Search
Monday 26 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

2009 க்கு பின்னர் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் காட்டுகின்றன: விக்னேஸ்வரன்

2009 க்கு பின்னர் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் காட்டுகின்றன: விக்னேஸ்வரன்

2009 க்கு பின்னர் இலங்கை ஊடாக அந்நிய சக்திகளின் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களையும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் கோடிட்டு காட்டுவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள விக்னேஸ்வ்ரன், ஆகவே, இந்தியா தனது நலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தனது பாதுகாப்பானது இலங்கைத் தீவின் உண்மையான அமைதியிலேயே தங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து மதச் சார்பற்ற, வடக்கு கிழக்கு இணைந்த, உச்ச அதிகாரம் கொண்ட ஒரு சமஷ்டிக் கட்டமைப்பை இலங்கையில் ஏற்படுத்தி தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளும் ஒரு தீர்வைக் கொண்டுவருவதற்கு முன்னின்று பாடுபடவேண்டியதன் அவசியத்தையும் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் இந்தியாவுக்கு உணர்த்துகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையின் முழுமையான விபரமும் வருமாறு,

புனித உயிர்த்த ஞாயிறு தினமான நேற்று பல்வேறு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் அதேவேளை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயம் அடைந்து சிகிற்சை பெறுபவர்களின் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கின்றோம். மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு நேற்று சென்று காயம் அடைந்து சிகிற்சை பெற்றுவரும் மக்களைப் பார்த்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். நேற்றைய பயங்கரவாத தாக்குதல் பல விடயங்களை உணர்த்தி இருக்கின்றன.

இன, மத ஏற்றத் தாழ்வுகள் இந்தத் தீவில் இருக்கும்போது அதனுடாக ஏற்படும் முரண் நிலைகளை சந்தர்ப்பவாத குழுக்களும் அந்நிய சக்திகளும் தமது நோக்கங்களை அடைவதற்கான வாய்ப்பாகவே பயன்படுத்த முயலுவார்கள். ஆகவே நிலையான சமாதான பூமியாக இத்தீவை மாற்றுவதற்கு எமது அரசியல் தலைவர்களும் புத்திஜீவிகளும் துணிச்சலுடன் முன்வர வேண்டும். எமது அரசியல் சாசனமுஞ் சட்டமும் சகல இன, மத சமூகங்களுக்கும் சமத்துவத்தையும் பாதுகாப்பையும் நல்கும் விதத்தில் மாற்றியமைக்கப்பட வேண்டும். இதன் அவசியத்தை இந்தத் தாக்குதல்கள் இன்று எமக்கு உணர்த்தியுள்ளன.

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஒரு இனத்தை அடக்கியாள்வதற்காக இராணுவத்தை வடக்கில் நிலைநிறுத்தி வைத்திருக்காமல் நாட்டின் அனைத்து மக்களுக்குமான உண்மையான பாதுகாப்பை வலியுறுத்தும் விதத்தில் சீர்தூக்கிப் பார்த்து அதனை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் தொகைக்கு ஏற்ப சகல மாகாணங்களுக்கும் இராணுவத்தைப் பரவலாக்கம் செய்யவேண்டியதன் அவசியத்தையும் இந்தத் தாக்குதல்கள் வலியுறுத்துகின்றன.

2009 க்கு பின்னர் இலங்கை ஊடாக அந்நிய சக்திகளின் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களையும் இந்தத் தாக்குதல்கள் கோடிட்டு காட்டுகின்றன. ஆகவே, இந்தியா தனது நலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தனது பாதுகாப்பானது இலங்கைத் தீவின் உண்மையான அமைதியிலேயே தங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து மதச் சார்பற்ற, வடக்கு கிழக்கு இணைந்த, உச்ச அதிகாரம் கொண்ட ஒரு சமஷ்டிக் கட்டமைப்பை இலங்கையில் ஏற்படுத்தி தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளும் ஒரு தீர்வைக் கொண்டுவருவதற்கு முன்னின்று பாடுபடவேண்டியதன் அவசியத்தையும் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் இந்தியாவுக்கு உணர்த்துகின்றன.

காட்டுமிராண்டித்தனமான இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களையும் அவர்களுக்கு உடந்தையாக நின்றவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாகத் தண்டிக்க சகல தரப்பினரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்தத் தாக்குதல்களில் காயப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் மருத்துவ மற்றும் முதலுதவி உதவிகள் மேலும் ஏனைய உதவிகள் செய்த மருத்துவர்கள், தாதிமார்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கின்றேன்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *