செய்திகள்

சைவ சமயத்தைக் காப்பாற்றுவதற்கு கல்விக் கட்டமைப்பிலும் சமூக செயற்பாட்டுக் கட்டமைப்பிலும் மாற்றங்கள் வேண்டும்: பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை (படங்கள்)

“ஒரு காலத்தில் இந்த நாட்டில் வாழ்ந்த 100 சத வீதமானோரில் 20 வீதமானோர் சைவலர்களாகக் காணப்பட்டார்கள்.எம்மவர்கள் வெளிநாட்டு மோகத்தில் சென்றதாலும்,இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்றதாலும்,வேறு மதங்களுக்கு மாற்றப்பட்ட காரணத்தாலும் தற்போது 100 இற்கு 12 வீதமானோரே சைவர்களாகக் காணப்படுகிறார்கள்.இந்த நிலைமை மிகவும் கவலைக்கிடமானது.ஏனைய சமயங்களிலிருக்கக் கூடிய அரசினுடைய உதவிகள்,சங்கங்கங்களுடைய உதவிகள் எங்களுக்கில்லை.சமயக் கட்டமைப்புக்கள் கூட வலுவானதாகவில்லை.எங்களுடைய சமயத்தை நாங்கள் காப்பாற்ற வேண்டுமானால் அர்ப்பணிப்புள்ள,சமூக சேவை மனப்பான்மையுடைய தனவந்தர்களும்,சேவையாளர்களும் முன்வர வேண்டும். இறுதியாக இந்துபோர்ட் இராசரத்தினத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்துக்களுக்கான பாடசாலைக் கட்டமைப்பு சார்ந்த பணிகள் தான் இந்துக்களின் காப்பரணாகவிருந்தது. தற்போது அந்தக் காப்பரணும் இல்லாமற் போய்விட்டது.இந்த நிலையில் எங்களுடைய சமுதாயத்தைக் காப்பாற்ற வேணடுமானால் கல்விக் கட்டமைப்பிலும்,சமூக செயற்பாட்டுக் கட்டமைப்பிலும் பல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது” இவ்வாறு வலியுறுத்திக் கூறினார் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பொ.பாலசுந்தரம்பிள்ளை.

கொக்குவில் யாழ்.விஷனின் கிருஷ்ணா அறநெறிப் பாடசாலைக்குப் புதிதாக அமைக்கப்பட்ட தியான மண்டபத் திறப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை(10.5.2015) யாழ்.விஷன் முதல்வர் கந்தையா சுசீந்திரன் தலைமையில் இடம்பெற்ற போது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தியான மண்டபத்தை நல்லை ஆதீன முதல்வருடன் இணைந்து திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் பௌத்த கல்விக்கு மூன்று பல்கலைக்கழகங்களும்,ஒரு பீடமுமிருக்கின்றன.அத்துடன் வேறு பல பல்கலைக்கழகங்களிலும் பௌத்த கல்விக்கான துறைகளுமிருக்கின்றன.கத்தோலிக்க மதத்தில் கூட ஒரு பல்கலைக்கழகக் கட்டமைப்பு காணப்படுகின்றது.இஸ்லாமிய மதத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரபிய இஸ்லாமிற்கென ஒரு பீடமிருக்கிறது.இதனால் அவர்கள் ஒவ்வொரு வருடத்திலும் கலைப் பீடத்திற்கு 250 மாணவர்களையும்,அரபிய இஸ்லாமிய பீடத்திற்கு 250 மாணவர்களையும் உள்வாங்குகின்றனர்.ஆனால் எங்களுடைய சைவ சமயத்திற்கு அவ்வாறான எந்தவொரு பல்கலைக்கழகங்களுமில்லை. பீடங்களுமில்லை. விசேட அனுமதிகள் கூட இல்லை.கலைப் பீடத்திற்குத் தெரிவு செய்யப்படுபவர்களில் குறிப்பிட்ட சிலர் மாத்திரம் தான் இந்துசமயம் சார்ந்த பாடங்களைப் பயில்கிறார்கள்.இதன் காரணமாக எங்கள் பாடசாலைகளில் இந்துசமயத்தைக் கற்பிப்பதற்குப் போதிய ஆசிரியர் வளமில்லாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுவது எம்மத்திலுள்ள பெரும் குறைபாடாகும்.

பரமேஸ்வராக் கல்லூரியை நாங்கள் இழந்தாலும் எங்களுக்கென ஒரு பல்கலைக்கழகத்தைப் பெற்றிருக்கின்றோம். இந்தப் பல்கலைக்கழகத்தில் வேறு பிள்ளைகளும் கல்வி பயிலலாம். ஆனால்,எங்கள் பிள்ளைகளுக்கு உரித்தான சொத்து யாழ்.பல்கலைக்கழகம் என்பதை நாங்கள் மறந்து விடக் கூடாது.

எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் பணத்தை விட மனிதவளமே முக்கியமான பேசு பொருளாக இருக்கப் போகிறது. ஏற்கனவே ஜப்பான்,இங்கிலாந்து,ஜேர்மனி,பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் வயது வந்தவர்களின் தொகை அதிகரித்து விட்டது. எமது நாட்டில் கூட அண்மைக்காலமாக வயது வந்தவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுகிறது. இலங்கையில் தற்போது நூறில் 12 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவுள்ளனர்.ஜப்பான் போன்ற நாடுகளில் 90 வயதைத் தாண்டியும் வாழ்வது சாதாரணமாகிப் போய்விட்டது.இந்த நிலையில் வளர்ச்சியடைந்த நாடுகளில் முதியவர்களின் தொகை அதிகரித்திருப்பது அந்தந்த நாடுகளுக்குத் தலையிடியாக மாறியிருக்கிறது.இதன்காரணமாக ஒவ்வொரு நாடுகளுடைய தொழிற்துறையை,அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாத மனிதவளம் இல்லாத இக்கட்டான நிலையேற்பட்டுள்ளது.

இலங்கையில் 50 ஆம் 60 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த பெற்றோருக்கு 9 வரையான பிள்ளைகள் காணப்பட்டார்கள்.தற்போது அவ்வாறு பிள்ளைகள் பிறப்பது அரிதாகி விட்டது.சென்னைக்குச் சென்று வந்தால் தான் ஒரு குழந்தையாவது பிறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது அனைத்து நாடுகளிலும் வயது கூடியவர்களின் தொகை அதிகரித்துள்ள காரணத்தால் அதிகளவில் பெண்களை வேலைப் பணிக்குக் கொண்டு வர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.பெண்களின் பங்களிப்பில்லாமல் நாட்டினுடைய பொருளாதாரத்தை ஒரு போதும் முன்னேற்ற முடியாது.பெண்கள் தற்போது கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்.ஆனால் அவர்கள் கல்வி கற்கும் திறனை மேலும் அதிகரிக்க வேண்டும்.நிறைய விடயங்களைக் கற்றுச் சுயமாக இயங்க வேண்டும்.அவ்வாறான நிலை எமது மண்ணில் ஏற்படும் போது தற்போது நிலவும் பெண்களுக்கெதிரான பல்வேறு வன்முறைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி வராது.ஆகவே பெண்களை நாம் வலுவூட்ட வேண்டும்.எமது சமுதாயத்திற்கு கல்வி,தொழில்நுட்பத் திறன்,நல்லொழுக்கம,இறைபக்தி மிக்க பிள்ளைகள் தேவைப்படுகிறார்கள்.பிள்ளைகளின் நலனில் பெற்றோர்களும்,மூத்தோர்களும் மிகவும் கரிசனையுடன் செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.

இவ் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் பிரதம விருந்தினராகவும்,யாழ்ப்பாணம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.மாணிக்கராஜா கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு உரையாற்றினர்.ஆசியுரையை நல்லை திருஞானசம்பந்த ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் நிகழ்த்தினார். இதன் போது கிருஷ்ணா அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பஜனை,ஆசிரியர்களின் இசைக்கச்சேரி என்பனவும் இடம்பெற்றன.விசேட நிகழ்வாக சகஜ யோகா நிலையத்தின் நிறுவுநர் ஸ்ரீ மாதாஜி நிர்மலாதேவி தலைமையில் மாணவர்களுக்கான சகஜ யோகா தியானப் பயிற்சியும் நடைபெற்றது. யாழ்.நகர் நிருபர்-

Araneri Padasaalai (1) Araneri Padasaalai (2) Araneri Padasaalai (3) Araneri Padasaalai (4) Araneri Padasaalai (5) Araneri Padasaalai (6) Araneri Padasaalai (7) Araneri Padasaalai (8) Araneri Padasaalai (10) Araneri Padasaalai (11) Araneri Padasaalai (12) Araneri Padasaalai (13) Araneri Padasaalai (14)