தலைப்பு செய்திகள்

விழிப்படைந்த தமிழரசுக் கட்சியும் மாற்று தலைமை பற்றிய பேச்சும்

விழிப்படைந்த தமிழரசுக் கட்சியும் மாற்று தலைமை பற்றிய பேச்சும்

ருத்திரன்-

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்களது உரிமைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களது அபிலாசைகள் தேர்தல் நோக்கிய அரசியலில் தங்கியிருக்கின்றது. கடந்த எட்டரை ஆண்டுகளாக தேர்தல் அரசியலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களது ஆணை பெற்ற கட்சியாக செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் அண்மைக்காலமாக மாற்றுத் தலைமை, புதிய தலைமை என்கின்ற கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன். ஆனால் அவை சாத்தியமா…?, அதற்கேற்ற நகர்வுகள் மக்கள் நம்பும் படியாக நடக்கின்றதா என்ற கேள்விகள் மீண்டும் மக்கள் மத்தியில் எழத்தொடங்கியிருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் செயற்பாடுகள் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியிருக்கின்றது. நிபந்தனையற்ற வகையில் ஆட்சி மாற்றத்திற்காக குரல் கொடுத்த கூட்டமைப்பு தலைமை தமிழ் மக்களின் வாக்குகளையும் மைத்திரி – ரணில் அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு பெற்றுக் கொடுத்திருந்தது. இதன் பிரதிபலனாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாகவும் இடம்பிடித்தது. எதிர்கட்சி வரிசையில் கூட்டமைப்பு செயற்படுகின்ற போதும் அது அரசாங்கத்துடன் இணங்க அரசியலே செய்து வருகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னரான கடந்த இரண்டரை ஆண்டுகளில் சர்வதேச ரீதியில் இருந்த அழுத்தங்களை சமாளித்து இலங்கை அரசாங்கம் மேற்குலகத்தின் ஆதரவுகளையும் பெற்றிருக்கின்றது.

இறுதி யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை கடந்த மஹிந்த அரசாங்கம் கடுமையாக எதிர்த்து வந்தது. இதனால் மேற்குலகத்தின் கடும் விமர்சனங்களுக்குரிய நாடாகவும் இலங்கை மாறியிருந்தது. அதுவே மஹிந்த வீட்டுக்கு போகவும் காரணமாக அமைந்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னப் இந்த நிலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஐ.நா மனிதவுரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கமும் இணை அணுசரனை வழங்கியிருந்தது. இந்த ஆண்டின் முற்பகுதியில் நடைபெற்ற ஐ.நா மனிதவுரிமை பேரவையின் கூட்டத்தில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் அரற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்கியிருந்தது. சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்திற்கு இருந்த அழுத்தங்களை தணிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றது. இந்த நிலை தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு விமனர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட தமது காணிகள் விடுவிக்கப்படும் எனவும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கிடைக்கும் எனவும், தமது வாழ்வாதார பிரதேசங்கள் விடுவிக்கப்படும் எனவும், அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும் எனவும் தமிழ் மக்கள் நம்பியிருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமது இப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு தாம் வாக்களித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் அழுத்தம் கொடுத்து காத்திரமாக நடவடிக்கை எடுப்பார்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் நம்பியிருந்தனர். ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சியாக தாமே நீதிக்காகவும், உரிமைக்காகவும் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் முக்கால் ஆண்டைக் கடந்து ஒரு வருடைத்தை நோக்கி நகர்கிறது. ஆனால் அதற்கான தீர்வு என்பது இது வரை கானல் நீராகவே உள்ளது.

மக்களது தேவைகளை தீர்ப்பதற்கு அவர்களது தலைமைகள் தவறியிருந்ததுடன், அவர்களது தன்னெழுச்சியான போராட்டங்களை வழிப்படுத்தி தலைமை தாங்கி முன்னெடுக்கவும் தவறியிருக்கின்றது. இதனால் தற்போதைய தலைமைகள் மற்றும் தாம் வாக்களித்த பிரதிநிதிகள் மீது மக்களின் கோபம் திரும்பியிருக்கின்றது. இந்த நிலையே மாற்றுத் தலைமை, புதிய தலைமை பற்றிய சிந்தனையை மக்களிடத்திலும், சமூக அமைப்புக்கள் மட்டத்திலும், பொது அமைப்புக்கள் மட்டத்திலும் உருவாக்கியது.

அத்துடன், புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையிலும் தமிழ் மக்களது அபிலாசைகள் குறித்து கரிசனை செலுத்தப்படவில்லை. பௌத்தத்துக்கு முதலிடம் கொடுக்கவும், ஒற்றையாட்சியின் கீழ் பேரினவாதத்துக்கு தொடர்ந்து இடமளிக்கவும், வடக்கு – கிழக்கை இணைக்காது விடவும், தாயகத்தில் தன்னாட்சி கோரிக்கைகளை கைவிடவும், வலிந்து தயாரித்த தேர்தல் விஞ்ஞாபனங்களின் உள்ளடக்கத்தை தான்தோன்றித்தனமாக கைவிட தமிழ்த் தலைவர்கள் முன்வந்தமையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை மீது அதிருப்தி ஏற்படவும், பிளவு ஏற்படவும் வழிவகுத்திருக்கிறது.

