Search
Wednesday 26 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

2018 – தமிழர்களுக்கான அரசியல் படிப்பினைகள்?

2018 – தமிழர்களுக்கான அரசியல் படிப்பினைகள்?

யதீந்திரா
வரலாற்றிலிருந்து நாம் எதனை கற்றுக் கொள்கின்றோம் என்றால் எதனையுமே அல்ல – என்று ஒரு கூற்றுண்டு. வரலாற்றில் இது எந்ததெந்த சமூகங்களுக்கெல்லாம் பொருந்துமென்று நாம் அறியாது விட்டாலும் கூட, நிச்சயமாக தமிழர்களுக்கு பொருந்துமென்று, அழுத்தம் திருத்தமாக குறிப்பிடலாம். அந்தளவிற்கு தமிழர்கள் எதனையுமே அவர்களின் கடந்தகாலத்திலிருந்து கற்றுக்கொள்ளவதில்லை. நான் இங்கு தமிழர்கள் என்று குறிப்பிடுவது சாமானிய தமிழ் மக்களை அல்ல, மாறாக, அந்த சாமானிய மக்களுக்காக இயங்குவதாகவும் சிந்திப்பதாகவும் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளையும், அரசியல் செயற்பாட்டாளர்களையும் புத்திஜீவிகளையும்தான். 2015இல் பெருமெடுப்பில் ஆரம்பித்த ஜனநாயகத்திற்கான பயணம் அதன் படுமோசமான தோல்வியை பதிவுசெய்த ஆண்டுதான் 2018. இந்த விடயத்தை ஆழமாகப் பார்த்தால் உண்மையில் இது ஜனநாயகத்தின் தோல்வியல்ல. மாறாக, தமிழ் அரசியல் தலைமையின் தோல்வி – அந்த தலைமையின் மீது காத்திரமான அழுத்தங்களை பிரயோகிக்க முடியாமல் போன தமிழ் சிவில் சமூகத்தினரின் தோல்வி. கூட்டமைப்பு பிழையாக பயணிக்கிறது என்று கூறி, தங்களை மாற்றுத் தலைமையாக நிறுவ முற்பட்டவர்களின் தோல்வி. மொத்தத்தில் நம் அனைவரதும் தோல்வி. அனைவரதும் தோல்விக்கு அனைவருமாகவே பொறுப்பேற்பதுதான் சரியானது.

தமிழர்களிடம் இரண்டு வகையான தோல்வி அனுபவங்கள் உண்டு. ஒன்று, மிதவாத அரசியலின் தோல்வி. மிதவாத அரசியல் தோற்றுப்போன இடத்திலிருந்துதான், அந்த இடைவெளியை ஆயுதப் போராட்டம் சுவீகரித்துக் கொண்டது. அதுவும் இறுதியில் தோல்வியில்தான் முற்றுப்பெற்றது. இந்த இரண்டு அனுபவங்களிலிருந்தும் நாம் கற்றுக்கொண்டது என்ன? எதையாவது கற்றுக்கொண்டிருக்கிறோமா? மிதவாதிகளான செல்வநாயகம் தொடக்கம் அமிர்தலிங்கம் வரையில் சட்ட ஆற்றலுக்கும், சர்வதேச சக்திகளுடன் ஊடாடுவதற்கான ஆங்கிலப் புலமைக்கும் பஞ்சமிருந்திருக்கவில்லை. அவை அனைத்தும் இருந்தும் அன்றைய சிங்கள ஆட்சியாளர்களை ஒரு வழிக்குக்கொண்டுவர அன்றைய மிதவாதிகளால் முடியவில்லை. சிங்கள ஆட்சியாளர்களை வழிக்குக் கொண்டுவரும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியை தழுவும்போது, அந்தத் தோல்வியை முறியடிக்கும் உபாயமாக தமிழ் மக்களுக்கான கோரிக்கைகளை அதிகரிக்கும் காரியத்தையே அன்றைய மிதவாத தலைவர்கள் செய்தனர்.

சிங்கள ஆட்சியாளர்களுடனான உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்ட பின்புலத்தில்தான் பிரிந்து செல்வதற்கான வட்டுக் கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை நிறைவேற்றிய அமிர்தலிங்கமே பின்னர் தமிழ் ஆயுதத்திற்கு பலியாகிப்போனார். அமிர்தலிங்கத்தின் கொலை என்பது தமிழ் மக்கள் மத்தியில் மிதவாத தலைமையின் செல்வாக்கை இல்லாமலாக்குவதற்கான கொலைதான். இதனை பிறிதொரு வகையில் கூறுவதானால் அது ஒரு தனிநாட்டுக்கான கொலை. அன்று ஆரம்பித்த கொலை 2009இல் முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தின் மீதான கொலையில் முற்றுப்பெற்றது. இந்த இடைப்பட்ட காலத்தில் வரலாறு ஏராளமான அனுபவங்களை, படிப்பினைகளை தமிழ் தலைமுறைக்கு விட்டுச்சென்றிருக்கிறது. சிங்கள தலைவர்கள் எப்படியானவர்கள் – அவர்களது ராஜதந்திர ஆற்றல் எத்தகையது? அவர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள்? இந்தியா என்ன செய்யும்? அமெரிக்கா என்ன செய்யும்? சர்வதேசம் என்ன செய்யும்? ஜக்கிய நாடுகள் சபை என்ன செய்யும்? புலம்பெயர் சமூகத்தினால் என்ன செய்ய முடியும்? இப்படியான ஏராளமான கேள்விகளுக்கு போதுமான பதில்கள் கடந்த காலத்திடம் இருக்கிறது. அந்த பதில்களை தேடுவதும் – அதிலிருந்து கற்றுக் கொள்வதும் யாருடைய பணி?

2015இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்திற்கு ஆதரவளிக்கும் முடிவை கூட்டமைப்பு எடுத்தபோது – எழுத்துமூல உடன்பாடின்றி ஆதரவளிப்பது சரியானதா என்றொரு கேள்வி முன்வைக்கப்பட்டது. எழுத்து மூல உடன்பாடுகள் பல கிழித்து வீசப்பட்டிருக்கின்றன – எனவே மீண்டுமொரு ஒப்பந்தம் கிழத்து வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என்றவாறு சம்பந்தன் தரப்பு பதிலளித்தது. எனவே பரஸ்பர புரிந்துனர்வின் அடிப்படையில் நாங்கள் தீர்வை காணவுள்ளோம் என்றனர். உண்மைதான் – சிங்கள தலைவர்களுடனான எழுத்து மூல உடன்பாடுகள் பல கிழித்து வீசப்பட்டுத்தான் இருக்கின்றன. ஆனால் இன்று கூட்டமைப்பு ஏற்படுத்திக்கொண்ட வாய்மூல உடன்பாடுமல்லவா காறி உமிழப்பட்டிருக்கிறது. எழுத்து மூல உடன்பாட்டை மட்டுமல்ல வாய்மூல உடன்பாட்டையும் சிங்களத் தலைவர்கள் புறம்தள்ள தயங்கமாட்டார்கள் என்னும் ஒரு புதிய படிப்பினையல்லவா தமிழர்களுக்கு கிடைத்திருக்கிறது. ஒரு புதிய அரசியல் யாப்பு ஒன்று நிச்சயம் வரும் என்னும் நம்பிக்கையை சம்பந்தன் – சுமந்திரன் கூட்டு, தொடர்ச்சியாக கூறிவந்தது? ஆனால் தமிழர்களிடம் இருக்கின்ற கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் அப்படியொரு யாப்பு இந்த நாட்டில் வர முடியுமா? வரலாற்று அறிவின் வழியாக சிந்தித்திருந்தால், கடந்த மூன்று வருடங்களை வேறுவிதமாக பயன்படுத்தியிருக்க வாய்ப்புக்கள் இருந்தனவா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை தேட, நாம் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியவர்களாகவும் சிந்திக்க வேண்டியவர்களாகவும் இருக்கிறோம்.

TNA

கடந்த காலங்களில் ஒரு சிங்கள கட்சி தீர்வை தரப்போவதாக கூறுகின்ற போது, பிறிதொரு கட்சி அதனை எதிர்த்து கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டு, அந்த முயற்சியை தோற்கடிப்பதான தோற்றம் காண்பிக்கப்படும். பண்டா – செல்வா ஒப்பந்தத்திலிருந்து சந்திரிகாவின் தீர்வுப்பொதி வரையில் இதுதான் யதார்த்தம். இந்த வரலாற்றுப் போக்கிற்கு மைத்திரியும் – ரணிலும் எவ்வாறு விதிவிலக்காக இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியும்? கடந்த காலத்தில் தமிழர்களுக்கான தீர்வு முயற்சிகளை மாறி மாறி எதிர்ப்பதன் மூலம், தங்களது தென்னிலங்கை வாக்குவங்கியை தக்கவைக்க முற்பட்ட இருதரப்பும் ஓரணியாக நிற்கும் போது, அது தமிழர்களுக்கு சாதகமானதென்னும் கணிப்பு இருந்தது ஆனால் அதுவும் இன்று தவறென்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி மாற்றத்தின் போது சந்திரிக்கா ஒரு மிக முக்கியமான நபராக காட்சியளித்தார். அவர்தான் மைத்திரியை இயக்குவதான ஒரு தோற்றப்பாடும் காண்பிக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த சந்திரிக்கா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை செயலகத்திற்குள் நுழைவதற்கு மைத்திரி தடைவித்திருக்கின்றார். சிங்கள அதிகார உறவுகள் எந்தளவு விரைவாக மாறியிருக்கின்றன. இந்த நபர்களை நம்பி ஒரு இனத்தின் அரசியலை கையாளலாம் என்று எண்ணியது சரியானதா? இது யாருடைய தவறு?

அரசியலை பொறுத்தவரையில் ஒவ்வொரு விடயங்களையும் விளங்கிக்கொண்டு, அதற்கேற்ப செயலாற்ற வேண்டியது எங்களுடைய வேலையேயன்றி, அது மற்றவர்களுடையதல்ல. தமிழர்களுக்காக வேறு எவரும் சிந்திக்கமாட்டார்கள்? தமிழர்கள்தான் சிந்திக்க வேண்டும். 2009இற்கு பின்னரான கடந்த பத்து ஆண்டு காலத்தில், நாம் கடந்துவந்த ஒவ்வொரு ஆண்டின் அரசியல் அனுபவங்களும், நமக்கு உணர்த்தியிருக்கும் தவிர்க்க முடியாத உண்மை இதுதான். ஆனாலும் அந்த வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ள நம் மத்தியில் தலைமைகள் இல்லாமல் போனதுதான், தமிழ் மக்களின் துரதிஸ்டம். இந்த நிலைமை இனியும் தொடரத்தான் செய்யும். கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் தமிழ் மக்கள் நலனுக்காக கையாளும் பொறிமுறை ஒன்றை கண்டுபிடிக்காத வரையில், எதிர்காலத்தில் சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் கூட, அதனை தமிழ் தலைமைகளால் காத்திரமாக கையாள முடியாமல்தான் போகும். தமிழ் மக்களின் சில அடிப்படையான விடயங்களில் சேர்ந்தும், அதே வேளை தங்களது தனித்துவத்தை முன்னிறுத்தி பிரிந்தும் செயற்படும் ஒரு கட்சி ஒருங்கிணைவு பொறிமுறையொன்றை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அரசியலில் தீண்டாமை மனோபாவம் முற்றாக கழையப்பட்டால்தான், அது சாத்தியப்படும். அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும் என்னும் கடந்த கால தமிழ் அரசியல் கோசமும் அதன் மோசமான தோல்வியைத்தான் பதிவு செய்திருக்கிறது. ஒன்று பிழைக்கும் போது, அதனை இன்னொன்று ஈடு செய்யும் உபாயங்கள்தான் அரசியலை கையாளுவதற்கு ஏற்ற சிறந்த உபாயம் என்பதையும் கடந்த கால அனுபவம் நமக்கு உணர்தியிருக்கிறது. இந்த ஆண்டிலாவது வடக்கு கிழக்கு தழுவி ஒரு பெறுமதியான அரசியல் உரையாடல் இடம்பெற வேண்டும். அதன் மூலம் புத்தாக்கம்மிக்க அரசியல் வழிமுறைகளை கண்டுபிடிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், 2018 மட்டுமல்ல – இனி வரப்போகும் ஒவ்வொரு ஆண்டுகளும், தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில், தோல்வி ஆண்டுகள்தான்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *