செய்திகள்

சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளேன்: ஜெயலலிதா

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதோடு, சொல்லாத பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் தனது அரசு நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் உரை நிகழ்த்திய ஜெயலலிதா, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்காத அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா விதைகள், அம்மா மருந்தகங்கள் என பல்வேறு திட்டங்களை தான் நிறைவேற்றியதாகக் குறிப்பிட்டார்.

தனது குழந்தைகளுக்கு எப்போது என்ன தேவை, அதை எப்போது கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் ஒரு தாய்க்கு மட்டும்தான் தெரியும் எனக் குறிப்பிட்ட ஜெயலலிதா, அதுபோல், தமிழக மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி, தனக்குத்தான் தெரியும் என்றும் கூறினார். கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், மின் உற்பத்தியை அதிகரித்ததன் காரணமாக, இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார்.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதான் காரணம் என குற்றம் சாட்டிய ஜெயலலிதா, தனது இந்த குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

N5