செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு 19 ஆம் திகதி வெளியாகும்: மகிந்த அறிவிப்பார் என தகவல்

ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்லும் அறிவிப்பை எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனத் தெரிவித்த சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, அதனையடுத்து தேர்தலை நடத்தும் ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணையாளர் முன்னெடுப்பாரெனவும் தெரிவித்தார்.

தேர்தல் ஜனவரியிலா அல்லது பெப்ரவரி முற்பகுதியிலா என்பது குறித்து தேர்தல்கள் ஆணையாளரே தீர்மானிப்பாரெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் பௌசி மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

எதிரணிக் கட்சிகள் குறிப்பாக ஜே.வி.பி. தரப்பினர் என்ன சட்டப்பிரச்சனை குறித்து பேசினாலும் அரசியலமைப்புத் திருத்தத்துக்கமைவாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இத்தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவார். இதில் எந்த விதமான மாற்றமும் கிடையாது. மக்கள் தேர்தலுக்கான திகதியை எதிர்பார்த்திருக்கிறார்கள்.

சட்டப் பிரச்சினை தொடர்பில் அரசு உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடவேண்டிய தேவை கிடையாது. அது குறித்து பேசித்திரிவோர் வேண்டுமானால் நீதிமன்றத்தை நாடலாம். 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் அங்கீகரித்திருக்கின்றது. அதற்கமைய மகிந்த ராஜபக்ஷ எத்தனை தடவை வேண்டுமானாலும் போட்டியிட முடியும். அரசியலமைப்புத் திருத்தம் அதற்கு இடமளித்துள்ளது.

இதற்கமைய இம்மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தாம் மீண்டும் தேர்தலொன்றுக்கு செல்லும் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுக்கத்தீர்மானித்துள்ளார். அவரால் அவ்வாறு முடிவெடுக்கும் அதிகாரம் சட்டத்தில் உள்ளது.

இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் ஆணையாளர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பார். தேர்தல் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளருக்கே இருக்கின்றது. தேர்தல் சட்டவிதிகளுக்கமைய உரிய காலத்தில் வேட்பு மனுக்களை கோரி தேர்தலுக்கான திகதியை அவர் அறிவிப்பார்.

அதேசமயம் ஜனாதிபதித் தேர்தலை இலக்காக வைத்து 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதான எதிரணியினரின் குற்றச்சாட்டு அபத்தமானதாகும். பட்ஜெட் தேர்தலுக்கான இலஞ்சம் என்ற குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றோம்.

அரசு ஊழியர்கள் கோரியதை கொடுத்திருக்கின்றோம். பொய் கூறி ஏமாற்றி வாக்குக்கோர வேண்டிய அவசியமெதுவும் கிடையாது.

தேர்தலுக்கு எதிராக யார் நீதிமன்றத்தை நாடினாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராகவே இருக்கின்றது.

மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாவதை தடுப்பதில் ஜே.வி.பி.யும், வேறு சில சக்திகளும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். ஆனால் நாட்டு மக்கள் மீண்டும் அவரையே தேர்ந்தெடுக்க உறுதிபூண்டிருக்கின்றனர் எனவும் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

எனினும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இங்கு கருத்துத் தெரிவிக்கையில்; ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுப்பதற்கு முன்னர் அதன் சட்டவலுத்தன்மை குறித்து உயர் நீதிமன்றத்திடம் கருத்துக்கேட்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

எவ்வாறெனினும் இம்மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகுமெனவும் மீண்டும் அவரே ஆளும்தரப்பில் போட்டியிடுவாரெனவும் அவர் தெரிவித்தார்.

இதற்காக சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய தேவை கிடையாது. எதிரணியினர் களத்தில் இறங்கி முடிந்தால் தோற்கடித்துப் பார்க்கட்டும் எனவும் அவர் சவால் விடுத்தார்.