செய்திகள்

சேப்பாக்கம் மைதானத்தின் 3 பார்வையாளர் மாடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட 3 பார்வையாளர் மாடங்களை இடிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 13 ஆயிரத்து 100 இருக்கைகளைக் கொண்ட ஐ, ஜே, கே என்ற 3 புதிய பார்வையாளர் மாடங்கள் கட்டப்பட்டுள்ளன. உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி இந்த புதிய மாடங்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது.

இதனை எதிர்த்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மூன்று பார்வையாளர் மாடங்களை இடிக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, 3 பார்வையாளர் மாடங்களை இடிக்க தயார் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கூறியிருந்தது. அதே நேரத்தில், 3 மாடங்களில் 2 மாடங்களைப் பயன்படுத்த அனுமதிக் கேட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 3 பார்வையாளர் மாடங்களை இடிக்க உத்தரவிட்டதோடு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையும் நிராகரித்தது.

3 பார்வையாளர் மாடங்களை இடிப்பது தொடர்பான திட்டத்தை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைத்துவிட்டு அதனை இடிக்க என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதால் இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என்றும், கிரிக்கெட் போட்டிகளை விட பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஐபிஎல் போட்டி வரும் 8ஆம் தேதி தொடங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.