மாற்றுத் தலைமை பற்றிய சிந்தனையை சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியும் (ஈபிஆர்எல்எப்) தீவிரமாக முன்வைத்து வைத்தார்கள். தற்போது சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ளது. 2010 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கஜேந்திரகுமார் அணியுடன் அது இணைந்திருக்கின்றது. இவ்விரு கூட்டுக்களும் இணைந்து அடுத்த தேர்தலை எதிர் கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தன. அதனடிப்படையில் இரு கட்சிக்கும் இடையில் பேச்சுக்களும் நடைபெற்றிருக்கின்றன. இவர்களுடன் தமிழரசுக் கட்சி அதிருப்தியாளர்கள் அணியும் அதாவது பேராசிரியர் சிற்றம்பலம், வடக்கு அமைச்சர் அனந்தி சசிதரன், சிவில் சமூக செயற்பாட்டளர் சிவகரன் போன்றோரை உள்ளடக்கிய அணியும் இணையும் என பேசப்பட்டு வருகின்றது. அதற்கான பேச்சுக்களும் நடைபெற்றிருக்கின்றன.

மாற்றுத் தலைமை பற்றிய பேச்சுக்களும், கருத்துக்களும் முன்வைக்கப்பட்ட வேகதற்திற்கு புதிய அணி உருவாக்க வேலைகள் இடம்பெறவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னனியும், ஈபிஆர்எல்எப் கட்சியும் இணைந்து உள்ளூராட்சி தேர்தலை எதிர் கொள்ளப்போவதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த போதும், அதற்கான வேலைகள் முழுமை பெறவில்லை. புதிய அணியின் சின்னமாக எதனை முன்னிறுத்துவது என்பது தொடர்பில் இரு கட்சிக்கும் இடையில் இழுபறி நிலை நீடிக்கிறது. புதிய கூட்டுக்கு வடக்கு முதலமைச்சர் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் உடனடியான அதனை ஏற்பதற்கு தயார் இல்லாத நிலையே உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை தான் உடைத்ததாக இருக்கக் கூடாது என்பதில் வடக்கு முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. மாற்று அணி உருவாகி அது மக்கள் ஆதவைப் பெறும் நிலையில் அந்த அமைப்புக்குள் அவர் செல்லக் கூடிய நிலையே உள்ளது. இந்த நிலையில் புதிய அணியை பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. அவ்வாறு உருவாகும் புதிய கூட்டுக்குள் யார், யார் வரப்போகின்றார்கள் என்ற கேள்வியும் உள்ளது.

ஈபிஆர்எல்எப் வெளியேறி புதிய கூட்டு உருவாக்க நடவடிக்கை நடைபெற்று வரும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை குறிப்பாக தமிழரசுக் கட்சி சுதாகரித்துக் கொண்டு மீண்டும் மக்கள் ஆதரவைத் திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இழந்த செல்வாக்கை மீள நிலைநிறுத்தும் வகையில் முன்னெப்போதும் இல்லாதவகையில் தேசியம் பற்றிய பேச்சுக்கள் மக்கள் முன் தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. மாவீரர் நாள் நிகழ்வில் கூட தமிரசுக் கட்சி தீவிர செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்றது. மக்களை ஆசுவாசப்படுத்தி உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வதன் மூலம் மீண்டும் மக்கள் ஆணை தமக்கே கிடைத்தது என்ற அடிப்படையில் தற்போது அரசுடன் இணைந்து முன்னெடுக்கும் புதிய அரசியலமைப்பு விடயத்தை முன்னெடுக்க அது முயல்கிறது.

ஆனால், மாற்று அணி தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்து வருபவர்கள் தமது கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு தவயிருக்கின்றனர். அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்களே தவிர, சமூகத்தின் கீழ் மட்ட மக்கள் மத்தியில் மாற்று அணியின் தேவை குறித்து தெளிவுபடுத்தவில்லை. மாற்று அணியின் நீடிப்புக்கு கீழ் மட்ட மக்களின் பங்கு அவசியம் என்பதை அந்த தலைமைகள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. இதுவே தொடர்ந்தும் தமிழரசுக் கட்சிக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது.

N5


2 thoughts on “விழிப்படைந்த தமிழரசுக் கட்சியும் மாற்று தலைமை பற்றிய பேச்சும்

  1. கிருவை

    சின்னம் முக்கியம்தான். ஆனால் கொள்கை நோக்கம் தான் முக்கியம். இந்தியப்படை நேரத்தில் நடந்த தேர்தலில் உதயசூரியனைத் EROS தோற்கடிக்கவில்லையா? தென் இலங்கையில் கைக்குப் பதிலாக கதிரை. பல உண்டு உதாரணங்கள்..

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *