செய்திகள்

ஜனாதிபதிக்கு சுமந்திரன் புகழாரம்

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் இதற்கு முன் வந்த ஜனாதிபதிகள் வாக்குறுதி கொடுத்து, நாடாளுமன்றப் பெரும்பான்மையோடு அவர்கள் ஆட்சி செய்தபோதும் கடைசியில், அவர்கள் அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட வரலாறுகளை புதிய ஜனாதிபதி மாற்றியமைத்திருக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் கிழக்கு மாகாண அமைச்சர் கே. துரைராஜசிங்கத்தினை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (09) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பேன் என்று தேர்தலுக்கு முன்னர் கூறிய வாக்குறுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றியிருக்கின்றார். நாடாளுமன்றப் பெரும்பான்மை இல்லாத மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் ஒரு விசித்திரமான முறையிலே நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கின்றது.

இதற்கு முன்வந்தவர்கள் வாக்குறுதி கொடுத்து வென்றார்கள். இவர் வாக்குறுதி கொடுத்து வென்று அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியும் காட்டியிருப்பதால் அவர் மீது நம்பிக்கை இருக்கின்றது என்று கூறுகின்றோம். நாட்டிலே சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகமும் வீழ்ச்சியடையுமாக இருந்தால், முதலிலே மிக மோசமாகப் பாதிப்படைகின்றவர்கள் தமிழ் மக்கள்தான்.

இது நாம் அனுபவத்தில் கண்ட ஒரு உண்மை. அடக்கு முறைகளிலிருந்து மீள் எழுவதற்காக நாங்கள் பல்வேறு விதங்களிலே எங்களுடைய போராட்டங்களை முன்னெடுத்து, அவற்றிலே தோல்வியடைந்தோம்.

சர்வதேசத்தின் துணையோடாவது மீண்டும் எமது சொந்த மண்ணிலே எழுந்து நிற்போம் என்று கடந்த ஐந்தாண்டுகளாக மஹிந்த அரசோடு சமர் புரிந்து, விட்டுக்கொடுக்காமல் எங்களுடைய நகர்வுகளை மேற்கொண்டோம். அதேவேளை, மஹிந்த தமிழ் மக்களுக்கு மட்டும் அநியாயம் செய்ததோடு நின்று விடவில்லை.

முஸ்லிம் மக்களுடைய உரிமைகளையும் பறித்து அவர்களையும் பகைத்துக் கொண்டு, தன்னுடைய சொந்த சிங்கள மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பறித்துக் கொண்டு கோலோச்சினார்.

அதனால் தான் நாட்டிலே இந்த புதிய நல்லாட்சிக்கான மாற்றம் ஏற்பட்டது. சரிந்து கிடந்த ஜனநாயகத்தை நிமிர்த்தி விடுவதிலே தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பங்கெடுத்தோம். ஜனநாயக வழியிலே போராட எங்களுக்குச் சந்தர்ப்பம் கிட்டியிருக்கின்றது. நாட்டில் ஜனநாயகமே இல்லையென்றிருந்த சூழலிலே, எங்களுடைய போராட்டங்கள் எதனையும் முன்னெடுக்க முடியாது.

அதனால்தான் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவேன் என்று மைத்திரிபால சிறிசேன முன்வந்தபோது, வேறெந்த நிபந்தனைகளுமில்லாமல் தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பு அவருக்கு ஆதரவளித்தது. பகிரங்கமாகக் கொடுத்த வாக்குறுதிகளிலே பலவற்றை அவர் நிறைவேற்றியிருக்கின்றார்.

தமிழர்களின் பூர்வீக நிலங்களை இராணுவத்தினரின் பாவினையிலிருந்து மீட்டெடுக்கும் ஆரம்ப நடவடிக்கைகளை நாம் நேரில் காணக்கூடியதாகவுள்ளது. வடக்கில் 1,100 ஏக்கரும் கிழக்கில் சம்பூரிலே 1,300 ஏக்கரும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ ஆட்சியாளர்களாக இருந்த ஆளுநர்கள் மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.

அடுத்து வருகின்ற பொதுத் தேர்தலின் பின்னர், தமிழர்களுக்கான பல விடயங்களை அவர்கள் செய்தாக வேண்டும். அரசாங்கம் இந்தப் பிடியிலிருந்து பின்வாங்கவும் முடியாது. எங்களது இலக்குகளை அடைவதற்கான சூழல் கனிந்து வருகின்றது. முழு உலகமும் இந்த அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ள சூழ்நிலையில், அவர்கள் எமக்கான அபிலாஷைகளை நிறைவேற்றியே ஆக வேண்டும்’ என்றார்.