செய்திகள்

சேவைநயப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த மூன்று வருடங்களாக வைத்திய அத்தியட்சகராக சேவைசெய்து தற்போது முதுகலாநிதி பட்டமேல் படிப்புக்காகச் செல்லும் வைத்தியகலாநிதி மு.உமாசங்கருக்குத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைச் சமூகம் சேவைநயப்பு விழாவை நடத்த உள்ளது.

இன்றைய தினம் 27 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த சேவை நயப்பு விழா தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் முதலாம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளதாக நோயாளர் நலன் புரிச் சங்கச் செயலாளர் லயன் சி.ஹரிகரன் தெரிவித்தார்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு கேட்போர் கூடத்தில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி யோ.திவாகர் தலைமையில் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் மேற்படி நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பிரதமவிருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்..

ஆசியுரைகளை தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் துர்க்கா துரந்தரர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனும், உடுவில் தென்னிந்தியத் திருச்சபை பங்குத்தந்தை அதிவண.இ.ராஜ்குமாரும் வழங்குவர்.

வரவேற்புரையை தாதிய பரிபாலகர் சோ.இராசேந்திரனும் வாழ்த்துரைகளை வலி.வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் சோ.சுகிர்தன், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஏ.தேவநேசன், உளநல மருத்துவ நிபுணர் வைத்தியகலாநிதி சா.சிவயோகன், நோயாளர் நலன்புரிச் சங்க நிர்வாகசபை உறுப்பினர் வை.சுப்பிரமணியம் ஆகியோர் வழங்குவர்.

நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளரும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினருமாகிய லயன் சி.ஹரிகரனின் நன்றியுரையைத் தொடர்ந்து விழாநாயகர் கௌரவிப்பும் விழாநாயகர் வைத்தியகலாநிதி மு.உமாசங்கரின் ஏற்புரை
யும் இடம்பெறும். தொடர்ந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான வீடியோ ஒளிப்பதிவு மற்றும் கலைநிகழ்வுகளும் நடைபெறும்.