Search
Tuesday 7 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திருகோணமலை சிவன் மலையின் அதிசயம்

திருகோணமலை சிவன் மலையின் அதிசயம்

பிறேமலதா பஞ்சாட்சரம்

சிவபூமி என திருமூலரால் சிறப்பிக்கப்பெறும்  இலங்கைத் தீவானது வரலாறுக் காலத்திற்க்கு  முற்பட்ட பல்வேறு சிவாலயங்களை தன்னகத்தே கொண்டது. வடக்கே நகுலேஸ்வரத்திலிருந்தே தெற்கே தேவேந்திர முனையிலுள்ள தொண்டீஸ்வரம் வரையும் இலங்கைத்தீவை சூழ உள்ள ஐந்து சிவாலயங்களும்  சிறந்த சிவனடியவனான மாமன்னன்  இராவணனால் உருவாக்கப்பட்டவை அல்லது வணங்கப்பட்டவை  என்பது  ஐதீகம். இதனாலன்றோ சைவ சமய குரவருள் முதன்மையானவராகப் போற்றப்படுகின்ற திருஞான சம்பந்தப்  பெருமான் சிவனது திருநீற்றை மகிமையை சிறப்பித்துப் பாடிய  திருநீற்றுத் திருப்பதிகத்தில்

இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு

பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு

தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு

அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே!

என்று பாடுகின்றார். இதன் பொருள்

அரவுகள்  (பாம்புகள்) வளைந்து தவழும் திருமேனியனாகிய திருவாலவாய சிவபெருமானது திருநீறு, இராவணன் பூசிப் பயன் பெற்றது , நல்லவர்களால் எண்ணத்தக்கது, பராசக்தி வடிவமானது,  பாவம் போக்குவது, தத்துவங்களாக இருப்பது, மெய்ப்பொருளை உணர்த்துவது போன்றபெருமைகளையெல்லாம் தன்னகத்தே கொண்டது. இவ்வாறான பெருமையினையும் புகழினையுமுடைய இராவணனால் வணங்கப் பெற்ற திருத்தலம் தென்கயிலை என அழைக்கப்படுகின்ற  திருகோணமலை பதியுறை கோணேஸ்வரப் பெருமான் ஆலயம் ஆகும்.

கோணேசர் வரலாறு கூறும் தட்சண கைலாய புராணமமானது திருகோண மலையானது சித்தர்கள் உறையும் இடமென்றும் அது சிவபக்தனான இராவணனால் எவ்வாறு வணங்கப்பட்டது, அச் சிவனை வணங்கிய இராவணன்  எவ்வாறு வாளும் நீண்ட ஆயும் பெற்றன என்பதையும் தனது தாயாருக்காக கங்கையின் வடிவமான  7  வெந்நீர் ஊற்றுகளையம் எவ்வாறு ஏற்படுத்தினான் என்றும்  பகர்கின்றது.

Thenkailai 1

சிவன் மலையில் உள்ள கல்லால மரம், நந்தி மற்றும் 5 லிங்கங்கள் 

தட்சண கைலாய புராணத்தின் புராண வரலற்றுப் படலத்தில் உத்தர கைலாயம்  ( வடக்கே  இமய மலையில் உள்ளது) மற்றும்  தட்சண கைலாய பெருமையை சிவபெருமான் திருநந்திதேவருக்கு உரைத்ததாகவும் நந்தி தேவர் அதனை சனக்குமாரருக்கு உரைத்ததாகவும்  சனக்குமாரர் வியாசருக்கும், வியாசர் சூத முனிவருக்கும் , சூத முனிவர்  கோணமலையின் பெருமை பற்றி தனது சீடர்களுக்கு விளக்கும் வகையில் அமைகின்றது.

thadchanamoorthi

அதன் நான்காவது அத்தியாயமான தட்சண கைலாய சிறப்புரைத்த படலத்தில் தட்சண கைலாயமான கோணமலையிலே  7 குகைகள் இருப்பதாகவும் அதில் வடக்கு குகையில் அகத்தியர், வாமதேவர், புலத்தியர் புலகாத்திரர், உசத்தியர்,ரோமசர் (  ரோம முனி ) சித்தர்களும்  வசிப்பதாகவும் கூறப்பட்டிருக்கின்றது.

இவற்றின் பின்னணியில் தற்பொழுது தென்கையிலை ஆதினம் அமைந்துள்ள கன்னியா பகுதியிலுள்ள சிவன் மலையில் கல்லால மரங்கள் சூழ்ந்த பகுதியில் சுயமாக அமைந்த மிகவும் பெரிய  சிவலிங்க வடிவத்தின்  மேலே கல்லால மரம்  உள்ளது. அதனருகில் நந்தியும் 4 இலிங்கங்களும் ( மொத்தமாக 5 இலிங்கங்கள் ) அருகிகருகே உள்ளன.

இவ் வடிவமானது  தென்திசைக் கடவுளான தட்சணா மூர்த்தியான சிவபெருமான் மெய்பொருள் உண்மையை  சனகாதி முனிவர்களுக்கு கைலாய மலையில் வைத்து உரைத்ததை காட்டி நிற்கின்றது.

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்

சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

(திருவிளையாடற் புராணம் – பாடல் – 13)

விளக்கம்

கல்லால மரத்தின்  கீழ் இருந்து, நான்மறை, ஆறுஅங்கம் முதலானவற்றை கற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்குமுனிவர்கட்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு அப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன் உண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய தட்சிணாமூர்த்தியை இடையறாமல் நினைந்து பிறவிக் கட்டாகிய பகையை வெல்வாம்

சுயமாக அமைந்த இச்சிவலிங்க வடிவம் கைலாய மலையில் சிவன் அன்று அமர்ந்த யோக வடிவினைக்  காட்டி நிற்பதனால் சிவனடியார்க்கள்  கோணேசப் பெருமானை சென்று  வழிபடுவதுபோல் கன்னியா சிவன் மலைக்கு சென்று இவ்வரிய சிவலிங்க வடிவத் தரிசித்து  சிவனருளையம்  தென்கயிலை ஆதின குருமுதல்வர் தவத்திரு  அகத்தியர் அடிகளாரின் குருவருளையும் பெறுதல் நலம்.

Thavaththiru Akathiyar adikalaar

தவத்திரு அகத்தியர் அடிகளார் 

கல்லால மரமானது ‘ஊர்த்துவ மூலமரம்” என்று அழிக்கப்படும். அதாவது விழுதுகள் தாங்காத ஆலமரம்.. சித்தர்கள் உலாவும் பகுதிகளில் கல்லால மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன  என்பது சைவ மக்களின் ஐதீகம். இந்தியாவில் கல்லால மரங்கள் உள்ள  சித்தர்கள் வசிக்கும் மலைகள் எனக் கருதப்படுகின்ற .  சதுரகிரி மலை ,பொதிகை மலை, இமய மலை, கொல்லி மலை, திருவண்ணா மலை  போன்றவற்றில் கல்லாலமரங்கள் உள்ளன.

Ramanar

திருவண்ணாமலையில் வாழ்ந்தசிவசித்தரான பகவான்  இரமணர் “மனத்தளவிலாவது திருஅண்ணாமலையை கிரிவலம் வர வேண்டும் என்ற சங்கல்பம் மேற்கொண்டு திருஅண்ணாமலையை மானசீகமாக கிரிவலம் வர ஆரம்பித்தார். இவ்வாறு திருஅண்ணாமலையை பத்தாயிரம் முறை கிரிவலம் வந்த பின் அவருக்கு திருஅண்ணாமலை உச்சியில் கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து அருளாட்சி புரியும் திருஅண்ணாமலையாரின் தட்சிணா மூர்த்தி கோல தரிசனம் கிட்டியது” என அவரது வரலாறு கூறுகின்றது . பகவான் இரமணருக்கு கிடைத்தற்கரிய காட்சியை வழங்கிய  தட்சண கைலாய புராணத்திலே கூறிய விதமாகவும்  கைலாயத்தில் சனகாதி குமாரருக்கு அறிவினையும் ஞானத்தினையும்  நல்கிய  காட்சியை  சுயம்பு வடிவில்  திருகோணமளை சிவன்மலையில் அமர்ந்து சித்தர்களுக்கே எளிதில் கிட்டாத காட்சியை நல்குவதால் சைவப் பெருமக்கள் ஈழத்து தென்கயிலை சிவனை நாடி அவனருளாலே அவன்தாள் வணங்குவோம்.

Ravanan Vettu

இராவணன் வெட்டு 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *