செய்திகள்

சேரனின் புதிய படம் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

சினிமா டு ஹோம் (சி2எச்) என்ற புதிய திரையிடல் முறையில் தனது “ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படம் வெளியாக இருப்பதாகவும், இதற்கு காவல் துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரி, இயக்குநர் சேரன் கோவை மாநகரக் காவல் துறையிடம் நேற்று வியாழக்கிழமை மனு அளித்தார்.

நடிகரும் இயக்குநருமான சேரன், “ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற பெயரில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதை சி2எச் என்ற புதிய முறை மூலம் திரையிடுவதாக அறிவித்துள்ளார். திருட்டு டி.வி.டி.யை ஒழிக்கும் முயற்சியாகவும், சினிமா திரையிடலில் புதுமையைப் புகுத்தும் முயற்சியாகவும் சி2எச் அறிமுகமாக உள்ளது.

இதன்படி, பொதுமக்கள், ரசிகர்களின் வீடுகளுக்கே சென்று இந்தத் திரைப்படத்தின் டி.வி.டி. விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் வீடுதோறும் சென்று 10 ரூபாயைப் பெற்றுக் கொண்டு முன்பதிவு செய்து கொள்வார்கள்.

திரைப்படம் வெளியிடப்படும் நாளான பொங்கலன்று (ஜன.15) டி.வி.டி.யை வழங்கிவிட்டு மீதமுள்ள பணத்தைப் பெற்றுக் கொள்வதே இத்திட்டமாகும்.

இதையடுத்து, சி2எச் திரை வெளியீடு குறித்த விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த இயக்குநர் சேரன், மாநகரக் காவல் துறையில் ஒரு மனு அளித்தார்.

அதில், “ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படத்தை எங்களது முகவர்களைத் தவிர மற்றவர்கள் திருட்டுத்தனமாக டி.வி.டி. தயாரித்து விற்பதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதன் பின்னர், சேரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“திருட்டு டி.வி.டி. விற்பனை திரை உலகுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் முதலீடும், உழைப்பும் சுரண்டப்படுவதால் பலரும் தங்களது வாழ்வை இழந்து வருகின்றனர்.

ஓர் அங்கீகரிக்கப்பட்ட தொழிலைப் போன்றே திருட்டு டி.வி.டி. விற்பனை மாறிவிட்டது. மக்களும் குற்ற உணர்வு இல்லாமல் அவற்றை வாங்கிப் பார்க்கப் பழகிவிட்டனர்.

எனவே, திருட்டு டி.வி.டி.யைத் தடுப்பதற்காக சி2எச் முறையில் திரையிடலைத் தொடங்க உள்ளேன். இதற்காக 154 விநியோகஸ்தர்கள், 5 ஆயிரம் விற்பனையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாள்களில் சி2எச் முன்பதிவு தொடங்க உள்ளது.

ஏற்கெனவே, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த முறையை நமது நாட்டிலும் அறிமுகப்படுத்துகிறோம். கமல்ஹாசனின் “விஸ்வரூபம்’ திரைப்படம் டி.டி.எச். முறையில் வெளியாக இருந்த நிலையில், அதை சிலர் முடக்கிவிட்டனர். இருப்பினும், சி2எச் முறைக்கு திரைத்துறையில் உள்ள பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். மேலும், திரையரங்கு உரிமையாளர்களும் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். “ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படத்தைத் தொடர்ந்து “வாராயோ வெண்ணிலாவே’, “அப்பாவின் மீசை’, “கோடிட்ட இடத்தை நிரப்புக’ உள்ளிட்ட படங்களையும் இதேபோன்று திரையிட உள்ளதாகவும் சேரன் தெரிவித்தார்.