Search
Tuesday 17 September 2019
 • :
 • :

வேற்றுமையில் பலம் காணும் சிங்கள ராஜதந்திரமும் ஒற்றுமையை வலியுறுத்தி பலவீனமடையும் தமிழ் தேசியமும்

வேற்றுமையில் பலம் காணும் சிங்கள ராஜதந்திரமும் ஒற்றுமையை வலியுறுத்தி பலவீனமடையும் தமிழ் தேசியமும்

லோ. விஜயநாதன்

தமிழ் தேசியத்தை மெல்ல மெல்ல சிதைத்துவரும் தமிழரசுக்கட்சி வரவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு மீண்டும் தனது வாக்கு வங்கியை நிரப்புவதற்காக தாம் வெளியேற்ற விரும்பிய முதலமைச்சர் விக்கினேஸ்வரனை அவர் வாயினூடாகவே மாற்றுத் தலைமை தேவையில்லை என்று அறிக்கையிடும் சாணக்கிய நகர்வை செய்துள்ளது. இது உண்மையில் தமக்கு சரியான தலைமை கிடைக்காதா என்று ஏங்கி தவித்து நிற்கும் தமிழ் மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

மாற்று தலைமைக்கான கோரிக்கையை ஏற்பதும் அல்லது அதை மதிப்பதும் ஒருவரின் ஜனநாயக பண்பு. ஆனால் அவர் கடந்த 3 வருடங்களாக தன்கண்ணூடே பார்த்துவந்த தமிழ் தலைமைகள் என்று கூறி தமிழ் தேசியத்தின் சிதைவுக்கு வழிவகுத்த தலைமையின் கீழ் ஒன்றுபட்டு செயற்படுவோம் என்று கூறுவது எம்மக்களை ஏமாற்றும் செயற்பாட்டுக்கு முதலமைச்சரும் உடந்தையாக இருந்தார் என்ற பழிச்சொல்லை கேட்பதற்கு வழிவகுக்கலாம். குறைந்த பட்சம் தமிழ்தேசிய கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிந்து சுமந்திரன் மயப்படுத்தப்படாத நிறுவனமயப்பட்ட செயற்பாட்டை வலியுறுத்தி அதன் மூலம் ஒன்றுபட்ட தலைமையின் கீழ் செயல்பட முடியும் என வலியுறுத்தியிருந்தால் அதற்கு தமிழரசு கட்சியும் உடன்பாடு தெரிவிக்கும் பட்சத்தில் ஒன்றுபட்டு செயற்படுதல் என்ற விக்னேஸ்வரனின் கருத்து பெறுமதியானதாக இருந்திருக்கும். ஆனால் தேர்தல் நெருங்கும் இத்தருணத்தில் விக்னேஸ்வரனின் இந்த கூற்று தனது தன்னிச்சையான செயற்பாடுகளால் ஆட்டம் கண்டிருக்கும் தமிழரசுக்கட்சியை காப்பாற்றும் அதன் கபடநோக்கத்திற்கு துணைபோவதாகவே அமைந்துள்ளது. அத்துடன் அவரை ஆதரித்துவரும் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளை நட்டாற்றில் விடும் செயற்பாடாகவும் அமைந்துள்ளது .

அதேவேளை மாற்றுத் தலைமை தற்போதைய சூழலில் அவசியம் என்றுணர்ந்து அதனைநோக்கி செயற்படுகின்ற தமிழ்தேசியவாதிகளினதும் மக்களினதும் செயற்பாட்டை மழுங்கடிக்கும் ஒரு நடவடிக்கையாகவும் இதனை கருதலாம். உண்மையில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இருவலுவான கட்சி அரசியலே தமிழ்மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிய விடயங்களை சிறந்த முறையில் கையாள்வதற்கு பயன்மிக்கதாக அமையும். ஒன்று மற்றொன்றுக்கு கொடுக்கக்கூடிய அழுத்தங்கள் காரணமாக சரியான பாதையை நோக்கி பயணிப்பதற்கு அது உதவும் . தனியே பாராளுமன்ற ஆசனங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி அங்கே உரையாற்றுவதால் தமிழ்மக்களுக்கு எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை.

The Mahanayake Theras

தமிழ்தேசிய கூட்டமைப்பை புலிகள் உருவாக்கியதற்கு காரணம் தம்மீதான உலகநாடுகளின் பிழையான பார்வையை குறைக்க முடியும் என்று கருதியதும் தமது இராணுவ பலத்தை அரசியல் பலமாக மாற்றுவதற்கு உதவும் என்று கருதியமையுமே ஆகும். தமிழ் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் பேரவலத்திலும் இருந்த ஒரேயொரு பலம் சர்வதேச யுத்தகுற்ற விசாரனையினுடான பரிகார நீதியை வலியுறுத்தி அதன் மூலம் அரசியல் ரீதியாக வலுப்பெறுவதாகும். என்ற பலமேயாகும். ஆனால் இன்று தமிழரசுக்கட்சி அந்த வாய்ப்பையும் சிதைத்து தமிழ்தேசியத்தின் அடிப்படைக் கொள்கைகளான இணைந்த வடகிழக்கில் சுயர்நிர்னய அடிப்படையிலான சமஸ்டித்தீர்வையும் கைவிட்டு சிங்கள தேசத்துடன் தமழர்களுக்கான அரசியல் தீர்வு பற்றியே கதைக்கின்றது. ஒற்றை ஆட்சிஒயின் கீழ் இணையாத வடக்கு கிழக்கில் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு அதிகார பொறிமுறையும் ஒரு அரசியல் தீர்வே அல்ல. இது உண்மையில் இலங்கைத் தீவில் சிங்கள மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மேலாதிக்கத்தை மேன்மேலும் மேலோங்கச்செய்வதற்கும் தமிழ் தேசியத்தை அடியோடு அளிப்பதற்குமான சிங்கள தேசியத்துக்கான ஒரு அரசியல் தீர்வே ஆகும்.

எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படும்போது விட்டுக்கொடுப்புக்கள் சகஜமானதுதான். அந்த அடிப்படையிலேயே விடுதலைப்புலிகள் கூட்டாட்சி முறையிலான தீர்வை பரிசீலிக்கலாம் என்று கூறினார்களே தவிர தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டதாக கூறவில்லை. இதுவே இராஜதந்திரமும் கூட. ஆனால் தமிழரசுக்கட்சியினர் எந்தவித தீர்வும் எட்டப்படுவதற்கு முன்னரேயே தனிநாட்டுக் கோரிக்கை, வடகிழக்கு இணைப்பு, சமஸ்டி தீர்வு ஆகியவற்றை கைவிடுவதாக கூறி ஏற்படக்கூடிய அரசியலமைப்பு மாற்றத்தில் ஒற்றையாட்சி முறை மற்றும் பெளத்த மத்ததிற்கு முன்னுரிமை அளிக்கப்படுதல் ஆகியவற்றையும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இனி அதிகார விடயம் தொடர்பில் தீர்வு பற்றி உண்மையான பேச்சுவார்த்தை வரும்பொழுது எதனை எல்லாம் விட்டுக் கொடுக்கபோகின்றனரோ தெரியவில்லை. காணி, நிதி, பொலிஸ் மற்றும் கல்வி அதிகாரங்களை கூட விட்டுக்கொடுப்பதற்கு தமிழரசுக்கட்சி தயங்கப்போவதில்லை என்பதையே அதன் செயற்பாடுகள் காட்டுகின்றன.தமிழ் தரப்பை இந்த விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளச்செய்வதற்கான ஒரு நிலைமையினை ஏற்படுத்தும்பொருட்டே அரசியல் தீர்வே தேவை இல்லை என்ற செய்தியை அரசியலமைப்பு மற்றம் தேவை இல்லை என்று பௌத்த மகா சங்கங்களை சிங்கள ராஜதந்திரம் சொல்லவைத்திருக்கிறது. ஒரு புறம் சுதந்திர கட்சி, ஒரு புறம் கூட்டு எதிரணி மறுபுறம் மகா சங்கங்கள் என்று போலியான ஒரு வேற்றுமையை காட்டி சிங்கள ராஜதந்திரம் மிகவும் சாமர்த்தியமான அரசியல் நகர்வை செய்து வேற்றுமையில் பலம் கண்டுகொண்டிருக்கிறது.

Mahinda-Sirisena-Ranil-

ஆனால் நாமோ ஒரு சில தனி நபர்களால் கட்டுப்படுத்தப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பை மையப்படுத்திய அரசியல் செயற்பாடுகளை கருத்தில் கொண்டு ஒற்றுமையை வலியுறுத்தி எமது பேரம்பேசும் வலிமையை இழந்துகொண்டிருக்கிறோம். பலமான ஒரு எதிரணி இன்று தமிழர் தரப்பில் இருந்திருந்திருக்குமானால் இந்த அரசியல் வலுவிழப்பு தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்காது. மகா சங்கங்கள் கூட இத்தகைய அறிவிப்புக்களை செய்வதற்கு துணிந்திருக்காது. இந்த வேற்றுமையில் பலம் காணும் ராஜதந்திரத்தையே அன்று முதல் இன்று வரை புரிந்துணர்வு ஒன்றின் அடிப்படையில் நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்களினூடாக சிங்களம் மேற்கொண்டுவருகிறது. அப்போது விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடந்த காலத்தில் சுதந்திர கட்சி, ஜே. வி. பி ஆகியவற்றை வைத்து சதுரங்கம் ஆடிய சிங்கள ராஜதந்திரம் , இன்று ஐ. நா மனித உரிமைகள் சபை விடயத்தில் மகிந்த ராஜபக்சவை வைத்தும், வடகிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம் மக்களைவைத்தும், ஒற்றையாட்சியை பாதுகாக்க சுதந்திரகட்சியை வைத்தும், அரசியல் தீர்வை ஒரு கானல் நீராக்குவதற்கு பௌத்த மகாசங்கங்கள் மற்றும் சர்வ கட்சி கூட்டங்களை வைத்தும் தனது காய்களை நகர்த்தி வருகிறது. இவற்றை சரிவர புரிந்து கொள்ளாமல் தமிழரின் பலம் ஒரு கட்சியினுடே தான் உள்ளது என்ற வெற்றுக்கோசங்களை எழுப்புவது தமிழ்தேசியத்தின் அழிவுக்கே வழிவகுக்கும்.

ஆகவே மாற்று அணி ஒன்றுக்கு தலைமை தாங்க முன்வருமாறு கோரிவரும் தமிழ் மக்களுக்கு தன்னால் இதனை ஏற்கமுடியாது என்று வேண்டுமானால் விக்னேஸ்வரன் கூறலாம் ஆனால் மாற்றுத் தலைமை அவசியம் இல்லை என்று கூறி ஒற்றுமையை வலியுறுத்துவதை நிறுத்தவேண்டும்.


2 thoughts on “வேற்றுமையில் பலம் காணும் சிங்கள ராஜதந்திரமும் ஒற்றுமையை வலியுறுத்தி பலவீனமடையும் தமிழ் தேசியமும்

 1. Pakkiyarasa kopinathan

  தமிழ் அரசியல்வாதிகள் நாம் எள்ளருமே ஒன்றுதான் மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள் நாம் மக்களுக்கு நேர்மையாக இருக்கனும், யாரை மக்கள் கூட ஆதரிக்கிறார்களோ அவர்களை நமும் ஏற்றுக்கொள்ளனும் என்று ஒவ்வொரு அரசியல் வாதியும் நினைக்கானோ அப்பதான் விடிவுகாளம் தமிழனுக்கு..

  இவனுகளெள்ளாருமே எட்டப்பனுக்கு பிறந்தவனுகள்..
  அதுதான் இவனுகளிடத்தில் நல்ல பண்புகள், மனிதாவிமானம், ,நேர்மை, ஏற்றுக்கொள்ளும் பண்பு, விட்டுக்குடுக்கும் பண்புகள் இல்லவே இல்லாமல் திரிகுறானுகள்….

  Reply
 2. Suganthan

  மக்களின் வேண்டுகோளை ஏற்று விக்னேஸ்வரன் மாற்று அணியை உருவாக்குவதற்கு முன்வரவேண்டும். இல்லையென்றால், தமிழ் மக்கள் பேரவை அரசியல் அமைப்பாக மாற்றப்பட்டு மாற்று அணிக்கான தலைமையை ஏற்கவேண்டும். இது காலத்தின் ஒரு தேவை.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *