செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை ஆதரித்தோருக்கு பொலிஸ் பாதுகாப்பு

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய மாகாணசபை உறுப்பினர்களான ஹிருணிகா பிரேமச்சந்திர, அசாத் சாலி, மனோ கணேசன், எஸ்.எம்.மரைக்கார் மற்றும் பிரசன்ன சோலங்கராச்சி ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

போதைப்பொருள் பாவனைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தனக்கு அச்சுறுதலுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திர கூறியதற்கமைவாக அவருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின் பேரில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்க் கட்சிகளின் போக்குகளை தொடர்ந்து விமர்சித்து வருவதால் தனக்கு உயிரச்சுறுத்தலுள்ளதாகவும் பல இணையத்தளங்கள் பிழையான கருத்துகளை தன்மீது சுமத்தி வருவதாகவும் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி இதனால் தனக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முல்லேரியாகொட்டிகாவத்த பிரதேச சபை உறுப்பினர் பிரசன்ன சோலங்கராச்சிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவரது செயலாளர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமெனவும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தமக்கான பாதுகாப்பை கோரும்பட்சத்தில் புலனாய்வுத் துறையினரின் ஆலோசனைக்கமைய பாதுகாப்பளிக்கப்படும் அதேவேளை, வழங்கப்பட்ட பாதுகாப்பை எந்தவொரு நேரத்திலும் நீக்குவதற்கான அதிகாரம் எமக்குள்ளது என்றார்.