செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திபாலவுக்கே ஹெல உறுமயஆதரவு: சம்பிக்க ரணவக்க அறிவிப்பு

ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஜாதிக ஹெல உறுமய ஆதரவு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தொடர்ந்து கருத்து வெளியிட்ட சம்பிக்க ரணவக்க,

“மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்ற பின்னர், அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்குமாறு மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கிறோம். தேர்தலுக்குப் பின்னர், மகிந்த ராஜபக்சவை எந்தவொரு தரப்பினரும், சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம்.

சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்தவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்க ஜாதிக ஹெல உறுமய முடிவு செய்துள்ளது. மைத்திரிபால சிறிசேனவுடன் தனியானதொரு புரிந்துணர்வு உடன்பாட்டில் ஜாதிக ஹெல உறுமய கையெழுத்திடும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வில் ஜாதிக ஹெல உறுமய பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.