செய்திகள்

‘ஜனவசம’ அரச தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தவது யார்?

மலையகத்தில் வெள்ளையர்கள் காலம்தொட்டு பெருந்தோட்ட பகுதிகளில் கோப்பி முதல் தேயிலை வரை பயிர்ச்செய்கைப்பட்டு வருகின்றது. அந்தவைகயில் காலத்துக்கு காலம் மாறுப்பட்ட பயிர்செய்கையில் இறப்பர் தேயிலை மாத்திரமே இப்பொழுது காணப்படுகின்றன.

இந்தவகையில் தேயிலை பயிர்செய்கை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கிய பங்காக விளங்குகின்றது. இவ்வாறான பங்களிப்பை சுமார் 200 வருடங்களாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் வழங்கி வருகின்றார்கள்.

 இவ்வாறு இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு அந்நிய செலவாணியின் முதுகெழும்பாக திகழும் தோட்ட தொழிலாளர்கள் வெள்ளையர்கள் காலம் முதல் குத்தகைகாரர்களின் காலம் வரை தனது அடிப்படை வசதிகளில் ஏதாயினும் ஒன்று குறைவாக காணப்படும் வகையில் வாழ்ந்து வருகின்றனர்.

 பிரித்தானியர்கள் அமைத்து வைத்த குதிரை பட்டிகளான தொடர் வீடுகளில் மக்கள் குடியமர்ந்து வாழ்ந்த வந்த சரித்திரம் இன்று வரை பேசப்பட்டு வருகின்றது.

 மாகாண அடிப்படையில் மட்டுமன்றி மாவட்ட அடிப்படையிலும் காணப்படும் பெருந்தோட்ட பகுதிகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என மலையக தமிழ் அரசியல்வாதிகள் ஆரம்பம் முதல் இன்று வரை அரும்பாடுபட்டாலும் மாற்றத்திற்கான செயற்பாடுகள் அனைத்து தோட்டங்களுக்கும் முழுமையாக சென்றடையவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கின்றது.

 தோட்ட தொழிலாளர்களான மக்கள் தமது உரிமையை பாதுகாத்து கொள்வதற்கென அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் மட்டுமன்றி தொழிலாளர்களால் தெரிசு செய்யப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக நாட்டில் காணப்படும் உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தமது பிரதிநிதிகளை அனுப்புவது காலத்துக்கு காலம் வாக்குகளை அளித்து வெற்றியடைய செய்துள்ளனர்.IMG_0050

 மலையக பெருந்தோட்டங்கள் வெள்ளையர்கள் ஆட்சி, அதன்பின் அரசாங்கத்தின் பராமரிப்பு அதனை தொடர்ந்து தனியார் முதலாளிகள் என பராமரிக்கப்பட்டு வந்த தோட்டப்பகுதிகள் தற்பொழுது பெரும்பாலான தோட்டங்கள் கம்பனிகாரர்களும் பராமரித்து வருகின்றனர்.

 இவ்வாறாக பராமரிக்கப்பட்டு வரும் தோட்டப்பகுதிகள் பெரும்பாலானவை கம்பனிகாரர்களிடம் இருக்கின்றது. ஒரு சில தோட்டங்கள் முதலாளிமார்களிடம் இருக்கின்றது. இருந்த போதிலும் ஆரம்பத்தில் இருந்து அதிக ஏக்கர்களை கொண்ட தோட்டங்கள் சில வருமான அடிப்படையில் அரசாங்கத்தின் பராமரிப்பில் ஜனவசம (அரச பெருந்தோட்ட யாக்கம்) எனும் அரச பெபெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் இயங்கி வருகின்றது.

 விரல்விட்டு சொல்லும் அளவில் இயங்கி வரும் ஜனவசம தோட்டங்கள் இன்று காணப்படுகின்ற நிலையில் அடிப்படை வசதிகள் இன்றி வட்டவளை பிரதேசத்தின் மவூன்ஜீன் எனும் தோட்டம் காணப்படுகின்றது.

 இங்கு நேரடியாக சென்று அங்குள்ள மக்களிடம் தொடர்பு கொண்டு அவர்களின் வாழ்வாதார நிலையினை கண்டறிப்பட்ட போது கிடைத்த தகவல்கள் இவையாகும்.IMG_0106

 இதன் அடிப்படையில் இலங்கையில் அதிகமான மழை வீழ்ச்சியினை கொண்ட வரலாறு மிக்க வட்டவளையில் வட்டவளை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2.5 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் மவூன்ஜீன் தோட்டத்தில் மக்களுடைய மற்றும் அதன் சூழல் தொடர்பான பல்வேறு விடயங்கள் கண்டறியப்பட்டது.

 சுமார் 380 ஏக்கர்களை கொண்ட இத்தோட்டத்தில் ஆரம்ப காலத்தில் அதிகபடியான தேயிலை விழைந்துள்ளது. சுமார் நாள் ஒன்றுக்கு 60 ஆயரம் கிலோ வரை தேயிலை கொழுந்து பறிக்கப்பட்ட இத்தோட்டத்தில் இன்று ஆயிரம் தொடக்கம் 1500 கிலோ வரை தான் தேயிலை கொழுந்து பறிக்கப்பட்டு வருகின்றது.

 இத்தோட்ட நிலங்களில் நான்கில் மூன்று பகுதி காடாகிய உள்ள நிலையில் கால்வாசி பங்கில் சுமார் 144 பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் தமது நாளாந்த வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர்.IMG_0087

 இங்கு வசிக்கின்ற மக்களின் 924 பேருக்கு வாக்குரிமைகள் இருக்கின்றது. அவ்வப்போது நடைபெறுகின்ற தேர்தல் காலங்களில் இவர்கள் தம் வாக்குகளை அளித்தும் வருகின்றனர்.

