செய்திகள்

ஸ்ரீதேவி மரணம் மிகுந்த துக்கம் அளிக்கிறது : இந்திய பிரதமர், ஜனாதிபதி

நடிகை ஸ்ரீதேவி (வயது 54) துபாயில் மாரடைப்பால் காலமானமை குறித்து இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஆழ்ந்த துக்கமும் வருத்தமும் தெரிவித்துள்ளனர்.

காலமானார். ஸ்ரீதேவியின் மரணம் திரை உலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தமிழகத்தின் சிவகாசியில் பிறந்து தென்னிந்திய மொழிகளில் கோலோச்சி பாலிவுட்டில் வெற்றி கொடி நாட்டியவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகி 50 ஆண்டுகாலம் இந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி.

நடிகை ஸ்ரீதேவி இறக்கும் முன்பு கடைசியாக எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. நடிகை ஸ்ரீதேவி தனது நாத்தனார் மகனான மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள கணவர் போனி கபூர், இளைய மகள் குஷியுடன் துபாய் சென்றார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

திரைப்படங்களில் தாம் ஏற்ற அத்தனை கதாபாத்திரங்களிலும் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி 1970களின் இறுதியிலும் 1980களிலும் தமிழ் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி.

குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீதேவியை 1976-ம் ஆண்டு மூன்று முடிச்சு படத்தில் செல்வி கதாபாத்திரம் மூலமாக நாயகியாக்கினார் இயக்குநர் கே. பாலச்சந்தர். அப்போது ஸ்ரீதேவிக்கு வயது 13.

sridevi1
இதன் பின்னர் இயக்குநர் பாரதிராஜாவின் 16 வயதினிலே மயில் பாத்திரம்… இன்னமும் மயில் பாடும் ‘செந்தூரப்பூவே’ பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ரஜினி, கமல் எனும் இருபெரும் நாயகர்களுடன் அழகு மயிலாக ஜொலித்தவர் ஸ்ரீதேவி. சிகப்பு ரோஜாக்கள் சாரதா, தாயில்லாமல் நான் இல்லை புவனா என நடிப்பில் விஸ்வரூபம் காட்டிய ஸ்ரீதேவி 1980-ல் வெளியான ஜானியில் அர்ச்சனா எனும் பாடகியாக முதிர்ச்சியான கதாபத்திரத்தில் நடிப்பின் உச்சத்தைத் தொட்டார் ஸ்ரீதேவி. 1985-ம் ஆண்டு நான் அடிமை இல்லை படத்தின் பிரியா பாத்திரத்துடன் அந்த மயில் தமிழ் சினிமாவின் பயணத்தை நிறுத்திவிட்டது. தென்னிந்திய மொழிகளிலும் இந்தி திரை உலகிலும் மயிலின் கொடி உயரவே பறந்து லேடி சூப்பர் ஸ்டாராக கோலோச்சினார்.

sridevi 7

சுமார் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலிஷ் விங்கிலிஷ் மூலம் மீண்டும் தமிழக திரையரங்குகளில் மயில் எட்டிப்பார்த்தார். 2015-ம் ஆண்டு விஜய் நடித்த புலி திரைப்படத்தில் ராணி யுவராணி பாத்திரத்தில் நடித்தார் ஸ்ரீதேவி. அரை நூற்றாண்டுகாலம் இந்திய சினிமாவின் முகங்களில் ஒருவராக திகழ்ந்த நம் சிவகாசி மீனாம்பட்டி மீனா என்கிற ஸ்ரீதேவி என்கிற மயிலின் வாழ்க்கை 54 வயதிலேயே முடிவுக்கு வந்திருப்பது பெருந்துயரம். இந்திய திரைத்துறைக்கும் பேரிழப்பு!

sridevi-kamal