செய்திகள்

ஜனாதிபதியின் உள்ளக விசாணைப் பொறிமுறை காலத்தை இழுத்தடிக்கும் செயல்: சுரேஷ்

இலங்கை ஜனாதிபதி அவர்கள் மே மாதம் 20ஆம திகதி நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் அரசின் உள்ளூர் விசாரணைப் பொறிமுறையின் தேவையைப் பற்றி தனது தெளிவான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் உள்ளூர் விசாரணை என்பது நேரத்தை வீணடிக்கும் ஒரு செயலாகவும் தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் முட்டாள்களாக்குவதற்கான ஒரு செயற்பாடாகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பார்க்கின்றது என கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“இலங்கையில் முன்னர் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள், பல்வேறுபட்ட கொலைச்சம்பவங்கள், கடத்தல்கள், காணாமல் போகடிக்கப்பட்டவர்கள் போன்றவற்றின் மீதான அரசாங்க விசாரணைகள் தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் ஏமாற்றமளிக்கும் விடயமாகவே அமைந்திருந்தது. இந்த விசாரணைகள் யாவும் காலத்தை இழுத்தடிப்பதற்கான விசாரணைகளாகவும். ஏனையோரை ஏமாற்றுவதற்கான விசாரணையாகவுமே அமைந்திருந்ததை நாம் காணக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில்தான் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனா அவர்கள் உள்ளூர் விசாரணைப் பொறிமுறை ஒன்றைப்பற்றிக் கூறுகின்றார்.

கடந்த 19ஆம் திகதி இராணுவத்தினரின் வெற்றித் தினத்தை மீளவும் கொண்டாடி நாட்டைக் காப்பாற்றிய முப்படைகளின்மீது தனது அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்திய ஒரு ஜனாதிபதி யுத்தக்குற்றங்கள் தொடர்பான ஒரு நியாயமான விசாரணையை எவ்வாறு நடாத்துவார் என்பதை சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டும். நேற்றைய பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் ஐ.நா.விடமிருந்து மேலும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த உள்ளூர் பொறிமுறையை இந்த அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் கூறியதுடன், வருகின்ற 2015 செப்டம்பரில் உள்ளூர் பொறிமுறையின் முன்னேற்றம் தொடர்பாக ஐ.நாவில் வெளிப்படுத்த வேண்டிய தேவை இருப்பதனையும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் இந்த காரணங்களுக்காக ஜூன் மாதம் ஒரு உள்ளூர் பொறிமுறையை ஆரம்பிக்கவுள்ளதாகக் குறிபப்pட்டுள்ளார்.

இதில் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. ஜனாதிபதியைப் பொறுத்தவரையில், கடந்த மார்ச் மாதம் வரவேண்டிய அறிக்கையானது இங்கு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாகவும் உலகத் தரம் வாய்ந்த உள்ளக விசாரணையை ஆரம்பிப்போம் என்று புதிய அரசாங்கம் ஐ.நாவிற்கு அளித்த உறுதிமொழியின் காரணமாகவும் அந்த அறிக்கை வெளிவராமல் செப்டம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்டமையானது தமக்குக் கிடைத்த இராஜதந்திர வெற்றி எனறு அவர்கள் பலமுறை பகிரங்கமாக மார்தட்டிக் கொண்டனர்.

இந்த அறிக்கை செப்டம்பரிலும் வெளிவராமல் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படுவதானது தமக்குக் கிடைக்கும் மேலதிகமான வெற்றி எனவும் இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அவ்வாறான மேலதிக கால அவகாசத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் உள்ளூர் பொறிமுறை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற தேவைப்பாடு உள்ளதையும் அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

ஆகவே உள்ளூர் பொறிமுறை என்பது கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும், சர்வதேச சமூகத்தை ஏமாற்றி தாம் ஒரு நல்லாட்சியைக் கொண்ட ஒரு ஜனநாயக அரசாங்கத்தை ஏற்படுததியுள்ளதாகக் காட்டிக்கொள்வதற்காகவும், ஐ.நா. அறிக்கையை ஒத்திவைப்பதினூடாக பொறுப்புக்கூறுதல் போன்ற கடமைகளிலிருந்து தப்பிக்கொள்வதற்கும் தமிழ் மக்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகளிலிருந்து தப்பிக்கொள்வதற்கும் இந்த உள்ளூர் பொறிமுறை என்பது இவர்களுக்கு அத்தியாவசியமாக இருக்கின்றது.

அரசாங்கத்தின் இந்தக் கபடத்தனமான நிகழ்ச்சி நிரலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள மாட்டாது என்பதுடன், தமிழ் மக்களும் சர்வதேச சமூகமும் இந்த அரசாங்கத்தின் இத்தகைய கபடத்தனமான நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.