செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதிக்கட்ட சாட்சி விசாரணைகள் இன்று

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதிக்கட்ட சாட்சி விசாரணைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

இன்றிலிருந்து எதிர்வரும் 30 ஆம் திகதி வரையான ஆறு நாட்களுக்கு இந்த சாட்சி விசாரணை அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச குறிப்பிட்டார்.

வட மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அமர்வு இன்று முதல் நாளை மறுதினம் வரையான மூன்று நாட்களுக்கு மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்துள்ளவர்களில் இதுவரை சாட்சியங்ளை பதிவுசெய்யாதவர்களிடம் இந்த மூன்று நாட்களிலும் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்தார்.

அதன் பின்னர் எதிர்வரும் 28 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் ஒருநாள் அமர்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

29 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் வவுனியா மாவட்டத்தில் சாட்சி விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

இதன் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களில் 5 மாவட்டங்களுக்கான சாட்சி விசாரணைகள் நிறைவுபெறவுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச கூறினார்.

எஞ்சியுள்ள கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மீண்டும் ஆணைக்குழு அமர்வுகளை நடத்தி, அந்த மாவட்டங்களில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பான சாட்சி விசாரணைகளை நிறைவுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள சகல மாவட்டங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் காணாமற்போனோர் தொடர்பிலான சாட்சி விசாரணை அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி வரை பொது மக்களிடமிருந்து 19006 முறைப்பாடுகளும், பாதுகாப்புத் தரப்புகளில் இருந்து சுமார் 5000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

n10