Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வெளியார் தொடர்பான அச்சம்?

வெளியார் தொடர்பான அச்சம்?

யதீந்திரா
இலங்கைத் தீவில் இடம்பெறும் எல்லாவற்றையும் வெளித்தரப்புக்களுடன் தொடர்புபடுத்தி சிந்திக்கும் ஒரு போக்கு நீண்டகாலமாகவே இருந்துவருகிறது. இந்த விடயத்தில், புத்திஜீவிகளாக தங்களை காண்பித்துக் கொள்பவர்களுக்கும் சாதாரண பொது மக்களுக்கும் இடையில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெரிய வேறுபாடுகள் இருப்பதில்லை. புத்திஜீவிகள் தங்களின் மொழியிலும் சாதாரண மக்கள் தங்களின் மொழியிலும் இதனை பேசிக் கொள்கின்றனர். இதில் தமிழர் தரப்பு சிங்களத் தரப்பு என்னும் பாகுபாடுகளும் பெரியளவில் இல்லை. இரண்டு தரப்பினர்களிடமும் இந்த வகையான புரிதல் அதிகமாகவே காணப்படுகிறது. தமிழ்ச் சூழலில் எல்லாவற்றையும் அதிகம் இந்தியாவுடன் தொடர்புபடுத்தி நோக்கும், விவாதிக்கும் ஒரு போக்கு காணப்படுகிறது. அதே போன்று சிங்கள தரப்புக்களை பொறுத்தவரையில், எல்லாவற்றையும் அதிகம் அமெரிக்காவுடன் தொடர்புபடுத்தி சிந்திக்கும் ஒரு போக்கு காணப்படுகிறது. ஆனால் இவ்வாறான வாதங்களை முன்வைப்பவர்கள் எவருமே அதற்கான வலுவான ஆதாரங்களை முன்வைப்பதில்லை. பெருமளவிற்கு விடயங்கள் அனைத்தும் அனுமானங்களாகவும் கற்பனைகளாகவுமே இருக்கின்றன. அரசியல் வாதிகளை பொறுத்தவரையில் தங்களை நோக்கி மக்களை திருப்பும் ஒரு உக்கிதியாகவே இவற்றை பயன்படுத்துகின்றனர்.

கடந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை, சிலர் உடனடியாகவே அமெரிக்காவுடன் தொடர்புபடுத்தி எழுத முற்பட்டனர். இதிலுள்ள சுவார்சயமான விடயம் என்னவென்றால், கொழும்பு டெலிகிராப்பில் பிரசுரமான லத்திப் பாருக்கின் கட்டுரை ஒன்றில், இந்தத் தாக்குதலை இந்திய உளவுத்துறையுடன் தொடர்புபடுத்த முற்பட்டிருந்தார். அதற்காக அவர் முன்வைத்த வாதம் நகைச்சுவைக்குரிய ஒன்று.

தற்கொலையாளிகள், கிங்ஸ்பெரி, சங்கரிலா மற்றும் சினமன் ஆகிய உல்லாசவிடுதிகளை இலக்கு வைத்திருக்கின்றனர் ஆனால், தாஜ்சமுத்திராவை இலக்கு வைக்கவில்லை – ஏன்? கட்டுரையாளர் இந்தத் தாக்குதலை இந்திய உளவுத்துறையுடன் எப்படியாவது தொடர்புடுத்த வேண்டும் என்பதற்காக முடிந்தவரை முயற்சித்திருந்தார். ஆனால் பின்னர் வெளியான செய்திகள் மேற்படி வாதத்தை ஒன்றுமில்லாமலாக்கியது. ஏனெனில், ஒரு தற்கொலையாளி தாஜ்சமுத்திரா உல்லாச விடுதிக்குள்ளும் சென்றிருக்கிறான். எனினும் குண்டை வெடிக்க வைக்க முற்பட்ட போதும், அது வெடிக்காத காரணத்தினால், அங்கிருந்து வெளியேறியிருந்தான். அந்த நபரே பின்னர் தற்கொலை அங்கியை கழற்ற முற்பட்ட போது, தெகிவளை விடுதியொன்றில் கொல்லப்பட்டான். ஒரு வேளை தாக்குதலாளி தாஜ்சமுத்திராவிற்குள் நுழைந்த செய்தி வெளிவராமல் இருந்திருந்தால், மேற்குறிப்பிட்டவாறான கட்டுரையாளர்கள் தங்கள் எழுத்துக்களை சரியென்று நிறுவ முற்பட்டிருப்பர். இந்தத் தாக்குதல் இடம்பெற்றதும் முஸ்லிம் புத்திஜீவக்ள பலரும் அதிலிருந்து தப்புவதற்கான வாதங்களையே தேடினர். ஆனால் தாக்குதலுக்கு ‘இஸ்லாமிய அரசு உரிமை கோரியதன் பின்னர் வாயடைத்துப் போயினர். அதன் பின்னர்தான் இதற்கு பின்னால் அமெரிக்கா (CIA) மொசாட் இருப்பதான கதைகள் உலவத் தொடங்கின. இஸ்லாமிய அரசின் தலைவராக இருக்கும் அபூபக்கர் அல் பக்டாடி ஒரு இஸ்லாமியன் அல்ல. அவர் ஒரு யூதர் போன்ற கதைகள் எல்லாம் எட்டிப்பார்க்கத் தொடங்கின.

On Tuesday, a video released by ISIS showed 8 men purported to be the Sri Lankan attackers pledging allegiance to the terror group. All of the men have their hands placed together and are masked, except one. That man, identified as Zahran Hashim, is ???leading them,??? reads the caption by ISIS??? Amaq news agency. Approved for use Rich Phillips on the row and Jim Crane in Standards

ஜ.எஸ்.எஸ் தொடர்பாக ஒரு கதையுண்டு. இஸ்லாமியர்களும் இடதுசாரிகளுமே இந்தக் கதையை அதிகம் நம்புகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, அந்த விவாதமும் இங்கு எட்டிப்பார்த்தது. இது ஒரு அமெரிக்க சதி என்பதை நிரூபிக்கும் வகையில் சில கட்டுரைகளும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. அண்மைக்காலமாக அமெரிக்கா திருகோணலையில் படைத்தளம் ஒன்றை நிறுவ முயற்சிப்பதாக ஒரு செய்தி உலவியது. இவ்வாறானதொரு சூழலில்தான் மேற்படி தாக்குதல்களும் இடம்பெற்றிருக்கிறது. இதனை சில கட்டுரையாளர்கள் தங்களின் வாதங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டனர். இதற்கும் தங்களுக்கும் ஒரு தொடர்புமில்லை என்பதை காண்பிப்பதற்கான வாய்ப்புக்களை தேடிக் கொண்டிருந்த சில முஸ்லிம் புத்திஜீவிகள் யூலியன் ஆஞ்சேயின் நேர்காணலை முகநூல்களில் பரவினர். ஒரு விடயத்திலிருந்து உடனடியாக தப்பியோடுவதற்கு மிகச் சிறந்த ஒரு தெரிவாகவே இவ்வாறான சதிக்கோட்பாடுகளை பலரும் பன்படுத்துகின்றனர். உலகில் நடைபெறும் அனைத்தையும் அமெரிக்காவுடன் தொடர்படுத்துவதானது, உண்மையில் சொந்தப் பிரச்சினைகளிலிருந்து தப்பியோடும் மனோபாவத்தின் வெளிப்பாடாகும். பிரச்சினைகளை எதிர்கொள்ளவோ, அவற்றுக்கான தீர்வை காண்பதற்கோ இந்த வகைப் புரிதல் ஒரு போதுமே பயன்படாது.

இந்தியாவை எதிரியாக காட்டுதல் – அமெரிக்காவை எதிரியாக காட்டுதல் என்பது மிகவும் இலகுவான அரசியல் புரிதல். ஆனால் இவ்வாறான எதிரிநிலை புரிதல்களால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிட்டப்போவதில்லை. மேலும் இது பிரச்சினைகளின் அடிப்படைகளை கண்டுகொள்ளவும் உதவாது. ஆனால் இந்த இலகுவான அரசியல் புரிதலின் வழியாக விடயங்களை அணுக முற்படுபவர்கள் எவருமே விடயங்களை விளங்கிக்கொள்ளாமல் பேசுபவர்கள் அல்ல. தாங்கள் சொல்லுவது பொய் என்று தெரிந்தே அதனை கூறுகின்றனர். தமிழ்ச் சூழலை எடுத்து நோக்கினால் தங்களின் அரசியல் எதிரிகளை எதிர்கொள்ள முடியாமல் போகும் போது, மற்றவர்களை இந்தியாவுடன் தொடர்புபடுத்தும் போக்கொன்று சாதாரணமான ஒன்றாகவே இருக்கிறது. யாழ்ப்பாணத்து அரசியல் உரையாடல்களில் இது மிகவும் சாதாரணமான ஒன்று. சிலரின் குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் யாழ்ப்பாணத்தில் இயங்கும் அரசியல் வாதிகள் அனைவருமே ஏதோவொரு உளவுத்துறையின் முகவர்கள்தான். ஆனால் இந்த இடத்தில் தமிழ் சிந்திக்கும் தரப்பினர் தங்களுக்குள் ஒரு கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும் – இவ்வாறான அரசியல் அணுகுமுறைகளால் எதையாவது சாதிக்க முடியுமா? எவராவது, எதனையாவது இதுவரை சாத்திருக்கின்றனரா?

ஓன்றை அனைவரும் விளங்கிக்கொள்வது முக்கியம். அதாவது, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய உலக வல்லரசுகள் அனைத்தும் தங்களின் நலன்களை முன்னிறுத்தித்தான் இலங்கையில் செயற்படுகின்றனர் என்பதுதான் உண்மை. இதில் ஆச்சரியப்பட, தடுமாற ஒன்றுமில்லை. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள் முழுவதும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. இது தொடர்பில் பலவாறான விவாதங்களும் உண்டு. ஆனால் எவ்வாறான விவாதங்கள் இருந்தாலும், எவ்வாறான விமர்சனங்கள் இருந்தாலும், எவ்வாறான கோரிக்கைகள் இருந்தாலும் அமெரிக்கா, இந்தியா சீனா போன்ற நாடுகள் தங்களின் செயற்பாடுகளை நிறுத்தப் போவதில்லை. அவர்களை எவராலும் மாற்றவும் முடியாது. நிலைமை அவ்வாறிருக்கின்ற போது பலம் பொருந்திய நாடுகளை விமர்சனம் செய்வதன் மூலம் எதனை சாதிக்க முடியும்? எனவே இங்கு விடயங்களை விளங்கிக் கொண்டு எவ்வாறு செயற்படலாம் என்பதுதான் முக்கியமானதே அன்றி, பலம்பொருந்திய நாடுகளை விமர்சனம் செய்து கொண்டிருப்பதால் எதுவும் நிகழப் போவதில்லை.

ISIS

இங்கு பிறிதொரு விடயத்தையும் உற்றுநோக்க வேண்டும். ஒரு நாடு தொடர்பில் தொடர்ச்சியான விமர்சனங்களை செய்கின்றவர்களுக்கு பின்னால் பிறிதொரு நாட்டின் உளவுத்துறை இருப்பதனா குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன. இந்த பின்புலத்தில் பார்த்தால் இப்போது எவரின் பின்னால் எவர் இருக்கிறார் என்பதே ஒரு விடைகாண முடியாத கேள்வி. ஆனால் மக்களை முன்னிறுத்தி சிந்திப்பவர்கள் இவ்வாறான சதிக்கோட்பாடுகளில் நேரத்தை விரயம் செய்யாமல் ஒவ்வொரு சூழலையும் எவ்வாறு மக்களின் நலனில்நின்று கையாளுவது என்றுதான் யோசிக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்தால் வெளித்தரப்புக்கள் தொடர்பான அச்சததை தவிர்த்து, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் சிந்திக்க முடியும். அவ்வாறு சிந்தித்தால்தான் நாம் முன்நோக்கி பயணிக்க முடியும். ஏனெனில் நாம் குற்றச்சாட்;டுக்களை முன்வைக்கும் வெளித்தரப்புக்களின் எந்தவொரு செயற்பாட்டையும் எம்மால் தடுத்துநிறுத்த முடியாது. எனெனில் ஒரு விடயத்தை செய்துமுடிப்பதற்கு பலம்பொருந்திய சக்திகளுக்கு பல வழிகள் உண்டு. அவைகள் சாம தான பேத தண்ட(ம்) வகைகளுக்குள் அடங்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *