செய்திகள்

ஜனாதிபதியாக மைத்திரிபால இருந்தாலும் நாட்டை ஆள்வது பிரதமர் ரணிலே: விமல் வீரவன்ச

நாட்டின் ஜனாதிபதியாக இன்று மைத்திரிபால சிறிசேன இருந்தாலும் நாட்டை ஆட்சி செய்வது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அளுத்கம பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் பேசுகையில்;

கூட்டத்தில் இருப்பவர்கள் ஊ… சத்தமிடுவதனால் சில அரசியல்வாதிகளின் பெயர்களை இன்று அரசியல் கூட்டங்களின்போது கூறமுடியாமல் உள்ளது. அதனால் நான் சில பெயர்களைக் குறிப்பிடுவதில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்றாலும் நாட்டை ஆட்சி செய்வது பிரதமர் ரணில்.

வடக்கில் பொலிஸ் பிரிவை மாற்றுகிறார்கள், தெற்கில் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவை நியமித்துக் கொண்டு அவர்களுக்கு எதிரானவர்களை வேட்டையாடிக் கொண்டு வருகிறார்கள், எனினும் பிரதமர் செய்வது குறித்து ஜனாதிபதிக்குத் தெரியாது.

செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் இடம்பெறுவது உறுதி. நான் இதனை அரசியல் சோதிடத்திற்கமையவே கூறினேன். சோதிடர்களிடம் கேட்டு இதனை நான் கூறவில்லை. ஜெனீவா மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கை தொடர்பான இறுதி அறிக்கை செப்டெம்பர் மாதம் வழங்கப்படும்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட 43 இராணுவத்தினரின் பெயர்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

யுத்த இறுதிக்கட்டத்தின் கடைசி 5 நாட்கள் குறித்து மாத்திரமே ஜெனீவா அறிக்கையில் உள்ளது.பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அந்த 5 நாட்களும் சீனாவில்தான் இருந்துள்ளார். செப்டெம்பர் மாதம் தேர்தல் இடம்பெற்றால் மகிந்தவிற்காக வருகின்ற மக்கள் கூட்டம் இதனைவிட அதிகமாகக் காணப்படும். எனவே அதற்கு முன்னர் எப்படியாவது தேர்தலை வைத்துவிடுவார்கள் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.