செய்திகள்

சொத்துப் பத்திரங்களை மீட்டுத் தரக் கோரி நடிகர் கஞ்சா கருப்பு புகார்

தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள தனது சொத்துப் பத்திரங்களை மீட்டுத் தருமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நடிகர் கஞ்சா கருப்பு வியாழக்கிழமை புகார் மனு அளித்தார்.

புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:

“வேல்முருகன் போர்வெல்ஸ்’ என்ற திரைப்படத்தில் என்னை (கஞ்சா கருப்பு) தயாரிப்பாளராக சேர்த்துக்கொள்வதாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த இயக்குநர் கோபியும், சிவகங்கை மாவட்டம், பாவாகுடியை சேர்ந்த காளையப்பனும் கூறினர்.

இதை நம்பி எனது சொத்துப் பத்திரங்களை இவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் மதுரையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 30 லட்சத்துக்கு பத்திரங்களை அடமானம் வைத்துள்ளனர்.

படம் வெளியானதும் பத்திரங்களை மீட்டுத் தருவதாகக் கூறிய இவர்கள், இதுவரை பத்திரங்களை மீட்டுத் தரவில்லை.

இந்தத் திரைப்படம் 2014 நவம்பரில் வெளியிடப்பட்டது. படம் வெளியானதும் ஒப்பந்தப்படி பத்திரங்களை மீட்டுத் தராமல் என்னை ஏமாற்றி வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பத்திரங்களை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராமசாமி விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை உத்தரவிட்டுள்ளார்.