Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வாள்வெட்டு,  கொள்ளைச் சம்பவங்களை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருமாறு கோதா வடபிராந்திய பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு 

வாள்வெட்டு,  கொள்ளைச் சம்பவங்களை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருமாறு கோதா வடபிராந்திய பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு 

வட,கிழக்கில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவம்  மற்றும் கொள்ளைச் சம்பவங்களை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறும் அங்கு சட்டம் ,ஒழுங்கை அவசரமாக அமுல்படுத்தி மக்களுக்கு உச்சபட்ச  பாதுகாப்பை வழங்கி, அங்கு சுமுகமான நிலைமையை ஏற்படுத்துமாறு  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வடபிராந்திய பொலிஸ்மா  அதிபரிடம்  அவசர கோரிக்கையை  விடுத்துள்ளார்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியை சந்தித்த கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையிலான யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை,  திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆகியோர் கூட்டாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே  மேற்படி பணிப்புரையை அவர் விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

வட, கிழக்கின் ஆயர்கள் கூட்டாக சந்திப்பது தொடர்பாக ஏற்கனவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நேற்று முன்தினம் இந்த சந்திப்பு ஜனாதிபதி  செயலகத்தில் இடம்பெற்றது.இதன்போது , வடக்கு ,கிழக்கில் சமீப காலமாக அதிகரித்துவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ஆயர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவி ன் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இதன்போது ஆயர்கள் முன்பாகவே வடபிராந்திய பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியூடாக தொடர்புகொண்ட ஜனாதிபதி,அங்குள்ள நிலைமைகளை அறிந்துகொண்டதுடன், ஆயர்கள் தெரிவித்த விடயங்களை சுட்டிக்காட்டி,உடனடியாக சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்குமாறும், வாள்வெட்டு ,கொள்ளை சம்பவங்களை உடனடியாக கட்டுப்பாடுக்குள் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுத்ததுடன், மக்களுடைய அமைதியான வாழ்வுக்கு பங்கம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கை கட்டியெழுப்புவதற்கு தங்களுடைய ஆதரவை வழங்க முன்வரவேண்டுமென்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆயர்களிடம் கேட்டுக்கொண்டதுடன், புலம் பெயர் முதலீட்டாளர்கள் இலங்கையில் வந்து முதலிடுவதற்கான சூழலை தான் ஏற்படுத்தி தருவதாகவும் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

மேலும், வட, கிழக்கு இளையர், யுவதிகளின் வேலைவாய்ப்பு சம்பந்தமாக ஜனாதிபதியிடம் ஆயர்கள் எடுத்துரைத்த வேளையில், அது தொடர்பான செயற்திட்டம் ஒன்று நடைபெற்றுவருவதாகவும், அதற்கான பணி விரைவில் நிறைவடைந்துவிடும் என்றும் ஜனாதிபதி ஆயர்களிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

அத்துடன் அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பாக சட்டத்தினூடாக விரைவுபடுத்தி வழக்குகளை உடனடியாக நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இந்த சந்திப்பின் போது ஆயர்களிடம் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *