடையே எதிர்வரும் 18 ஆம் திகதி லண்டனில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ‘இரட்டை நகர’ புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில் தன்னுடன் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தவேளை அவர் திடீரென மறைந்துள்ளமை மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருப்பதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

முன்னை நாள் கோட்டக் கல்வி அதிகாரியும் வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவருமாகிய கௌரவ மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதன் அவர்களின்
திடீர் மறைவு குறித்து வெளியிடப்பட்ட முதலமைச்சர் அவர்களின் இரங்கல் செய்தி வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கௌரவ மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதன் அவர்களின் திடீர் மறைவு எமக்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

01.10.2016 நாம் அனைவரும் கரைச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடமாடும் சேவை ஒன்றிற்காக வந்து சேர்ந்த போது திரு.ஜெகநாதன் அவர்களின் மறைவுச் செய்தி எமக்கு கிடைக்கப் பெற்றது. அதற்கு முன்னைய தினம் அவர் என்னுடன் சேர்ந்து வெளிநாட்டுக்குச் செல்லும் பயணச் சீட்டு அலுவல்களில் ஈடுபட்டிருந்தார். முல்லைத்தீவுக்கு இரட்டை வழி ஒருங்கிணைப்பு செயற்றிட்டம் ஒன்றினை ஏற்படுத்த அவர் உதவி வந்தார். எனது வதிவிட அலுவலகத்தில் எங்களுடன் கூட இருந்து காரியாலயக் கடமைகள் சிலவற்றை ஆற்றிவிட்டு சுகதேகியாக புறப்பட்டுச் சென்ற திரு.ஜெகநாதன் மறைந்துவிட்டார் என்ற செய்தியை மனம் ஏற்க மறுத்தது. எங்கே இந்த செய்தி பொய்யானதொன்றாக இருக்கக்கூடாதோ என மனம் ஏங்கியது.

யோகர் சுவாமி அவர்களின் கூற்றின் படி இவை அனைத்தும் எப்பவோ முடிந்த காரியங்கள் நாம் எவ்வளவு தான் அழுது புரண்டாலும் அந்தந்தக் காரியங்கள் அவற்றுக்கென தீர்மானிக்கப்பட்ட காலங்களில் நடந்த வண்ணமே இருக்கும். அது போன்று திரு.அன்ரனி ஜெகநாதன் அவர்களின் மறைவும் 01.10.2016இல் நடைபெற வேண்டும் என்பது ஏற்கனவே ஆண்டவரால் எழுதப்பட்டுவிட்டதொன்றோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. அன்ரனி ஜெகநாதன் அவர்களும் அவர்களின் குடும்பப் பின்னணியினரும் ஆண்டாண்டு காலமாக தமிழரசுக் கட்சியின் தூண்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் செயற்பட்டு வந்ததும் அல்லாமல் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்தமை பலராலும் பெருமையாக கூறப்பட்ட ஒரு கருத்து.

திரு.அன்ரனி ஜெகநாதன் அவர்களின் தந்தையார் மரியாம்பிள்ளை அவர்கள் முல்லைத்தீவு பட்டின சபை தலைவராக தமிழரசுக் கட்சியின் பிரதிநிதியாக தேர்ந்தெக்கப்பட்டு முல்லைத்தீவு பிரதேசத்தை மேன்மையுறச் செய்வதற்கும் அங்குள்ள மக்களை சரியான பாதையில் வழிகாட்டி அவர்களை உயர்வு அடைய செய்வதற்கும் உறுதுணையாக விளங்கியவர். அவரின் காலத்திற்குப் பின்னர் திரு.ஜெகநாதன் அவர்களின் சிறிய தந்தையார் அப்பதவியை வகித்து அண்ணனின் பாதையில் வளர்ச்சிபெறப் பாடுபட்டவர்.

இவர்களின் வழியில் உதித்த திரு.அன்ரனி ஜெநாதன் அவர்களும் தனது பாடசாலைப் பருவம் முடிவடைந்ததும் ஆசிரியராக, அதிபராக, கோட்டக் கல்வி அதிகாரியாக பல பதவிகளை ஆசிரியத் துறையில் ஆற்றியது மட்டுமன்றி சிறந்த ஒரு தொழிற் சங்கத் தலைவராக தொழிலாளர்களின் அதாவது ஆசிரியர்களின் பிரச்சனைகளை இனம் கண்டு உரியவர்களுடன் பேசி சரியான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் முன்நின்று உழைத்தவர்.

திரு.அன்ரனி ஜெகநாதன் அவர்களிடம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு விடயம் என்னவென்றால் அவரின் வெளிப்படைத்தன்மை. எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதில் அவரின் வெளிப்படைத்தன்மை தெட்டத்தெளிவாகக் காணப்படும். அந்த விடயம் சார்பாகவோ, எதிர்மறையாகவோ அமைகின்ற போதும் தமது கருத்துக்களை ஓங்கி உரைத்து இது சரி, இது பிழை என ஆணித்தரமாக அடித்துக் கூறக்கூடிய ஆளுமையும், மனத் தைரியமும் கொண்டவர். இவரின் வெளிப்படைத்தன்மை அல்லது தனக்குச் சரியெனப்படும் விடயங்களை ஓங்கி உரைப்பது இவருக்கெதிராக ஏனைய உறுப்பினர்களை தூண்டக்கூடியதான ஒரு நிகழ்வாக அமைந்திருந்த போதும் அவர் சற்றும் பின்நிற்காது தமது கருத்தின் வெளிப்படைத் தன்மையை அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் எடுத்துரைத்து அவர்களை திருப்திப்படுத்தி உண்மையை உணரவைப்பதில் அவருக்கு நிகர் அவராகவே வாழ்ந்தார்.

இவரின் இறுதி நாள் சந்திப்பின் போது பிரித்தானிய நாட்டிற்கான பயண ஒழுங்குகள் பற்றியும் அங்கு நடைபெறவிருக்கின்ற கூட்டங்கள் சம்பாசனைகள் பற்றியும் உரையாடிவிட்டு தமது பிரித்தானிய பயணத்திற்கான வீசாவைப் பெறுவதற்கு கடவுச்சீட்டையும் ஒப்படைத்துவிட்டு சென்ற திரு.அன்ரனி ஜெகநாதன் ஆண்டவரின் திருவடியில் மீளா துயிலில் ஆழ்ந்து விட்டார். அவரின் பயணச் சீட்டை அவர்கள் என்னிடம் கொழும்பில் கையளித்த போது மனம் வெதும்பியது. இவ்வேளையில் அவரின் பிரிவால் துயருறும் அவரின் தாய், தந்தையர், சகோதர சகோதரிகள், பிள்ளைகள், உற்றார் உறவினர் அனைவருடனும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் துக்கங்களையும் பகிர்ந்து கொள்வதுடன் வடமாகாண சபை மிக நேர்மையானஉயர்ந்த உள்ளம் கொண்ட ஒரு பிரதி அவைத்தலைவரை இழந்து நிற்கின்றது என்பதையும் பதிவு செய்கின்றேன். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரின் ஆத்மா சாந்தி அடைவதாக!

antony-jeganathan-funeral-061016-seithy (4)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *