Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

2011 உலக கிண்ண கிரிக்கட் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணய சதி : தகவல் வெளியிடும் மகிந்தானந்த

2011 உலக கிண்ண கிரிக்கட் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணய சதி : தகவல் வெளியிடும் மகிந்தானந்த

2011 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியின் போது பணத்திற்காக ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டு கிண்ணத்தை தாரைவார்த்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் கிண்ணத்தை சுவீகரிப்பதற்கான இயலுமை இலங்கை அணியிடம் காணப்பட்ட போதிலும், பணத்திற்கான அது தாரைவார்க்கப்பட்டதை தாம் பொறுப்புடன் கூறுவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் விவாதத்தில் ஈடுபடவும் தாம் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பணத்திற்காக கிண்ணம் தாரைவார்க்கப்பட்டதில் வீரர்களை இணைத்துக்கொள்ளவில்லை எனவும் ஒருசில தரப்பினரால் இந்த விடயம் மேற்கொள்ளப்பட்டதாகவும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார்.
2011 ஏப்ரல் 2 ஆம் திகதி உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன், அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோர் உபாதைக்குள்ளானதால் சமிந்த வாஸூம், சுராஜ் ரந்திவும் குழாத்தில் இணைக்கப்பட்டனர்.
இறுதிப்போட்டியில் இலங்கை அணி 4 மாற்றங்களுடன் களமிறங்கியது. அதுவரை போட்டிகளில் பங்கேற்றிருந்த சாமர சில்வா, ரங்கன ஹேரத், அஜந்த மென்டிஸ் மற்றும் அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோருக்கு பதிலாக இறுதிப் போட்டியில் சாமர கப்புகெதர, திசர, பெரேரா, சுராஜ் ரந்திவ், நுவன் குலசேகர ஆகியோரை அப்போதைய தெரிவுக்குழு இணைத்தது. இறுதிப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் அணித்தலைவரான அர்ஜூன ரணதுங்க கூறிய கருத்தை மேற்கோள்காட்டி 2017 ஜூலை மாதம் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வௌியிட்டிருந்தது. இந்தப் போட்டி தொடர்பாக விசாரணை நடத்தும் அளவுக்கு குற்றச்சாட்டுகள் இருப்பதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான தயாசிறி ஜயசேகர 2017 ஆம் ஆண்டு தெரிவித்தார்.
2011 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சராக மஹிந்தானந்த அளுத்கமகே செயற்பட்டார். அப்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக டீ.எஸ்.டி. சில்வாவும், செயலாளராக நிஷாந்த ரணதுங்கவும் செயற்பட்டனர். உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கான பணிப்பாளராக சுராஜ் தந்தெனிய பொறுப்பு வகித்தார்.
இந்த உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக அரவிந்த டி சில்வாவும், அமல் சில்வா, ரஞ்சித் பெர்னாண்டோ, ஷபீர் அஸ்கர் அலி ஆகியோர் தெரிவுக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவும் இருந்தனர்.
இந்நிலையில் தற்போது மகிந்தனந்த அலுத்கமகே இந்த போட்டியில் ஊழல் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இது இலங்கை கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *