செய்திகள்

ஜனாதிபதி,பிரதமரின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு சீனா பாராட்டு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ​வெளிநாட்டுக் கொள்கைகளை சீன அரசாங்கம் பாராட்டியுள்ளது.

சீன ஜனாதிபதி சீ ஜிங் பிங், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோதே பாராட்டு தெரிவிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது.

சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை அந்நாட்டு ஜனாதிபதி சீ ஜிங் பிங்கை சந்தித்துள்ளார்.

இலங்கைகக்கு உதவிகளை வழங்கும் போது அரசியல் கட்சி அல்லது தனிப்பட்டோர் தொடர்பில் கவனம் செலுத்தாது நாட்டு மக்கள் மற்றும் நாட்டினது கொள்கை தொடர்பில் மாத்திரமே அவதானம் செலுத்தப்படும் என இந்த சந்திப்பின் போது சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொழும்பு துறைமுக நகர் திட்டத்தை மீள ஆரம்பிக்கக் கிடைத்தமை மகிழ்சிக்குரிய விடயமெனவும் சீன ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்திக்கு இயன்றளவிலான உட்சபட்ச உதவிகளை வழங்க சீன அரசாங்கம்
இணங்கியுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் முன்னெடுக்கப்படும் சீனாவின் முதலீடுகள் மற்றும் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இந்த சந்திப்பின் போது கூறியுள்ளார்.

விசேட வேலைத்திட்டங்களுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, அபிவிருத்திக்கான வழிமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் கொள்கை திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கம் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

 n10