இத்தோட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலை சுமார் 45 வருடங்களாக மூடப்பட்டு இருக்கின்றது. ஆனால் அத்தொழிற்சாலையில் ஆங்காங்கே இயந்திரங்கள் காணப்பட்டாலும் இயக்க செயற்பாடுகள் அற்றநிலையில் அவ் இயந்திரங்கள் காணப்படுகின்றமை மனத்துக்கு வருத்தத்தை தருவதாக அங்குள்ள தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 இது மட்டுமன்றி இத்தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதிகள் பாவனைக்குதவாத நிலையில் ஆங்காங்கே திருத்தபணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில் காணப்படுகின்றது.

 விரல்விட்டு காட்டக்கூடிய நிலையில் மக்களின் தொடர்வீட்டு குடிருப்புகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து காணப்படும் நிலையில் இருக்கின்ற அதேவேளை கூரை தகடுகள் சல்லடையாகி காட்சியளிக்கின்றது.

 இதனை மறைப்பதற்காக தொழிலாளர்கள் தங்களது சொந்த பணத்தில் கூரை தகடுகள் மற்றும் தார் சீட்டுகளை கற்களின் அணை கொண்டு பொருத்தப்பட்ட நிலையில் காணப்படும் அவல நிலை இன்று இருக்கின்றது.

 அதேவேளை இங்கு வசிக்கின்ற தொழிலாளர்கள் அவர்களின் பிள்ளைகளை பராமரிப்பதற்கான பராமரிப்பு இல்லம் வசதி குறைந்த நிலையில் காணப்படுகின்றது.

 அங்கு பிள்ளைகளுக்கான குடிநீர் வசதி, மலசலகூட வசதி போன்றவை குறைப்பாடாகவே காணப்படுகின்றது. மக்கள் குடியிருப்புகள் காணப்பட்டாலும் அக்குடியிருப்புகளில் வசிக்ககூடிய நிலை இல்லாததன் காரணமாக பல்வேறு குடியிருப்புகள் மூடப்பட்ட நிலையில் காட்சியளிக்கின்றது.IMG_0007

 இவை மட்டுமல்லாது இம்மக்களுக்கான மாதாந்த வேதனம் குறித்த திகதியில் கிடைக்காமல் காலம் இழுக்கப்பட்டு 16ம் மற்றும் 17ம் திகதிகளில் வழங்கப்படுகின்றமையை மக்கள் சுட்டிக்காட்டிகின்றனர்.

 அத்தோடு பண்டிகை கால முற்பணம் முதல் விசேட கொடுப்பணவுகள் அடங்களாக ஊழியர் சேமலாப நிதி முறையாக இடம்பெறவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

 மக்களிடம் இது தொடர்பாக கேட்டறிந்த போது,

 எத்தனையோ அரசியல்வாதிகள் தேர்தல் காலத்திதல் மாத்திரம் இங்கு வருகை தந்து தமது தேவைகளான வாக்குகளுக்கு மட்டும் ஆசை பேச்சுகளால் வாக்குறுதிகளை வழங்கி செல்கின்றனர்.

 தாமும் இப்பொழுது இங்குள்ள பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என எண்ணி வாக்குகளை வழங்கி விடுகின்றோம். இவ்வாறாகவே பல வருடங்களாக நாம் ஏமாந்து வருகின்றோம். இங்கு இப்பொழுது உள்ள சூழ்நிலையில் மாதம் ஒன்றுக்கு 16 நாட்கள் மாத்திரமே தொழில் வழங்கப்படுகின்றது.

 இதனால் வருமான ரீதியில் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளோம். ஆனால் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களுக்கு சந்தா பணத்தை நிறுத்தவில்லை. ஆனால் எதிர்காலத்தில் எங்களது சந்தா பணமும் கூட சென்றடையாமல் இருப்பதுக்கு இங்குள்ள பெண் தொழிலாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

 இத்தோட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பு நிமிர்த்தம் வெளி இடங்களுக்கு தொழில் தேடி சென்றுள்ளனர்.  கலை இழந்து போயுள்ள இத்தோட்டத்திற்கு விமோர்சனம் எப்போது தான் கிட்டும் என்ற ஏக்கத்தில் வாழ்கின்ற இத்தொழிலாளர்கள் அவர்களின் நிலையினை வெளிகொண்டு வர பிரதான வீதியில் போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர். இதன் பின்னும் கவனிப்பாராற்ற நிலையில் மலையக தமிழ் அரசியல்வாதிகள் தம்மை புறக்கணிப்பதாக இங்குள்ள தொழிலாளர்கள் தனது வேதனையில் தெரிவித்தனர்.

 இங்கு விசேட குழு ஒன்றை இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக அனுப்பப்பட்டு நிலைமைகளை கண்டறிந்து இவர்களுக்கான அடிப்படை வசதி தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என இங்குள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 சம்பள உயர்வு வழங்காவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளியுங்கள் என கூவூம் அரசாங்கம் அதன் கையிருப்பில் இருக்கும் ஜனவசம தோட்டங்களை முதலில் அபிவிருத்தி செய்து காட்ட வேண்டும் என்பதை கருத்திற்கொண்டு இங்குள்ள மக்களுக்கு விடிவு கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இங்குள்ள மக்கள் தமது அங்காலாய்ப்பை தெரிவிக்கின்றனர்.

n10