செய்திகள்

ஜனாதிபதியுடனான சந்திப்பை பகிஷ்கரித்த பிள்ளையான்: கிழக்கு மாகாண பிரச்சினையின் எதிரொலி

வடமாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாண சபை உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்றை ஜனாதிபதி மம்திரிபால சிறிசேன மேற்கொண்டிருந்த போதிலும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் (சிவனேசத்துரை சந்திரஹாசன்) இந்தச் சந்திப்பை புறக்கணித்துள்ளார்.

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றது. வடமாகாண சபை உறுப்பினர்களைத் தவிர ஏனைய மாணாண சபை உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

வடமாகாண சபை முதலமைச்சருக்கும், உறுப்பினர்களுக்கு இன்றைய சந்திப்புக்கு அழைப்பு அனுப்பப்பட்ட போதிலும், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால் இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ள முடியாதிருப்பதாக வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரியப்படுத்தியிருந்தார். அடுத்தவாரம் அவர்களுடனான தனியான சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்த போதிலும் பிள்ளையான் மட்டும் கலந்துகொள்ளவில்லை. கிழக்கு மாகாண சபையில் உருவாகியிருக்கும் நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு தனது அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த சந்திப்பை அவர் பகிஷ்கரித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.