செய்திகள்

சோனியா கூறியே மத்திய அமைச்சர்களுக்கான அழைப்பை ஜெ. ரத்து செய்தார்: சுப்பிரமணியசுவாமி

ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்கு மத்திய அமைச்சர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அரசு அழைப்பிதழ் அனுப்பியதாகவும் சோனியா கூறியதால் ஜெயலலிதாவே இதனை ரத்து செய்தார் என்று சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ளார். சென்னையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற விழாவில் அவர் முதல்வராக பதவியேற்றார்.

இப்பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ரவிசங்கர் பிரசாத் என பலரும் ஆஜராவார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனிடையே இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அமைச்சர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு அழைப்பிதழை அனுப்பியது. ஆனால் சோனியா கூறியதால் சசிகலா அறிவுறுத்தலால் அவற்றை ஜெயலலிதா ரத்து செய்துவிட்டார் என்று கூறி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி. சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் சோனியா காந்தியின் பெயரை எப்போதும் நேரடியாக குறிப்பிடாமல் TDK என சுருக்கமாக குறிப்பிடுவார். ராமாயணத்தில் வரும் அசுரர் குலத்து தடாகை என்ற கதாபத்திரத்தின் சுருக்கமாக TDK என சோனியாவுக்கு நாமகரணம் சூட்டியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி .