Search
Thursday 23 May 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

16 ஆம் திகதி முற்றவெளி பேரணியிலும் 19ம் திகதி மட்டக்களப்பு போராட்டத்திலும் அணிதிரள நீதியரசர் விக்னேஸ்வரன் கோரிக்கை

16 ஆம் திகதி முற்றவெளி பேரணியிலும் 19ம் திகதி மட்டக்களப்பு போராட்டத்திலும் அணிதிரள நீதியரசர் விக்னேஸ்வரன் கோரிக்கை

வடக்கு கிழக்கின் சகல பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து யாழ் முற்றவெளிக்கு நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணிக்கும் மட்டக்களப்பில் எதிர்வரும் 19ம் திகதி செய்வாய்க்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் கதவடைப்பு மற்றும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணிக்கும் தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை இன்று புதன்;கிழமை வெளியிட்டுள்ளார்.

அடிக்கடி நடைபெறும் கதவடைப்பு போராட்டங்களும் ஆர்ப்பாட்ட பேரணிகளும் மக்களின் சகஜ வாழ்க்கையை பாதித்து பொருளாதார செயற்பாடுகளையும், நாளாந்த வருவாய்களையும் பாதிக்கும் என்ற போதிலும் அவற்றை எல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல் எமக்கான உரிமைகளும் நீதியுமே முக்கியம் என்று தமிழ் மக்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் சாத்வீக போராட்டங்கள்தான் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையையும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளையும் சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்றிருக்கின்றது. எமது மக்கள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக முன்னெடுத்துவரும் இத்தகைய போராட்டங்கள் தான் ஐ. நா மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச சமூகத்தினால் உட்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் தீர்மானத்தினை நிறைவேற்றாமல் ஏமாற்று வித்தைகளில் ஈடுபட்டுவருகின்றபோதிலும் நாம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் இத்தகைய போராட்டங்கள் தான் ஐ. நா மற்றும் சர்வதேச சமூகத்தின் மனசாட்சிக் கதவுகளைத் தட்டி எழுப்புவன. அவ்வாறான தொடர் போராட்டங்களே இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகம் மாற்று நடவடிக்கைகளை எடுக்கும் நிலைமைக்கு இட்டுச்சென்றுள்ளது ஐ.நா. தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறி இருக்கின்ற நிலையில் இலங்கையைப் பாதுகாப்பு சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்றும் அல்லது சர்வதேச நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட தகுந்த பொறிமுறை ஊடாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும், அதேவேளை ஐ. நா மனித உரிமைகள் சபை தனது அலுவலகத்தை இலங்கையில் திறந்து விசேட பிரதிநிதி ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுவருகின்றோம். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மக்களின் போராட்டங்களிலும் இந்தக் கோரிக்கைகளே விடுக்கப்பட்டன. இந்தக் கோரிக்கைகள் இன்று சர்வதேச ரீதியாகவும் விடுக்கப்பட்டு வருகின்றமை உங்கள் போராட்டத்தின் வலிமையை எடுத்துக்காட்டுகின்றது. சிலர் இந்தப் போராட்டங்களின் போது சோர்வடைந்துள்ளதையும் பார்த்துள்ளேன். ஆனால் இன்று நிலைமை சீரடைந்து வருகின்றது. சர்வதேச நாடுகள் ஓரளவு விழித்துக்கொண்டிருப்பது இதற்கு ஒரு காரணம். மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் சில தினங்களுக்கு முன்னர் விடுத்துள்ள அறிக்கையில் இவை தொடர்பில் சில சாதகமான விடயங்களைப் பரிந்துரைத்துள்ளார். அதேபோல சர்தேச நீதிபதிகள் ஆணைக்குழுவும் இலங்கை விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்படுவது உட்பட நாம் கோருகின்ற பல விடயங்களை வலியுறுத்தியுள்ளது.

ஆகவே, மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் இன்று நிற்கின்றோம். அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டமும் நீதிக்கான போராட்டங்களும் இன்று எழுச்சி அடைந்திருக்கின்றது. குறிப்பாக எமது இளம் சமுதாயத்தினரும் பெண்களும் தலைமை ஏற்று மேற்கொண்டுவரும் தொடர் போராட்டங்கள் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்திருக்கின்றது. குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் தமது பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து செயற்படும் விதம் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்திருக்கின்றது. பெண்களும் இளம் சமுதாயத்தினரும் சாத்வீக வழிகளில் அடைக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து சமாதானத்தையும் நீதியையும் நிலைநாட்டிய பல உதாரணங்களை உலக வரலாறுகளில் காண்கின்றோம். வடக்கு கிழக்கில் இன்று ஏற்பட்டுவரும் புதிய போராட்ட பரிமாணத்தை கவனத்தில் எடுத்து ஐ. நா மற்றும் சர்வதேச சமூகமும் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் நிலைமை நிச்சயமாக உருவாகும் என எதிர்பார்க்கலாம்.

காணாமல் போனவர்களின் உறவினர்களின் அமைப்புக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் கடந்த காலங்களில் மிகவும் பொறுப்புணர்வுடன் மிகச் சிறந்த முறையில் போராட்டங்களை ஒழுங்கமைத்து இருந்தார்கள். குறிப்பாகக் கிளிநொச்சியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் பலரதும் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. கிளிநொச்சி போராட்டத்துக்கு பொதுமக்களும் வர்த்தகர்களும் வழங்கிய பேராதரவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேபோல 16ம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளும் போராட்டமும் மட்டக்களப்பில் 19ம் திகதி நடைபெறும் போராட்டமும் முக்கியமானவை. இந்த இரண்டு போராட்டங்களுக்கும் உங்கள் முழுமையான ஆதரவை வழங்கி எமது மக்களின் நீதிக்கான குரல் ஐ. நா வரை கேட்பதற்கு அணிதிரள்வீர்கள் என்று நம்புகின்றேன். நானும் இந்த இரண்டு போராட்டங்களிலும் உங்களில் ஒருவனாகக் கலந்துகொள்ளவிருக்கின்றேன்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *