செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் தேசியமும்

இலங்கைத் தீவில் எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலானது வரலாற்று முக்கிய மிக்க ஜனாதிபதித் தேர்தலாக அமைந்துள்ளது. இத் தேர்தலானது அடிப்படையில் இரண்டு பிரதான சிங்கள கடும் போக்குவாதிகளுக்கிடையிலான தேர்தலாக நோக்கப்படுகின்ற போதும் உண்மையில் ஒரு வகையான சர்வாதிகார ஆட்சிக்கும் ஜனனாயக மறுமலர்ச்சியை வேண்டி நிற்கின்ற அந்த சர்வாதிகார ஆட்சியால் பாதிக்கப்பட்டு நிற்கின்ற மக்களுக்கும் இடையிலான தேர்தலாகவே அமைந்துள்ளது. இதில் சர்வாதிகார ஆட்சிக்கு தலைமை தாங்குபவராக மகிந்த ராஜபக்ஷவும் அந்த ஆட்சிமுறையை எதிர்த்து அவரின் கட்சியில் இருந்து பிரிந்து வந்து எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்புக்கு தலைமை தாங்குபவரான மைத்திரிபாலசிறிசேனவும் பிரதான இரண்டு வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இம் முறையும் மகிந்த தனது வழமையான புலி பூச்சாண்டி என்ற தேர்தல் கால அஸ்திரத்தை கையில் எடுத்து வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளார். இது அடிமட்ட சிங்கள மக்களை இனவாத அடிப்படையில் உசுப்பேற்றி அந்த வாக்குகளை முன்னைய தேர்தல்களில் பெற்று வெற்றியீட்டியதைப் போல இம்முறையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் தனது தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளார். அதேநேரம் வடகிழக்கு வாழ் தமிழ் மக்கள் தனக்கு ஒரு போதும் வாக்களிக்க மாட்டார்கள் என்ற உண்மையை உணர்ந்து அதேநேரம் அம்மக்கள் எதிர்தரப்பிற்கு வாக்களித்து விடக் கூடாது என்ற வகையில் உளவியல் ரீதியிலான தாக்குதலாக வுNயு – மைத்திரி திரைமறைவு உடன்படிக்கை, நாடு இரண்டாக உடையப் போகிறது, தமிழ் னுயைளிழசயவும் மேற்குலகும் தனக்கெதிராக செயற்படுகின்றார்கள் போன்ற கடும் விமர்சனங்களை தனது இரண்டாவது தேர்தல் வாக்கு வேட்டை ஆயுதமாக பிரயோகிக்கிறார். இதனால் வடகிழக்கு வாழ் தமிழ் மக்களும் அதன் தலைமைகளும் ஒன்றில் எதிர்த்தரப்பை வெளிப்படையாக ஆதரிக்க முன்வரமாட்டார்கள் அல்லது வெளிப்படையாக ஆதரிக்க முற்பட்டால் அதை வைத்து மேலும் சிங்கள மக்களின் வாக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்ற வகையில் மிகத் தந்திரமாக தனது இரண்டாவது தேர்தல் ஆயுதத்தைப் பயன்படுத்துகிறார்.
sam-39

மைதிரியைப் பொறத்தவரையில் எதிர் அணியின் கூட்டமைப்புக்கு தலைமை தாங்குவதுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு ஜனநாயக ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்தல் சர்வாதிகார குடும்ப ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவருதல் நாட்டையே பயங்கரவாதத்தை ஒழித்த போர்வீரர்களையோ ஒரு போதும் காட்டிக் கொடுக்கப்போவதில்லை போன்றவற்றை தனது பிரதான தேர்தல் விஞ்ஞாபனமாக முன் வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் இளங்கியுள்ளார். இதனூடாக மாற்றம் வேண்டி நிற்கின்ற மக்களினதும் கடும் சிங்கள பௌத்த நிலைப்பாட்டைக் கொண்ட மக்களினதும் வாக்குகளை கவர்ந்திளுக்க முடியும் என்ற வகையில் தேர்தல் வியூகத்தை அமைத்துள்ளார். மைத்திரிக்கு இத் தேர்தலில் பிரதான சாதகமான விடயம் என்னவென்றால் இவரின் கூட்டமைப்பில் சிங்கள கடும்போக்குவாத கட்சிகளும் அதன் தலைவர்களும் மற்றும் நடுநிலையான மென்போக்கான கட்சிகளும் அதன் தலைவர்களும் ஒரே அணியில் திரண்டு நிற்பதாகும்.
சிங்கள தேசமானது இவ்விரண்டணியாக பிரிந்து நின்ற இத்தேர்தலை சந்திக்கின்ற நிலையில் தமிழ் பேசும் மக்களின் நிலையோ திரிசங்கு நிலைக்கு ஒப்பானதாக உள்ளது. அதாவது இரண்டு தலைவர்களுமே தாம் ஒருத்தருக்கொருத்தர் சலைத்தவர்கள் அல்ல என நிறுவமுற்படுகின்றனரே தவிர சிறுபான்மையினரை கிஞ்சித்தும் கணக்கில் எடுப்பதற்கு தயாரில்லை. இதை பழைய ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனங்களுடன் ஒப்பீடும் போது தெள்ளத்தெளிவாக தெரியக் கூடியதாக இருக்கிறது.
இதற்கு பிரதான காரணமாக தமிழ் மக்களின் பிரச்சனையானது தற்போது இலங்கைத் தீவில் அரசியல் பொருளாதார ரீதியாக செல்வாக்கு செலுத்துகின்ற நிலையில் இருந்து மிகவும் பலகீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதும் இதை ஒரு கொதிநிலையில் வைத்திருக்க தவறியதும் அதாவது வடகிழக்க வாழ் தமிழ் மக்கள் அரசியல் ரீதியல் மிகப்பலமாகக் கட்டியெழுப்பத் தவறியமையும் காரணங்களாக அமைகின்றன ( தனது விடுதலைக்குத் தாமே போராடாமல் மற்றவர்கள் வருடத்திற்கு ஒரிரு தடவையில் பலர் கூடி விடுதலைப் பெற்றுத் தருவார்கள் என்று இருப்பதும் ஒரு காரணமாகிறது)
இனி இத் தேர்தலில் தமிழ் மக்களும் அவர்களின் தலைவர்களும் எப்படி செயற்பட வேண்டும் என்று ஆராய்ந்து பார்ப்போமானால் எமக்கு இரண்டே இரண்டு தெரிவுகளே உள்ளது. ஒன்று இத்தேர்தலை முற்றுமுழுதாக பகிஸ்கரிப்பது. அதாவது வாக்களிப்பிலிருந்து விலகி நிற்பது அல்லது வாக்களிப்பில் பங்குபற்றுவது.
sam-40

இதில் முதலாவதாக கூறப்பட்ட தேர்தலை பகிஷ்கரிப்பதை பற்றி எடுத்துக்கொண்டால் இதனூடாக தமிழ்மக்கள் அடையப்போகும் நன்மைதான் என்ன? அது உலகிற்கு என்னத்தைச் சொல்ல முற்படும் போன்ற கோள்விகளுக்கு எதுவிதமான பதிலையும் தரப்போவதில்லை. மாறாக சிங்கள தேசத்திற்கும் உலகிற்கும் எதிர்வினையான தாக்கத்தையே ஏற்படுத்தும். அதேநேரம் தமிழ் மக்களை அரசியல் ரீதியில் கட்டியெழுப்புதல் ஒருங்கிணைத்தல் போன்ற செயற்பாடுகளை மேலும் பாதிப்படையச் செய்யும். எம்மக்களை ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளில் நம்பிக்கையற்று தூர விலகி இருப்பதற்கும் மேலும் வழிகோலுமே தவிர அதுவித நன்மையையும் தந்துவிடப் போவதில்லை.
இரண்டாவது தெரிவான வாக்களித்தல் என்பதை எடுத்துக்கொண்டால் யாருக்கு வாக்களித்தல் என்றே கேள்வியே முதலில் முன்வரும். இதில் இரண்டு தலைவர்களுமே சிங்கள தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள். இவர்களில் எவருக்கும் வாக்களித்தாலும் தமிழ் மக்களை பெறுத்தவரை ஒன்றுமே கிடைக்கப் போவதில்லை. ஆனால் தலைவர்களையும் அவர்களின் சிந்தனைகளையும் புறந்தள்ளிப் பார்ப்போமேயானால் கணிசமான இலங்கையர்கள் ஒரு மாற்றத்தை அதாவது தற்போதுள்ள ஆட்சியில் விரக்தியடைந்த நிலையில் ஜனனாயக ரீதியிலான செயற்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்ற நிலையில் உள்ளார்கள்.

தமிழ் மக்களாகிய நாமும் எமது வாக்குரிமையினை பயன்படுத்துவதினூடாக சிங்கள சகோதரர்களுக்கு மாற்றத்தை வேண்டி நிற்கின்றவர்களுக்கு ஒரு செய்தியை தெளிவாக உரத்து கூறமுடியும். அதாவது நாம் சிங்கள இனவாத தலைமைகளுக்கு எமது வாக்கை அளிக்கவில்லை.  ஒடுக்கப்பட்ட இனம் என்ற வகையில் அதன் வலியும் துன்பமும் நன்றாக உணர்ந்தவர்கள் என்ற வகையில் சர்வாதிகார ஆட்சியில் சிக்கி சீரழிகின்ற சிங்கள சகோதரர்களுக்கு உதவுவதற்காக முன்வந்துள்ளோம். இது மீண்டும் தமிழ் மக்களால் சிங்கள மக்களும் சமாதானத்திற்காக நீட்டப்படுகின்ற கையொன்றும் அதைப் பற்றிப் பிடிப்பதோ அல்லது உதறித்தள்ளுவதோ முழுக்க முழுக்க உங்களின் கைகளில் தான் உள்ளது என்ற செய்தியை தெளிவாகக் கூற வேண்டும். அதாவது நீங்கள் எமது பிரச்சினையை புரிந்து கொண்டு எமக்கான தீர்வை முன்வைக்கத் தவறுவீர்களாயின் நாம் ஏற்கனவே கூறியபடி ஜனநாயகரீதியிலான போராட்டங்களை விஸ்தரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம்.
sam-41

தமிழ் மக்கள் வாக்களிப்பில் பங்குபற்றி மாற்றத்தை வேண்டி நிற்பவர்களை வெற்றியீட்டுவதினூடாக வெற்றியின் பங்காளனாக மாறலாம். இது சிங்கள சகோதரர்களையும் அதன் தலைவர்களையும் தமிழ் மக்களின் பிரச்சினையைப் பற்றி சிந்திக்கத்  தூண்டலாம்.  உலகத்தின் பார்வையில் மீண்டும் தமிழ் தேசியத்தின் பற்றுதியை வெளிப்படுத்தக் கிடைத்த சந்தர்ப்பமாகவும் அமையும்.
அதேவேளை இம்முயற்சியானது தமிழ் மக்களை பொறுத்தவரை அரசியல் ரீதியாக ஒரு அணியில் திரட்டுதல் அதனூடாக தமிழ் தேசியத்தை வலுப்படுத்தல், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தயார்படுத்தல் போன்ற செயற்பாடுகளை இலகுபடுத்தும்.
அதற்காக, சிங்கள கட்சிகளுடன் ஒரே மடையில் ஏறி நின்று வாக்கு கேட்பதல்ல. முன்னர் குறிப்பிட்டபடி, நாம் எமது மக்களை அரசியல் ரீதியில் அணி திரட்டுவதற்கு கிடைத்த சந்தர்ப்பமாக பயன்படுத்தி  சர்வதேச ஊடகங்களின் பார்வை முழுவதும் இலங்கை தீவை குறிவைத்துள்ள இச் சந்தர்ப்பத்தில் நமது மண்ணும் மக்களும் எவ்வாறான கட்டமைப்பு சார் அழிவை எதிர்கொள்கிறார்கள் என்பதை கூறுவதுடன்  தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான குரலை மேலும் வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

அத்துடன், சிங்களம் தனது வாயால் தேர்தலை மையப்படுத்தி தனது இன்மை முகத்தினூடாக கூறுகின்ற உண்மையான விடயங்களான இராணுவத்தை ஒருபோதும் குறைப்பதற்கு தயார் இல்லை, மனித உரிமை மீறல் சம்பந்தமான எந்த ஒரு வெளிநாட்டு விசாரணைக்கும் இடம் இல்லை- வேண்டுமானால் மீண்டுமொரு உள்ளக விசாரணைக்கு குழு ஒன்றை நியமிக்க முடியும் போன்றவற்றையும் (அதாவது கடந்த முறை ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் சபை அமர்வில் இவற்றை நடைமுறைப்படுத்திவிட்டதாக அல்லது நடைமுறைப்படுத்துவதாக உரத்து குரல் கொடுத்த சிங்கள தேசம்), பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அரசியல் தீர்வையும் ஒருபோதும் வழங்கப்போவதில்லை என்பதை அந்த மண்ணில் வைத்து அங்கு குவிந்துள்ள சர்வதேச ஊடகவியலாளர்கள், ராஜதந்திரிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் முன் நாம் முன்வைக்கும்போது எமது பிரச்சினையை சர்வதேச ரீதியில் உறங்குநிலைக்கு செல்லாமல் தற்காத்துக்கொள்ள முடியும்.
அதேவளை, எதிர்வரும் தேர்தலில் தற்போதுள்ள சூழலில், பெரும்பாலும் மாற்றத்தை வேண்டி நிற்கின்ற மக்களே வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாக காணப்படுவதால் , அந்த மாற்றத்தின் பங்குதாரர்களாக, அதற்கூடாக எமக்கு எந்த ஒரு நன்மையையும் விளையப்போவதில்லை என்ற போதிலும் தற்காலிமாகவேனிலும் நாம் சந்தித்து வரும் கட்டமைப்பு சார் அழிவுகளை குறைக்க அல்லது தடுக்க இது உதவியாக அமையலாம்.
மறுபுறம், சிங்களத்தின் எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் அது சிங்கள தேசத்தை நிச்சயமாக குறிப்பிட்ட ஒரு காலவரைக்கு அரசியல் ஸ்திரம் அற்ற ஒரு குழப்பகரமான நிலைக்கே இட்டுச் செல்லும். இது, தமிழ் மக்கள் தம்மை அரசியல் ராஜதந்திர ரீதியில் பலப்படுத்த உதவும்.
எனவே தமிழ் பேசும் மக்களாகிய நாம் வெறும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல் சிந்தித்து செயலாற்றுவதினூடாக எமது குறிக்கோள்களை அடைய முயற்சிக்க வேண்டும்.
லோ. விஜயநாதன்