செய்திகள்

ஜனாதிபதி எவருக்கும் அடிபணிய தேவையில்லை: சோபித தேரர் சொல்கிறார்

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் எவருக்கும் அடிபணியாமல் நாட்டில் நீதியையும் சட்டத்தையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமென மாதுலுவாவே சோபித தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் சட்டத்தில் எவரும் தலையிடாதவாறு நாட்டின் நலனுக்காக சகலதையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட மாதுலுவாவே தேரர், எவருக்கும் தலைவணங்க வேண்டிய அவசியமில்லையெனினும் ஜனாதிபதி சிங்கம் போன்று தலைநிமிர்ந்து செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

மாக்கும்புரவில் நேற்று ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் விஜேதாச ராஜபக்ஷ, தலதா அதுகோரள அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்த்தன, பவித்ரா வன்னியாரச்சி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய தேரர், நாட்டில் 19 வது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நாட்டிலுள்ள சட்டத்தில் எவரும் தலை யிடாதவாறு நீதியை நிலைநாட்டுவதற்கு வழிவகுக்க வேண்டும்.

அழிவை ஏற்படுத்தும் இந்த தேர்தல் முறையை மாற்றுவது முக்கியமாகும். முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் இதில் மிகுந்த பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளார். நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் நீங்கள் எவருக்கும் தலைவணங்கத் தேவையில்லை. நாட்டின் நலனுக்குத் தேவையான சகலதையும் நிலைநாட்டி நாட்டில் நீதி நிலைக்க நடவடிக்கை எடுப்பது முக்கியமாகும்.

மேற்படி நிகழ்வு நிலக்ஷி நிலங்கா எனும் மாணவியின் நினைவாக அவர்களது பெற்றோரான சந்ரசிறி பெரேரா தம்பதியினர் மாகும்புர தர்ம உபதேச பாடசாலைக்கு இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றை நிர்மாணித்து வழங்கினர். அக் கட்டடத்தை ஜனாதிபதி உத்தியோகபூர்வ மாகத் திறந்து வைத்தார்.