Search
Thursday 1 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விகிதாசரத் தேர்தல்— தற்போதைய நிலையில் கிழக்குத் தமிழர்களுக்கே ஆபத்து-

விகிதாசரத் தேர்தல்— தற்போதைய நிலையில் கிழக்குத் தமிழர்களுக்கே ஆபத்து-

-அ.நிக்ஸன்-

தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியாகக் கூட வந்துவிடக் கூடாதென்ற நோக்கிலேயே 1982இல் ஜே.ஆர் ஜயவர்தனா விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகம் செய்தார் என்றொரு கதையுண்டு. ஆனாலும் ஆசன எண்ணிக்கையில் வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கு அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்தத் தேர்தல் முறையில் முதன் முதலாக 1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் சிறந்த உதாரணம்.

ஆனால் அன்று ஜே.ஆர் நினைத்தைவிட இன்று புதிய புதிய சிங்களக் கட்சிகள் உருவாகி அனைவருமே குறைந்தளவு ஆசனங்களையேனும் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.. அத்துடன் முஸ்லிம் மக்கள் தங்களுக்கெனத் தனித்துவமாகக் கட்சிகளை உருவாக்கிப் பலவீனமான பிரதேசங்களில் பெரும்பான்மைச் சிங்களக் கட்சிகளோடும் இணைந்து போட்டியிட்டுத் தங்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தனர்.

மலையகத் தமிழ் கட்சிகள்தான் தனித்துவத்தை இழந்தன. பெரும்பான்மைச் சிங்களக் கட்சிகளோடு சேர்ந்து போட்டியிட வேண்டிய நிலை உருவானது. சில தொகுதிகளில் மாத்திரமே தங்கள் கட்சிச் சின்னத்தில் போட்டியிட முடிந்தது.

ஆனால் இங்கே நன்மை என்னவென்றால், சிறிய சிறிய கட்சிகளையும் குறிப்பாக மலையத் தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு அவர்களின் ஆதரவோடுதான் ஆட்சியமைக்க வேண்டியதொரு அவலம் பெரும்பான்மைச் சிங்களக் கட்சிகளுக்கு உருவாகியது.

ஒருகாலத்தில் சௌமியமூர்த்தி தொண்டமானின் ஆசனத்தையும் பின்னர் அஷ்ரப் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆசனங்களையும் நம்பி ஆட்சியமைத்த சந்தர்ப்பங்களும் உண்டு.

அதேவேளை, சமகாலத்தில் விகிதாசாரத் தேர்தல் முறையில் பயிற்சி பெற்ற மூத்த உறுப்பினர்களினால், சிங்களக் கட்சிகளுக்குள்ளேயே விருப்பு வாக்குகளுக்காக வெட்டுக் குத்துகளும் ஆரம்பித்துள்ளன.

Vote

இன்று சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளே பிளவுபட்டு இரண்டாகியுமுள்ளன.. அத்துடன் அறுதிப் பெரும்பான்மையைக் கூட நாடாளுமன்றத்தில் பெறமுடியாத அவலம்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், வடக்குக் கிழக்கில் கூட சிறிய சிறிய கட்சிகள் உருவாகி எந்தவொரு கட்சிக்குமே கூடுதல் ஆசனங்களைப் பெறமுடியாத நிலையும் தோன்றியுள்ளது. இதனால் சமகாலத்தில் கூடுதலாகப் பாதிக்கப்பட்டிருப்பது கிழக்கு மாகாணமே.

ஏனெனில் அன்று இந்தத் தேர்தல்முறை அறிமுகம் செய்யப்பட்டபோது கிழக்கில் சிறிய கட்சிகள் எதுவுமே இருக்கவில்லை. தமிழ்த்தேசியக் கோட்பாட்டை உடைக்கும் நோக்கில் இன்று கிழக்கில் புதிய புதிய கட்சிகளும் இன வேறுபாடுகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன. குடியேற்றங்களும் செய்யப்பட்டுச் செயற்கையான முறையில் தமிழர்களின் விகிதாசாரம் குறைக்கப்பட்டு வருகின்றது.

இதனால் விகிதாசாரத் தேர்தல் முறையானது தற்போதைய சூழலில் கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கே பாரிய ஆபத்தாக மாறியுள்ளது. கிழக்கு விவகாரத்தில் தமிழ்க் கட்சிகள் முரண்பாட்டிலும் உடன்பாடாக ஒன்று சேரவில்லையானால், 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் கிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமலே போகலாம்.

இதேவேளை, வாக்காளர்கள் தங்கள் தொகுதி வேட்பாளர்களை இலகுவில் அடையாளப்படுத்த முடியாத தேர்தல் முறை இது- உதாரணமாக யாழ்ப்பாணத்தில் ஏழு ஆசனங்களுக்காக 360 வேட்பாளர்கள். கொழும்பில் 20 ஆசனங்களுக்காக ஆயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள்.

ஆகவே கொகுதிவாரித் தேர்தல் முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும். எண்ணிக்கை அடிப்படையில் மக்கள் வாழும் பிரதேசங்களில் விகிதாசாரம் தொகுதிவாரி கலந்தவொரு தேர்தல் முறையும் அறிமுகம் செய்யப்பட வேண்டும்.
—-(ஆனாலும் இந்த இரண்டும் கலந்தவொரு முறையினாலும் கிழக்கில் சிங்களப் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கக் கூடிய சட்ட நுணுக்கங்கள் தொடர்பாகத் தற்போதைய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் தகவலும் உண்டு)–

அத்துடன் வெற்றி பெற்றதும் கட்சிதாவ முடியாத தடைச் சட்டத்தையும் (கட்சித் தாவல் தடைச் சட்டம்) அமுல்படுத்தினால் மாத்திரமே குறைந்த பட்சம் நேர்மையான உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்ய முடியும்.

1970களில் மேற்கு ஜேர்மனியில் இந்தத் தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டுப் பின்னர் கைவிடப்பட்டது. ஆனால் ஜே.ஆர் அதனை இலங்கையில் அறிமுகப்படுத்தியதால், இன்று புதிய புதிய பிரச்சினைகள் உருவாகியுள்ளன. உலகில் எந்தவொரு நாடுகளிலும் இந்தத் தேர்தல் முறை இருப்பதாகத் தெரியவில்லை.

கணித முறையிலான தேர்தல் என்று கருதியே ஜேர்மனி அன்று இந்தத் தேர்தல் முறையைக் கைவிட்டுப் பின்னர் தொகுதிவாரி முறையை அறிமுகம் செய்திருந்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *