செய்திகள்

ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட மட்டு யுவதி அடுத்தவாரம் விடுதலை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த உதயசிறி என்ற யுவதி அடுத்த வாரம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நீண்ட நாள் விடுமுறை காரணமாக ஜனாதிபதியின் விடுதலைக்கான கடிதம் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு அனுப்ப தாமதமாகியதனாலேயே விடுதலை தாமதமானதென்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் சீகிரியாவிற்கு சுற்றுலா பயணத்தை மேற்கொண்ட மட்டக்களப்பு சித்தாண்டியை சேர்ந்த யுவதி உதயசிறி சீகிரிய சிற்பங்களில் கிறுக்கியதால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்த இந்த யுவதி அறியாமல் செய்த தவறை மன்னித்து விடுதலை செய்யப்பட வேண்டுமென அவரது பெற்றோர் மற்றும் தன்னார்வ நிறுவனத்தினர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

பாராளுமன்றத்திலும் இவ்விடயம் பேசப்பட்டது. இதற்கமைய இந்த யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கினார். அதற்கான கடிதத்திலும் கையெழுத்திட்டார்.

ஆனால் அக் கடிதம் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கிடைக்காததால் உதயசிறியின் விடுதலை தாமதமானது. ஜனாதிபதியின் கடிதம் விடுமுறைகள் காரணமாக தாமதமாகியதாலேயே இந்நிலை ஏற்பட்டதென்றும்

திங்கட்கிழமை ஜனாதிபதியின் கடிதம் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுமென்றும் பின்னர் உதயசிறி விடுதலை செய்யப்படுவாரென்றும் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரான மேலும் தெரிவித்தார்.