Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விக்கியை புறம்தள்ளி அரசுடன் இணைந்தது கூட்டமைப்பு

விக்கியை புறம்தள்ளி அரசுடன் இணைந்தது கூட்டமைப்பு

பிரம்மரிஷி 
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான செயலணி அடுத்த மாதம் கூடவுள்ள நிலையில் அதில் பங்குகொள்ளும் முடிவை கைவிடுமாறு வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு ஒரு உறுதியான அரசியல் தீர்வு எட்டப்படும் வரையில் இவ்வாறான செயலணிகளில் தான் பங்குகொள்ளப் போவதில்லை என்றும் அதே போன்று கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனது முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பில் ஆராய்ந்த தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழு (கூட்டமைப்பில் இரண்டு கட்சிகள் இருக்கின்ற போதும் அவர்களும் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாகவே செயற்பட்டு வருகின்றனர்) விக்கினேஸ்வரனின் கடிதத்தை தூக்கி வீசிவிட்டு, அரசாங்க செயலணிகளில் பங்குகொள்வது என்னும் முடிவை எடுத்திருக்கிறது. இதன் மூலம் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு கூட்டமைப்பின் முடிவுகளில் தலையிடும் அதிகாரம் இல்லை என்றும் கூறாமல் கூறியிருக்கிறனர். அத்துடன் விக்கினேஸ்வரனுக்கு கூட்டமைப்பில் எந்தவொரு இடமும் இல்லையென்றும் கூறாமல் கூறப்பட்டிருக்கிறது.

கூட்டமைப்பின் அண்மைக்கால அனுகுமுறைகளை நோக்கினால், அரசியல் தீர்வு விவகாரத்தை முற்றிலும் கைவிட்டுச் செல்வது போன்ற ஒரு தோற்றமே தெரிகிறது. இத்தனைக்கும் கடந்த காலங்களில் அபிவிருத்தி வேலைவாய்ப்பு தொடர்பில் பேசியவர்களிடம் அரசியல் தீர்வுதான் முக்கியம் அதன் பின்னர்தான் மற்றைய விடயங்கள் என்று கூறிவந்த சம்பந்தன் தற்போது தனது நிலைப்பாட்டில் ஏன் குற்றிக்கரணம் அடிக்கின்றார்? அரசியல் தீர்வு என்னும் விடயம் புஸ்வானமாகிவிட்டதா? அவ்வாறாயின் இவ்வளவு காலமும் அரசியல் தீர்வு தொடர்பில் கூறிவந்த விடயங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றுவதற்காக போட்ட நாடகமா?

இந்த விடயம் தொடர்பில் நாம் விவாதிக்கின்ற போது, திருகோணமலை தமிழரசு கட்சி அலுவலகத்தில் சிற்றூழியர்களுக்கான விண்ணப்பங்கள் வாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விடயத்தை ஆராய்ந்து பார்த்தால் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினவிடம் கெஞ்சி மன்றாடி, 150 பேருக்கு சிற்றூழியர் வேலைகளை வாங்கியிருக்கின்றனராம்! ஆனால் இதே சம்பந்தனிடம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு தொடர்பில் பேசச் சென்றபோது, உங்களுக்கு வேலைவாங்கித் தருவது எனது வேலையல்ல என்று கூறியவர்தான் சம்பந்தன். அதே போன்று கிளிநொச்சியில் நடந்த கூட்டமொன்றில் வேலைவாய்ப்பு தொடர்பில் எவரோ கேள்வி எழுப்பிய போது, தான் கேட்டால் ஜனாதிபதி ஆயிரம் வேலைவாய்ப்பும் தருவார் ஆனால் அவ்வாறு கேட்டால் உரிமை பாதிக்கப்படும் என்றவர். அப்படியாயின் இப்போது உரிமைக்கு என்ன நடந்தது? தேசிய இனப்பிரச்சினைக்கு முழுக்குப் போடப்பட்டுவிட்டதா?

சம்பந்தன் இவ்வாறு என்றால், சிறிதரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களோ இன்னும் ஒரு படிமேல் சென்று தங்களை விடுதலைப்புலிகளின் வாரிசுகள் போன்று காண்பித்துக் கொண்டனர். விடுதலைப் புலிகளின் தலைவருக்கு பாராளுமன்றத்தில் பிறந்தநாள் கொண்டாடி தனது விசுவாசத்தை காண்பித்தார். இப்போதோ ஜனாதிபதி செயலணியில் இனப்படுகொலை புரிந்ததாகச் சொல்லப்படும் இராணுவத்தினருடன் கூடிக் குலவி அபிவிருத்தி பற்றி பேசப்போகிறராராம். ஜனாதிபதி செயலணியில் இணைந்ததன் மூலம் இவர்களது உண்மை முகம் அம்பலமாகிவிட்டது. இவர்கள் இதுவரை போட்டுவந்த முகத்திரையும் கிழிந்துவிட்டது.

தமிழரசு கட்சியால் வழிநடத்தப்படும் கூட்டமைப்பு அதன் தலைமைத்துவ தகுதியை மெது மெதுவாக இழந்துவருகிறது. முற்றிலும் அரசாங்கத்தின் பிடிக்குள் சிக்கிவிட்டது. சம்பந்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் வகித்துவரும் பதவிகளை காண்பித்தே அரசாங்கம் கூட்டமைப்பை எடுப்பார் கைப்பிள்ளையாக வைத்திருக்கிறது. இந்த விடயத்தில் ரணிலும் மைத்திரியும் மிகவும் கச்சிதமாகவே காய்களை நகர்த்துகின்றனர். கூட்டமைப்பிலுள்ளவர்களின் பதவி ஆசையே தற்போது அரசாங்கத்தின் துருப்புச் சீட்டாக இருக்கிறது.

அரசாங்கத்தின் உண்மையான இலக்கு வேறு. அதாவது, வடக்குகிழக்கில் தமிழ் தேசிய அரசியலை இல்லாமல் செய்வதுதான் அவர்களது இலக்கு. இல்லாமல் செய்வது என்பதிலும் ஒரு நுட்பம் உண்டு. தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரிலேயே தமிழரசு கட்சியும் அதன் கூட்டாளிகளும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான பின்னணியில், தேசியத்தை பெயரில் வைத்திருக்கும் ஒரு பிரதான தமிழ் கட்சியான கூட்டமைப்பை தாங்கள் நினைத்தது போன்று மாற்றியமைத்துவிட்டால் பின்னர் மக்கள் அதற்கு பழக்கமாகிவிடுவார்கள் என்பதே அரச மூளையின் கணக்கு. இதன் மூலம் தமிழ் தேசிய அரசியலை வெறும் அபிவிருத்திசார் அரசியலாக மாற்றிவிடலாம் என்பதே சிங்கள ஆளும் வர்க்கத்தின் திட்டம். கூட்டமைப்பு, சம்பந்தன் தலைமையில் இருக்கின்ற போதே இதனைச் செய்துவிட வேண்டும் என்பதிலும் சிங்களம் தெளிவாக இருக்கிறது.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் விக்கினேஸ்வரனின் வேண்டுகோளை சம்பந்தன் உதாசீனம் செய்திருக்கிறார். இதன் மூலம் விக்கினேஸ்வரன் கூட்டமைப்புக்குள் எந்தவொரு செல்வாக்கையும் ஏற்படுத்த முடியாது என்றும் சம்பந்தன் தெளிவாக உணர்த்தியிருக்கிறார். விக்கினேஸ்வரன் தாங்கள் சொல்வதை கேட்க வேண்டுமே தவிர தங்களுக்கு அறிவுரை வழங்க முற்படக் கூடாது என்றும் சம்பந்தன் உணர்த்தியிருக்கிறார். இனி விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். விக்கினேஸ்வரன் அனுப்பிய கடிதத்தை நிராகரித்தன் மூலம் இனி விக்கினேஸ்வரன் முன்வைக்கும் எந்தவொரு விடயத்தையும் கூட்டமைப்பு பரிசீலிக்கப்போவதில்லை என்பதும் தற்போது தெளிவாகியிருக்கிறது.

விக்கினேஸ்வரன் – சம்பந்தன் சந்திப்பு இடம்பெற வேண்டும் என்றெல்லாம் சம்பந்தனுக்கு நெருக்கமான சிலர் கூறிவரும் வேளையில்தான், விக்கினேஸ்வரனின் பரிந்துரையை சம்பந்தன் நிராகரித்திருக்கின்றார். உண்மையில் விக்கியின் கருத்து சரியானது. அதனைத்தான் இதுவரை சம்பந்தனும் கூறிவந்திருக்கிறார். ஆனால் தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செல்லும் முடிவை எடுத்திருக்கிறார். உண்மையில் நாடாளுமன்ற குழுவில் ஆராய்ந்து முடிவெடுத்தல் என்று ஒன்றுமில்லை. தான் எடுத்த முடிவை தனது பொம்மை நாடாளுமன்ற குழுவின் ஊடாக வெளியிட்டிருக்கும் வேலையை மட்டுமே தற்போது சம்பந்தன் செய்திருக்கிறார். இதன் மூலம் இனி விக்கிக்கு கூட்டமைப்பில் எந்தவொரு மரியாதையான இடமும் இல்லை என்பதையும் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். இதிலிருந்து எதைக் கற்றுக் கொள்ளப்போகிறார் விக்கி?

சமஸ்டி, வடக்கு கிழக்கு இணைப்பு, போர்குற்ற விசாரணை, மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டு என்பதெல்லாம் போய் அரசாங்கத்தின் நிகழ்சிநிரலுக்கு பின்னால் இழுபட்டுச் செல்லும் கூட்டமைப்புடன் விக்கினேஸ்வரனும் இழுபட்டுச் செல்லப் போகின்றாரா அல்லது அவரை நம்பும் மக்களுக்கு ஒரு தெளிவான செய்தியை சொல்லப் போகின்றாரா என்பதுதான் இன்றை கேள்வியாக இருக்கிறது. நல்லூர் கந்தனின் கொடியிறக்கம் இவ்வாரம் இடம்பெறும். அதனோடு சேர்ந்து ஒரு புதிய தலைமைக்கான செய்தியும் மக்களுக்கு கிடைக்குமா? பலரும் விக்கியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *