செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளர் யார்? சந்திரிகாவின் முக்கிய நகர்வு

ஜனவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதில் எதிர்க்கட்சிகளிடையே முரண்பாடுகள் மேலோங்கியுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க புதிய அரசியல் நகர்வுகளை மேற்கொண்டிருப்பதாக தெரியவந்திருக்கின்றது.

லண்டனில் தங்கியிருந்த சந்திரிகா குமாரதுங்க, கடந்த வாரம் கொழும்பு திரும்பியுள்ளதுடன், எதிரணி முக்கியஸ்த்தர்களுடன் இது குறித்து பேச்சுக்களையும் நடத்தியுள்ளார். எதிர்க்கட்சிகள் அனைத்தினாலும் ஏற்றுக்கொள்ளத்தக்க பொதுவான வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து அவரும் ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.

இருந்தபோதிலும் பொதுவேட்பாளராக சந்திரிகா குமாரதுங்க போட்டியிடுவாரா என்பதில் தெளிவற்ற நிலைதான் காணப்படுகின்றது. பொது வேட்பாளராகப் போட்டியிடவேண்டும் என ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை சந்திரிகா குமாரதுங்க முன்னர் மறுத்திருந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், ஐ.தே.க.வுக்குள்ளேயே அதற்கு போதிய ஆதரவில்லாதததால் பொது வேட்பாளர் தெரிவில் இழுபறி நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் சந்திரிகாவும் களமிறங்கியிருப்பது கொழும்பு அரசியல் வட்டாரங்களை பரபரப்பாக்கியுள்ளது.