செய்திகள்

சேர்பியா மற்றும் குரோஷியாவின் இனவழிப்பு குற்றச் சாட்டுக்களை சர்வதேச நீதிமன்று நிராகரிப்பு

முன்னாள் யூகோசிலாவியாவில் இருந்து பிரிவதற்கான குரோஷிய யுத்தத்தின்போது சேர்பியா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகள் பரஸ்பரம் இனவழிப்பு குற்றச் சாட்டுக்களை சுமத்தியமையை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.

1991 ஆம் ஆண்டு வுகோவார் மற்றும் ஏனைய இடங்களில் சேர்பியா இனவழிப்பை நடத்தியதாக குரோஷிய அரசாங்கம் குற்றம்சாட்டியிருந்தது. பதிலுக்கு குரோஷியா , 200, 000 பேரை சேர்பிய அரசாங்கம் குரோஷியாவில் இருந்து அகற்றியதாக குற்றம் சுமத்தியது.

1991 முதல் 1995 வரையான காலப்பகுதியில் 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் அநேகம் பேர் குரோஷியர்களாவர். 1995 இல் குரோஷிய படைகள் சேர்பிய பகுதிகளில் தாக்குதல் நடத்தி 200,000 பேரை இடம்பெயர செய்தனர்.

இரண்டு நாடுகளினதும் இந்த இனவழிப்பு குற்றச்சாட்டை நிராகரித்த நீதிமன்றம் இரு நாடுகளுமே யுத்தத்தின்போது வன்முறைகளில் ஈடுபட்டதாகவும், இனவழிப்பு நடவடிக்கைகளுக்கான போதிய ஆதாரங்களை அவர்கள் முன்வைக்கவில்லை என்றும் கூறி தீர்ப்பளித்துள்ளது.