Search
Thursday 16 August 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பும் சமூகக் பொறுப்பும்

வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பும் சமூகக் பொறுப்பும்

நரேன்-

தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணாமம் பெற்ற காலப்பகுதியில் சட்டம், ஓழுங்கு முதல் சிவில் நிர்வாகம் வரை ஆயுதப் போராட்ட அமைப்புகளினாலேயே பெருமளவில் கையளாப்பட்டன. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு குற்றவாளிகள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட்டனர். இதன்காரணமாக குடும்ப அங்கத்தவர்கள் தமது கௌரவத்தை இழந்து தலைகுனியும் நிலையும் ஏற்பட்டிருந்தது. இதனால் குடும்பத்திற்குள் இருந்தும் சமுதாயத்தின் மத்தியில் இருந்தும் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்பட்டது. வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, விரும்பியோ அல்லது விருப்பமின்றியோ ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டிய நிலையில் இருந்தனர். போராளிகள் மத்தியிலும் போதைவஸ்து பாவனை என்பது மிக குறைந்த அளவிலேயே இருந்தது. அல்லது இல்லை என்று சொல்லுமளவே இருந்தது. இதன்காரணமாக வடக்கு, கிழக்கில் அதன் பாவனையும், அதன் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் போராட்டகாரார்கள் வசமிருந்த அனைத்து விடயங்களும், தமிழ் மக்களுக்கு முழுவதும் பரீட்சயமில்லாத அவர்களுடன் எதுவித சமூக உறவும் அற்ற இராணுவம் மற்றும் பொலிசாரின் கைகளுக்கு சென்றது. புரட்சி நடைபெற்ற நாடுகளில் உள்ள அரசு வெற்றி கொண்ட பகுதிகளில் போதைப் பொருள் பாவனைகளும், பாலியல் விவகாரங்களும் தாராளமாக கட்டவிழ்த்து விடப்படும். இதன் மூலம் அரசு இரண்டு விதமான பலன்களை அடையும். முதலாவதாக, இளைஞர்கள் மத்தியில் புரட்சிகர எண்ணங்களோ அல்லது சமூக உணர்வுகளோ இல்லாமல் செய்யப்படும். இரண்டாவதாக இத்தகைய பாவனைகள் அதிகரித்து இருப்பதாக கூறி இளைஞர்களை கைது செய்து தனது பிடிக்குள் வைத்து அச்சுறுத்தலான சூழ் நிலையில் அந்த சமூகத்தை வைத்திருத்தல்.

தமிழ் மக்களுடைய தேசிய இன விடுதலைப் போராட்டம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமாக சித்தரிக்கப்பட்டு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் அந்த ஆயுதப்போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கிலும் இன்று அதே நிலை உருவதகியுள்ளதை காண முடிகிறது. காமுகர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் மத்தியில் இதற்கு முன்னர் இத்தகைய வன்ம உணர்ச்சிகள் இல்லாமல் இருந்ததா..? எனற கேள்வி இங்கு இயல்பாகவே எழுகிறது. உணர்ச்சிக்கு முதலிடமா அல்லது உயிருக்கு முதலிடமா என்று வருகின்ற போது அத்தகைய செயல்கள் தடுக்கப்பட்டன.

மேற்சொன்ன இரண்டு விடயங்களிகன் காரணமாக வடக்கு, கிழக்கில் யுத்தத்திற்கு பின்னர் இந்தப் பிரச்சனைகள் அதிகரித்து இருப்பதும் உண்மையே. அதன் ஒரு வெளிப்பாடாகவே இளந்தளிர் வித்தியாவின் மரணத்தை நாம் நோக்க வேண்டியுள்ளது.

வித்தியா யார்…?

சிவலோகநாதன் – சரஸ்வதி தம்பதியினரும் இளைய மகள் வித்தியா. யாழ் புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயின்று வந்தவள். கல்வியைத் தவிர வேறு எதிலும் நாட்டம் இன்றி இருந்தவள். தான் உண்டு, தனது வீடு உண்டு, தனது பாடசாலை உண்டு, கல்வி உண்டு என இருந்ததுடன், ஊடகத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதனை ஒரு பாடமாக படித்தும் வந்தாள். தினமும் காலையில் தனது துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு செல்வது போலவே, கடந்த 2015 மே 13 ஆம் திகதியும் பாடசாலைக்கு பலத்த கனவுகளுடன், குதுகலமாக சென்றாள். தனது பாச மகளை வழி அனுப்பி வைத்த தாயார் மாலை 3 மணி ஆகியும் தனது மகள் வீடு வந்து சேராமையால் என்னாச்சசோ, ஏதாச்சோ என பதறி அடித்து தனது மகனை பாடசாலைக்கு சென்று தங்கச்சிக்கு என்னாச்சு என பார்த்து வரும்படி அனுப்பி வைத்தார். அன்றைய தினம் வித்தியா பாடசாலைக்கு வரவில்லை என பாடசாலையில் தெரிவித்தையடுத்து, அதிர்ச்சியில் உறைந்த குடும்பம் அவளை தேட ஆரம்பித்தது.

மறுநாள் காலை ஆலடி பகுதிக்கு அண்மையில் பாழடைந்த வீடு ஒன்று அமைந்திருந்த பகுதியில் உள்ள ஒரு புதரில் வித்தியா என்ற இளம்மொட்டு காமுகர்களால் அலங்கோலப்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் இலங்கைத்தீவு முழுவதிலும் பெரிய அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஒட்டுமொத்த சமூகமும் வித்தியாவிற்கு நீதி வேண்டி போராட்டங்களிலும், பணிப்புறக்கணிப்புக்களிலும் ஈடுபட்டன. குறிப்பாக மாணவர்கள் மத்தியிலும், கல்வி சமூகம் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் சுவிஸ் குமார் என் அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் தொடர்பில் 41 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்றன. இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக பொலிஸ் தரப்பு உள்ளிட்ட அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பிகளிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பில் ஜூரி சபை அல்லாத மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணை செய்வதற்கு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார். இதன் விளைவாக 23 ஆம் திகதி மே மாதம் வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், யாழ். மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழாம் ஒன்றை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் நியமித்தார். அதன் தொடர் விசாரணைகளின் பின்னர் கடந்த புதன் கிழமை ட்ரயல் அட்பார் தீர்பாயத்தில் தண்டனைக் குற்றம் அறிவிக்கப்பட்டது.

வித்தியா மரணித்து 897 நாட்களுக்கு பின்னர் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. சுவிஸ்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு மரணதண்டனையும், 30 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொருவரும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வித்தியாவின் குடும்பத்திற்கு நஸ்ட ஈடாக வழங்கவேண்டும் வேண்டும் எனவும் தீர்பளிக்கப்பட்டுள்ளதுடன், இருவருக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்படாத நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாக 345 பக்கங்களைக் கொண்ட அந்த தீர்ப்பு நீண்டு செல்கிறது.

இந்தக் குற்றம் வெறுமனே பாலியல் வன்புனர்வுக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா…?, காமவெறி மட்டுமே இதற்கு பின்னனியாக அமைந்திருந்ததா…?, மது போதை தான் இந்த காம வெறியை சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஏற்படுத்தியா….? என்று பல கேள்விகள் எழுகிறது. ஒரு கூட்டு வன்புணர்வு நிகழ்வை வங்குரோத்து தனமாக நிகழ்த்தி அதனை உலகம் முழுவதும் உள்ள காமவெறி பிடித்த கழுகுகள் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் மது வெறியையும், காமவெறியுடன் இணைத்து அதனை படமெடுத்து சர்வதேச சந்தையில் விற்று அதில் வயிறு வளர்க்கும் ஒரு வன்மமான வியாபார நோக்கத்தை அது கொண்டிருப்பது விசாரணையின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கொடூர செயலுக்கு வித்தியாவின் மீது ஒருவர் கொண்டிருந்த ஒரு தலைக் காதலும் அதற்கு எதிர் வினையாக வித்தியா செயற்பட்டு இருந்ததும் ஒரு காரணியாக அமைகிறது. காதலில் தோல்வியுற்றவனின் பழி தீர்க்கும் படலத்திற்கு அவரது நண்பர்கள் துணை போயிருக்கிறார்கள். இந்த நண்பர்கள் சுவிஸ் குமார் என்று சொல்லக் கூடிய நீலப்பட மாபியா கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர். ஆக, மானிட சமூகமே வெட்கித் தலைகுனியக் கூடிய தொழிலைப் புரிகின்ற மாபியாக்கும்பலின் நோக்கத்திற்கு தேசிய உணர்வு மழுங்கடிக்கப்பட்ட இளைஞர்களின் துணையுடன் வித்தியா என்ற மொட்டு சிதைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவருடைய பலவீனங்களும், இந்த சிதைவிற்காக பயன்படுத்தாப்பட்டிருக்கிறது.

ஒரு சீரான நிர்வாக நடைமுறையும், மக்களோடு இணைந்து அந்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் கூடிய காவல்துறையின் அவசியத்தையும் இந்தச் சம்பவம் எடுத்தியம்பியிருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் சமூக அக்கறையையும், எதிர்கால நம்பிக்கையையும், கல்வியின் மீது நாட்டத்தையும் ஏற்படுத்தி போட்டி மிகுந்த உலகத்தில் அதை எதிர் கொள்வதற்கு தேவையான வளங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையையும் விதைத்து நிற்கிறது. அனைத்து மக்களும் தாம் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்று உணர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

வித்தியா கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டாலும், இந்த தீர்ப்பு என்பது எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கு வழிகோலுமா என்பது ஒருபுறமிருக்க, ஒரு தேசிய இன விடுதலைக்காகவும், அடிப்படை மனிதவுரிமைகளுக்காகவும் போராடிய ஒரு சமூகம் அந்த உணர்வுடன் தொடர்ந்தும் இருந்து ஒரு சுய ஒழுக்கத்தை பேணுவதன் மூலமே இத்தகைய குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும். இளைஞர்கள் அனைவரும் தாம் அடைய வேண்டிஎய மைல்கல்லை நினைவில் கொண்டு தான் சாதிக்க வேண்டியவை இன்னமும் ஏராளமாக இருக்கிறது என்பதை கருத்தில் எடுத்து செயற்பட வேண்டியது இத் தருணத்தில் அவசியமும், அவசரமும் ஆகும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *