Search
Friday 10 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியி்ன் எதிர்காலம் 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியி்ன் எதிர்காலம் 
வீ.தனபாலசிங்கம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புத்துயிரளிக்கும் செயற்பாடுகளில் இறங்கப்போவதாக கடந்தவாரம் அறிவித்திருக்கிறார். தனது தந்தை காலஞ்சென்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் 68 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் தலைவியாக ஒரு காலகட்டத்தில் இருந்த அவர் கொழும்பு ரீ.பி.ஜாயா மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்துக்கு கடந்த வியாழக்கிழமை திடீரெனச் சென்று மூத்த உறுப்பினர்கள் பலருடன் கலந்துரையாடியதுடன் கட்சியின் இன்றைய இக்கட்டான நிலைமைக்கு தனக்குப் பிறகு தலைமைத்துவத்துக்கு வந்தவர்களே காரணம் என்று குற்றஞ்சாட்டியதாக செய்திகள் வெளியாகின.

இன்று திங்கட்கிழமை முதல் கட்சிக்கு புத்துயிரளிப்பதற்கான தனது செயற்திட்டத்தை தொடங்கப்போவதாக கூறிய அவர் தலைமையகத்தில் தனக்கென்று தனியான அலுவலகம் ஒன்றும் ஊழியர்களும் உடனடியாக  ஒதுக்கித்தரப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் அவரது இந்த கோரிக்கை குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும் தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவித்தன. நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக பண்டாரநாயக்க குடும்பத்தின் ” சொத்து ”  போன்று தங்களது முழுமையான ஆதிக்கத்தில் இருந்த சுதந்திர கட்சியின் தற்போதைய பரிதாப நிலை திருமதி குமாரதுங்கவுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.ஆனால், தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் இருக்கும் கட்சிக்கு புத்துயிரளிப்பதற்கான அவரது செயற்திட்டம் எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமாகும் என்ற கேள்வி பெருமளவுக்கு மாற்றமடைந்திருக்கும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தவிர்க்கமுடியாமல் எழுகிறது.

திருமதி குமாரதுங்க 2005 நவம்பரில் ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்கிய பின்னரும் சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் சொற்ப நாட்கள் அவர் வசமே இருந்தது. ஜனாதிபதியாக பதவியேற்பவர் தன்னியல்பாகவே கட்சியின் தலைவராக வந்துவிடும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பில் இருக்கின்ற ஏற்பாட்டை சுதந்திர கட்சிக்கும் பிரதி பண்ணிய புதிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைவர் பதவியை தனதாக்கிக்கொண்டார். அதற்கு பிறகு அவர் கட்சிக்குள் பண்டாரநாயக்க குடும்ப மரபு என்று எதுவுமே மீண்டும் தலையெடுத்துவிடாமல் இருப்பதை உறுதிசெய்யும்  நடவடிக்கைகளையே தனது சகோதரர்களுடன் சேர்ந்து தீவிரமாக முன்னெடுத்தார்.திருமதி குமாரதுங்க கட்சியின் செயற்பாடுகளில் இருந்து  முற்றிலுமாக ஒதுக்கிவைக்கப்பட்டார்.ஜனாதிபதிக்குரிய மட்டுமீறிய அதிகாரங்களைப் பயன்படுத்தி ராஜபக்ச மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து எதையுமே செய்ய திருமதி குமாரதுங்கவினால் முடியவில்லை.
SLFP-Sri-Lanka-Freedom-Party
சுதந்திர கட்சியை ஜனாதிபதி ராஜபக்ச முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். கட்சியின் சகல மடடங்களிலும் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதிலேயே ராஜபக்சவும் சகோதரர்களும் கண்ணும் கருத்துமாக செயற்பட்டார்கள். ஒரு காலத்தில் பண்டாரநாயக்க குடும்பத்தின் முழுமையான ஆதிக்கத்தில் இருந்த கட்சி ராஜபக்ச குடும்பத்தின் பிடிக்குள் முழுமையாக வந்தது. இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான  ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி  பண்டாரநாயக்க பாராளுமன்றத்தில் எதிரணி பக்கம் சென்றபோது அவரின் பின்னால் உடனடியாக வந்தவர் மகிந்தவின் தந்தையார் டீ.ஏ.ராஜபக்ச. இதை  சுட்டிக்காட்டி ராஜபக்ச சகோதரர்கள் சுதந்திர கட்சியை தாபிப்பதில் பண்டாரநாயக்கவுக்கும் தங்களது தந்தையாருக்கும் சமவளவு  முக்கியத்துவம் இருந்தது போன்ற தோற்றப்பாட்டை காண்பித்தார்கள்.கட்சிக்குள் ராஜபக்ச குடும்பத்தின் செல்வாக்கும் ஆதிக்கமும் எந்தளவுக்கு  ஆழமாக வேரூன்றியிருந்தது என்பதை 2016 இறுதிப்பகுதியில் அவர்கள் தங்களுக்கென்று  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை  ஆரம்பித்தபோது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் புதிய கட்சியுடன் வெளிக்காட்டிய ஒருமைப்பாடு பிரகாசமாக உணரவைத்தது.
2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து  வெற்றி பெற்று ஆட்சியதிகாரத்துக்கு வந்த மைத்திரிபால சிறிசேன சில வாரங்களில் சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை தனதாக்கிக்கொண்டபோதிலும், கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரமுடியவில்லை. 2015 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலை சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச தலைமையிலேயே சந்தித்தது. இலங்கையின் வரலாற்றில் கட்சியொன்றின் தேர்தல் செயற்பாடுகளிலும் வேட்பாளர்கள் நியமனம் உட்பட ) பிரசாரங்களிலும் அதன் தலைவர் பங்கேற்காமல் பார்வையாளராக நின்ற விசித்திரமான முதல் சந்தர்ப்பமாக அது அமைந்தது. பாராளுமன்றத்துக்கு தெரிவான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களில் கணிசமான எண்ணிக்கையினர் ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து  ஜனாதிபதி சிறிசேன அமைத்த  ” தேசிய அரசாங்கத்தில் ” இணைந்து ஆரம்பக்கட்டங்களில் பதவிகளைப் பெற்றுக்கொண்டபோதிலும், ராஜபக்ச தலைமையில் பாராளுமனறத்திற்குள் செயற்பட்ட கூட்டு எதிரணிபக்கம் அவர்களில் பலர் நாளடைவில் வந்துவிட்டார்கள்.

2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் பொதுஜன பெரமுன பெற்ற மகத்தான வெற்றி சுதந்திர கட்சியின் ஆதரவுத்தளம் ராஜபக்சாக்களின் பக்கம் நகர்ந்துவிட்டதை பிரகாசமாக வெளிக்காட்டியது. ஐக்கிய தேசிய கட்சி மிகவும் பலவீனமான இரண்டாம் இடத்துக்குவர சுதந்திர கட்சி தொலைதூர மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. ஜனாதிபதி சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்கத்தின் முரண்பாடுகளும் பலவீனங்களும் பொதுஜன பெரமுனவின் அந்த வெற்றிக்கு பெருமளவுக்கு பங்களிப்புச் செய்தன. அதற்கு பிறகு  அடுத்துவரக்கூடிய எந்த தேர்தலிலும் தங்களால் சுலபமாக வெற்றிபெறமுடியும் என்ற  நம்பிக்கையுடன் ராஜபக்சாக்கள் செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இப்போது அவர்கள் தங்களது ஜனாதிபதி வேட்பாளரையும் அறிவித்து பிரசாரங்களைத் தொடங்கிவிட்டார்கள்.ஜனாதிபதி தேர்தல் பற்றிய அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே  பொதுஜன பெரமுனவும் அதன்்தலைமைத்துவக் குடும்பமும் அடுத்த ஆட்சி தங்களுடையதே என்ற உறுதியான நம்பிக்கையுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும்போது மறுபுறத்தில் ஜனாதிபதி சிறிசேனவின் தலைமையில் எஞ்சியிருக்கும் சுதந்திர கட்சி அடுத்து எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என்று தடுமாறிக்கொண்டிருக்கிறது.

chandrika and maithri

கடந்த அக்டோபர் அரசியல் சதிமுயற்சிக்குப் பிறகு அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சிறிசேன அணி பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்து பயணிக்கும் தந்திரோபாயத்தில் நாட்டம் காட்டியது.ஜனாதிபதி தலைவராக இருக்கிறார் என்பதைத் தவிர அந்த அணிக்கு வேறு எந்த ஒரு அரசியல் வல்லமையுமே கிடையாது. ஆனால், ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை, சிறிசேன அணியுடன் எந்தவிதமான பேரத்தையும் செய்யவேண்டிய தேவை இருக்கவில்லை. பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பது குறித்து சுதந்திர கட்சி தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருந்தாலும் அதனால் முன்வைக்கப்பட்ட எந்தவொரு நிபந்தனையையும் ராஜபக்சாக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் நிபந்தனைகளின் அடிப்படையில் செயற்பட சுதந்திர கட்சி முன்வந்தால் பெயருக்கு ‘ கூட்டணி ‘ ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதற்கு மாத்திரம் ராஜபக்சாக்கள் தயாராயிருக்கிறார்கள்.

பொதுஜன பெரமுனவுடன் அமைக்கப்படக்கூடிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சிறிசேனவை  நியமிக்கவேண்டும் ; மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருக்கலாம் என்று ஒரு கட்டத்தில் சுதந்திர கட்சி கோரிக்கை முன்வைத்தது. அதை பரிசீலிக்கின்ற அளவுக்கு ராஜபக்சாக்கள் என்ன அரசியல் கற்றுக்குட்டிகளா? கடந்த வாரம் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டதற்கு பிறகு ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு அதரவளிப்பதை தவிர ஜனாதிபதி சிறிசேனவுக்கும் அவருடன் இருப்பவர்களுக்கும் வேறு வழியில்லாமல் போகிறது. இன்னும் இரு வாரங்களில் நடைபெறவிருக்கும் சுதந்திர கட்சியின் மகாநாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கவிருப்தாக அவர்கள் கூறிக்கொண்டிருந்தாலும், எதையும் பெரிதாக எதிர்பார்ப்பதற்கில்லை. தனதும் சுதந்திர கட்சியினதும் தற்போதைய ” உயரத்தை” ஜனாதிபதி சிறிசேன தெரிந்துகொள்ளாதவராக இருக்கமுடியாது.தனது அரசியல் பலவீனநிலையை ஔிப்பதற்காக பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்து ராஜபக்சாக்களின் நிமந்தனைகளின் அடிப்படையில் அவர் செயற்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.அதற்காக ஒரு கூட்டணி நாடகம் அரங்கேறலாம்.அவ்வளவுதான்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாகி நியமனப்பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிின்னர் தற்போது ஜனாதிபதியுடன் இருக்கின்றவர்களில் எத்தனை பேர் வெளிப்படையாகவே பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்வார்களோ தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை தங்களது அரசியல் எதிர்காலம் முக்கியமானது.அதற்கு இன்னமும் ஒருசில மாதங்களே அதிகாரத்தில் இருக்கப்போகும் ஒரு ஜனாதிபதியுடன் சேர்ந்து நிற்பது எந்தவகையிலும் அவர்களுக்கு உதவப்போவதில்லை.

இத்தகையதொரு சூழ்நிலையிலே, அடுத்துவரும் தேசியத் தேர்தல்களில் சுதந்திர கட்சி என்பது ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுனவுக்குள் கரைந்துவிடக்கூடிய சாத்தியமே இருக்கிறது. அதற்கு பிறகு திருமதி குமாரதுங்க எதற்கு புத்துயிரளிக்கப்போகிறாரோ? காலங்காலமாக அரசியல் அதிகாரத்தில் இருந்த தலைமைத்துவத்துடன் அண்டிப்பிழைத்த அரசியல்வாதிகள் இன்று எந்த அதிகாரமும் இல்லாத முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து சுதந்திர கட்சிக்கு புத்துயிரளிக்க முன்வரவா போகிறார்கள் ?  பண்டாரநாயக்கவின் கொள்கைகள் என்று கூறிக்கொண்டு மக்களை அணிதிரட்டுவதென்பது இனிமேல் சாத்தியப்படாத ஒரு  யுகத்தில் இன்று தான் வாழ்வதை திருமதி குமாரதுங்க புரிந்துகொள்ளவேண்டும்.

இலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றாக சுதந்திர கட்சி வகித்துவந்த இடத்தை இப்போது பொதுஜன பெரமுன மிகவும் வலிமையான முறையில்  தனதாக்கிக்கொண்டுள்ளது என்பதே உண்மை. கடந்த வாரம் கட்சியின் தலைமையகத்துக்கு திருமதி குமாரதுங்க விஜயம் செய்தபோது அவருடன் கூடச்சென்றவர் ” ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பதற்கான அமைப்பின் ” அமைப்பாளர் பண்டார அத்துக்கோரள என்று செய்திகளின் மூலம் அறியக்கூடியதாக இருந்தது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான சுமார்  7 தசாப்தங்களில்  அரைவாசிக்கும் கூடுதலான காலமாக ஆட்சியதிகாரத்தில் இருந்த ஒரு கட்சியைப் பாதுகாக்க ஒரு அமைப்பை உருவாக்கவேண்டியிருப்பதை எப்படி.வர்ணிப்பதென்றே தெரியவில்லை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *