தலைப்பு செய்திகள்

விக்கினேஸ்வரனின் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ தமிழ் தேசிய அரசியலில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்துமா?

விக்கினேஸ்வரனின் ‘தமிழ் மக்கள் கூட்டணி’  தமிழ் தேசிய அரசியலில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்துமா?

யதீந்திரா

பலரும் நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒரு விடயம் கடந்த 24ம் திகதி நிகழ்ந்திருக்கிறது. விக்கினேஸ்வரன் தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் தொடர்பில் தெளிவான அறிவிப்பை செய்திருக்கிறார். இதுவரை அவர் பக்கத்தில் nளிவானதொரு பதிலில்லாமல் இருந்தது. இது தொடர்பில் பலரும் குறைபட்டுக் கொண்டிருந்தனர். இந்தப் பத்தியாளரும் பல்வேறு சந்தர்பங்களில் இது தொடர்பில் வலியுறுத்தி வந்திருக்கிறார். ஆனால் அந்த பிரச்சினை இப்போது தீர்ந்துவிட்டது. விக்கினேஸ்வரன் தனது கட்சியின் பெயர் – தமிழ் மக்கள் கூட்டணி என்று அறிவித்திருக்கிறார்.

தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் காலத்துக்கு காலம் பல அரசியல் கட்சிகளும், கூட்டுக்களும் உருவாகியிருக்கின்றன. பின்னர் அவ்வாறு உருவாகிய கட்சிகளும் கூட்டுக்களும் கால மாற்றத்தினால் சிதைவடைந்தும் போயிருக்கின்றன. ஒரு கட்சி, அந்தக் கட்சி நிலைகொண்டிருக்கும் குறிப்பிட்ட சூழலை எதிர்கொள்ள முடியாமல் போகும் போது, புதிய கட்சி ஒன்றின் தேவைப்பாடு உணரப்படுகிறது. அது மக்களின் தேவையாகவும் உணரப்படும் போது, மக்கள் அதன் பக்கமாக சாய்கின்றனர். அது ஒரு மக்கள் கட்சியாக மாறுகிறது.

எந்தவொரு அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினாலும், எங்குமே அரசியல் வன்முறையில் ஆரம்பிப்பதில்லை, அது ஜனநாகயரீதியான ஒன்றாகவே ஆரம்பிக்கின்றது. ஆனால் எப்போது ஜனநாயக அரசியலின் மீதான நம்பிக்கை முற்றிலும் சிதைகின்றதோ அப்போதுதான், வன்முறை வேர்கொள்ள ஆரம்பிக்கும். அப்படித்தான் தமி;ழ் தேசிய அரசியலிலும் நிகழ்ந்தது. தமிழ் மிதவாதிகளால், ஆரம்பத்தில் இலங்கை தமிழரசு கட்சி பின்னர் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியவற்றி;ன் அரசியல் அணுகுமுறைகள் மீது கோபம் கொண்டு எழுச்சி பெற்ற இளைஞர்களை, அன்றைய மிதவாதிகளால் சரியாக கையாள முடியவில்லை. அவர்களை ஜனநாயக வழி நோக்கி திருப்பக் கூடிய ஆற்றல் அன்றைய மிதவாத தமிழ் தலைவர்களிடம் இருக்கவில்லை. இதன் காரணமாக இளைஞர்கள் ஆயுத வழி நோக்கிச் செல்லுவதற்கு நிர்பந்திக்கப்பட்டனர். இவ்வாறு ஆரம்பித்த வன்முறை அரசியல்தான் பல்வேறு கால கட்டங்களால் நகர்ந்து, இறுதியில் பேரவலங்களுடன் முற்றுப்பெற்றது.

இந்த இடத்திலிருந்து தமிழ் தேசிய அரசியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பையே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டது. அதற்கான தலைமையை வழங்கும் பொறுப்பை காலம் சம்பந்தனிடம் சேர்த்தது. முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் தமிழ் மக்களிடம் இருந்தது ஒன்றே ஒன்றுதான். அதாவது, அந்த அழிவுக்கான நியாயம் கோரும் தார்மீக உரிமை ஒன்றுதான். எந்த சர்வதேச சக்திகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு முண்டுகொடுத்தனவோ, அதே சக்திகளே பின்னர் மகிந்த ராஜபக்ச அரசின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தன. சர்வதேச சக்திகளின் நகர்வுகள் அப்படித்தான் இருக்கும். அதில் ஆச்சரியப்பட அல்லது ஆதங்கப்பட ஒன்றுமில்லை.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் என்பது தமிழர் அரசியலை சர்வதேச அரங்கின் பேசுபொருளாக்கியது. போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற விடயங்களையும் தமிழ் தேசிய அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாதளவிற்கு, ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகியது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் தலைமை என்னும் வகையில் மேற்படி விடயங்களை கையாள வேண்டிய கடமை கூட்டமைப்புக்கு இருந்தது. புலம்பெயர் அரசியல் சமூகம் என்னதான் விடயங்களை எடுத்துக் கூறினாலும், நிலத்தில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமை அது தொடர்பில் எத்தகைய நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது என்பதைக் கொண்டே, அந்த விடயங்களின் கனதி சர்வதேச அரங்குகளில் உணரப்படும். ஆரம்பத்தில் இவற்றின் மீதான உறுதிப்பாட்டை காண்பித்துவந்த கூட்டமைப்பு படிப்படியாக அவற்றின் மீதான பிடியை தளர்த்தத் தொடங்கியது. ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து சர்வதேச அழுத்தங்களை கையாளும் தங்களி;ன் பொறுப்பை முற்றிலும் இழந்து போனது. புதிய ஆட்சியாளர்களின் வாக்குறுதிகளுக்கு பின்னால் இழுபடத் தொடங்கியது. கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் சம்பந்தனின் கதிரை கனவை சரியாக மதிப்பிட்டுக் கொண்ட, ரணில் – மைத்திரி அரசாங்கம், இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனை அறிவித்து, கூட்டமைப்பை முற்றிலும் தங்களின் ராஜதந்திர பொறிக்குள் சிறைப்படுத்தியது. துமிழ் மக்களின் பிரதான கட்சியான கூட்டமைப்பு தங்களுடன் நிற்கிறது என்பதைக் காட்டியே சர்வதேச அரங்குகளில் இலங்கையின் மீதான நன்மதிப்பை மீளவும் தூக்கிநிறுத்தியது. பிறிதொரு புறம் தமிழ் சூழலின் மேலோங்கிநின்ற தமி;ழ் தேசியவாத அரசியல் கோரிக்கைகளையும் மெது மெதுவாக பலவீனப்படுத்தியது. தமிழ் மக்களை பிரதிநிதித்துப்படுத்தும் ஒரு பிரதான அமைப்பான கூட்டமைப்பு, தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் அமைதியாக இருக்கும் போது, அந்தக் கோரிக்கைகள் இயல்பாகவே நீர்த்துப் போகும் என்பதே அரசின் கணிப்பு. அந்தக் கணிப்பு மிகவும் சரியானது என்பது இன்று நிரூபணமாகியிருக்கிறது. இன்று கூட்டமைப்புத்தான் கூட்டரசாங்கத்தின் நம்பிக்கைக்குரிய பங்காளி.

wigneswaran 1

இவ்வாறானதொரு சூழலில்தான் வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியில் வருகிறார். கூட்டமைப்பு கைவிட்டவிட்ட, ஆனால், 2013இல் தான் மக்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை கையிலெடுக்கிறார். அதன் படி செயலாற்ற ஆரம்பிக்கிறார். இதன் முதல் கட்டமாக இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொலைகள் ஒரு இனப்படுகொலை என்னும் தீர்மானத்தை நிறைவேற்றினார். முதல் முதலாக சம்பந்தனின் எதேச்சாதிகார கூட்டமைப்பு அரசியல் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

இதனையும் சுமந்திரன் போன்றவர்கள் வேறுவிதமாக காண்பிக்க முற்படுகின்றனர். அதாவது, இதனை டெலோவின் உறுப்பினர் சிவாஜிலிங்கம் முன்மொழிய முற்பட்ட போது விக்கினேஸ்வரன் அதனை தடுத்ததாகவும், பின்னர் அதனையே அவர் கொண்டு வந்ததாகவும் விமர்சிக்க முற்படுகின்றனர். இதிலுள்ள முக்கியமான விடயம் அதனை விக்கினேஸ்வரன் கொண்டு வந்ததால்தான் அது சர்வதேச அரங்குகளில் கவனிப்பைப் பெற்றது. ஒரு வேளை சிவாஜலிங்கம் போன்ற ஒருவர் கொண்டு வந்திருந்தால், அதனை அனைவரும் ஒரு நகைச்சுவையாக சிரித்துவிட்டு சென்றிருப்பர். இதனை கருத்தில்கொண்டுதான் இனப்படுகொலை தீர்மானத்தை, விக்கினேஸ்வரனே முன்மொழிந்தார். இதனை சம்பந்தன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதுதான் சம்பந்தனோடு விக்கினேஸ்வரன் முரண்பட்ட முதலாது சந்தர்ப்பம். இதன் பின்னர் விக்கினேஸ்வரன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் உறுதியானதொரு குரலாகவே மாறினார். இது சம்பந்தனை தமிழர் விடயத்தில் குரலற்றவராக ஆக்கியது. தமிழ் தேசிய அரசியலில் சம்பந்தன் – விக்கினேஸ்வரன் என்னும் இரண்டு பிரிவுகள் தெரியத் தொடங்கின. இவ்வாறானதொரு சூழலில்தான் விக்கினேஸ்வரனின் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை உருவாகியது. பேரவையின் தலைமையில் அரசியல் தீர்வோலசனை ஒன்றும் முன்வைக்கப்பட்டது. ஆனால் சம்பந்தனோ அதனை தோற்றுப்போனவர்களின் பரிந்துரை என்று நிராகரித்தார். அப்போதும் அரசியல் தீர்வு விடயத்தில் விக்கினேஸ்வரனை இணைத்துக் கொண்டு பயணிக்க சம்பந்தன் முயற்சிக்கவில்லை. உண்மையில் சம்பந்தன் பேரவையை கண்ணியத்துடன் அணுகியிருக்க வேண்டும் ஆனால் சம்பந்தன் எப்போதும் போல், தனது சுயநல ஆணவத்திற்கே முன்னுரிமையளித்தார்.

மேற்படி விடயங்களிலிருந்து நீங்கள் ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ளலாம். அதாவது, கூட்டமைப்பு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தமது சுயநல அதிகார நலன்களுக்காக கைவிட்டுச் சென்ற நிலையில்தான் அதனை விக்கினேஸ்வரன் கையிலெடுக்கின்றார். ஒரு வேளை சம்பந்தன் தனது வாக்குறுதிகளுக்கு உண்மையாக இருந்திருந்தால் விக்கினேஸ்வரன் சம்பந்தனுக்கு பக்கபலமாக இருந்திருப்பார். அல்லது அவரே கூறுவது போன்று தனது பதவிக் காலம் முடியும் போது வீட்டுக்குச் சென்றிருப்பார். ஆனால் இப்போது அவரால் அப்படிச் செய்ய முடியாது. விக்கினேஸ்வரன் இதுவரை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக ஒரு சரியான அரசியல் பாதையை உருவாக்கிச் செல்பவராகவும், அதே வேளை அதனை சரியானதொரு இளம் தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டிய பொறுப்புடைய ஒருவராகவும் அவர் இருக்கின்றார். அதற்கு நிச்சயம் ஒரு கட்சி தேவை. அதனைத்தான் தற்போது செய்ய முற்சிக்கின்றார். ஆனால் அது அவ்வளவு இலகுவானதல்ல.

விக்கினேஸ்வரனின் புதிய கட்சி அறிவிப்பு களத்திலும் புலத்திலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. 2009இற்கு பின்னர் புலம்பெயர் சூழலை கையாளக் கூடிய ஒரு சரியான தலைவர் இணங்காணப்படவில்லை. விக்கினேஸ்வரன் தமிழ் தேசியத்தின் மீது காண்பித்துவரும் உறுதிப்பாடு அவரை நோக்கி புலம்பெயர் சமூகத்தையும் திருப்பியது. இப்போது களத்திலும் புலத்திலும் மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கும் ஒரு தலைவராக விக்கினேஸ்வரன் இருக்கிறார். 2009இற்கு பின்னர் சம்பந்தனுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது ஆனால் சம்பந்தனோ தனது சுநயல அரசியல் போக்கால் அந்தப் போக்கை கைநழுவவிட்டுவிட்டார். தற்போது அந்த வாய்ப்பு விக்கினேஸ்வரனுக்கு கிடைத்திருக்கிறது. வரலாற்றுப் போக்கில் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தலைவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அவ்வாறு அடையாளம் காணப்படுபவர்களுக்கு வாய்ப்புக்களும் கிடைக்கின்றன. அவ்வாறுதான் தற்போது விக்கினேஸ்வரனை வரலாறு அடையாளம் கண்டுள்ளது. விக்கினேஸ்வரன் இதனை சரியாக கையாளுவாராக இருந்தால், இது தமிழ் தேசிய அரசியலில் நிச்சயம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் ஜயமில்லை.

கூட்டமைப்பின் மீதான அதிருப்தியும் கோபமும் அதிகரித்துவருகின்றது, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் தமிழ் அரசியல் மீது வெறுப்படைந்திருக்கிறனர். இவ்வாறானதொரு சூழலில்தான், விக்கினேஸ்வரனின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது ஒரு வகையில் இளைஞர்கள் மீளவும் ஜனநாயக வழிமுறைகள் மீது நம்பிக்கை இழந்துவிடுவதை தடுக்கும் நடடிக்கையாகவும் பார்க்கப்படலாம். சரியான தலைமை இல்லாத போதே மக்கள் மத்தியில் குழப்பங்களும் பிளவுகளும் தோன்றுகின்றன. இதனையே கொழும்புமைய கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது இந்த நிலைமை தெளிவாக தெரிந்தது. கிழக்கைப் பொறுத்தவரையில் இந்த நிலைமை மேலும் சிக்கலானது. எனவே இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு ஒரு வலுவான புதிய அரசியல் கூட்டு தேவை. அவ்வாறானதொரு கூட்டுக்கு தலைமை தாங்கக் கூடிய ஆற்றல் இன்றைய சூழலில் விக்கினேஸ்வரனுக்கு மட்டுமே உண்டு. இனி அனைத்தும் விக்கினேஸ்வரனின் நகர்வுகளில்தான் தங்கியிருக்கிறது. இனி வரப்போகும் இரண்டு வருடங்களும் இலங்கை அரசியலில் மாற்றங்களுக்கான காலமாகவே இருக்கப் போகிறது. தமிழ் தேசிய அரசியலும் மாற்றங்களுக்கான சூழல் கனிந்திருக்கிறது. இந்த இரண்டு வருடங்களில் நிகழப் போகும் மாற்றங்களே தமிழ் தேசிய அரசியலின் அடுத்த கட்டமாகவும் அமையப் போகிறது. ஒரு வேளை இந்த மாற்றங்களை ஏற்படுத்தும் பயணத்தில், மாற்றங்களை விரும்பும் சக்திகள் தோல்வியடைந்து, மீளவும் தமிழரசு கட்சி வெற்றிபெறுமாக இருந்தால், அதன் பின்னரான சில வருடங்களில், தமிழ்த் தேசிய அரசியல் முற்றிலும் செயலிழந்து, உருத்தெரியாமல் போகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *