செய்திகள்

ஜனாதிபதி தேர்தலை துவேசத்தின் அடிப்படையில் நடத்த அனுமதிக்கக்கூடாது: சம்பந்தன்

“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூடமைப்பு இதுவரை முடிவு எதனையும் எடுக்கவில்லை. எனினும், இந்தத் தேர்தலை துவேசத்தின் அடிப்படையில் நடத்த மக்கள் இடமளிக்கக்கூடாது. சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி – ஊழலற்ற ஆட்சி இலங்கையில் உருவாக தேர்தலில் மக்கள் தமது பங்களிப்பைச் செய்யவேண்டும்” என இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“தான் நினைத்தை செய்யலாம் என்ற மமதையில் இலங்கை அரசு தற்போதும் செயற்பட்டு வருவதால் சர்வதேச சமூகத்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் அது உள்ளது. எனவே, இதிலிருந்து தப்பிக்கலாம் என்று அரசு ஒருபோதும் நினைக்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“மக்கள் உண்மையை அறிய வேண்டும் என்ற பணியை மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரனும், சுடர் ஒளி, உதயன் பத்திரிகைகளும் ஆற்றியுள்ளன. இந்தப் பணியால் எமது சமூகம் பல நன்மைகளை அடைந்தது” என்றும் அவர் தெரிவித்தார்.

மூத்த ஊடகவியலாளரும் சகோதரப் பத்திரிகைகளான ‘சுடர் ஒளி’, ‘உதயன்’ நாளேடுகளின் முன்னாள் ஆசிரியருமான என்.வித்தியாதரன் எழுதிய ‘என் எழுத்தாயுதம்’ (ஒரு பத்திரிகையாளனின் பட்டறிவுப் பகிர்வு) நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு, பம்பலப்பிட்டி, சரஸ்வதி மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கும்போதே சம்பந்தன் எம்.பி. மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.

“எனக்கும் வித்தியாதரனுக்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு. எமது உரிமைப் போராட்டம் ஆயுத ரீதியில் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் இவரின் ஊடகப் பணியும் அயராது தொடர்ந்தது. மிகவும் இக்கட்டான காலப்பகுதிகளில் சுடர்ஒளி, உதயன் பத்திரிகைகளின் ஆசிரியராக இவர் செயற்பட்டு வந்தார். நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கோடு இவர் உழைத்தார்.

எனவே, நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்பட வித்தியாதரனின் பங்களிப்புத் தொடரவேண்டும்” “இன்று இலங்கையின் இனப் பிரச்சினை சர்வதேச மயமாகிவிட்டது. உண்மையான நல்லிணக்கம், நிரந்தர அரசியல் தீர்வு இலங்கையில் ஏற்பட வேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடாகும். ஆனால், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் இலங்கையில் இவை ஏற்படவில்லை.

இந்த நாடு சுதந்திரமடைந்து 65 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், தேசிய பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை. நாடு சுதந்திரமடைய சிறுபான்மை சமூகம் ஒத்துழைப்பை வழங்கியது. ஆனால், சுதந்திரத்தின் பின்னர் சிறுபான்மை சமூகத்தினரை நாட்டின் இரண்டாம் பிரஜைகளாக்கிவிட்டது அரசு. நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. நாட்டுக்குள்ளேயே இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்று கூறி வந்தோம்.

இன்று இலங்கையின் இனப்பிரச்சினை சர்வதேசமயமாக சிறுபான்மை சமூகம் காரணமல்ல. ஆட்சி புரிந்த அரசுகளே காரணம். இந்தப் பிரச்சினை நீண்ட காலம் தொடரும் என்று நாம் நினைக்கவில்லை. விரைவில் தீர்வு கிடைக்க எமது முயற்சி தொடரும்” .