செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: மகிந்தவின் பிரசாரத்தில் அமெரிக்க விளம்பர நிறுவனம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ளவென உலகப்பிரபலமான அமெரிக்க விளம்பர நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக நாடுகளின் தலைவர்களின் வெற்றிக்காக உழைக்கும் விளம்பர நிறுவனமான அப்கோ வேர்ல்ட்வைட் எனும் நிறுவனமே இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்காக உழைக்கவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு அப்கோ வேர்ல்ட் வைட் நிறுவனம் தேர்தல் பிரசாரம்,தேர்தல் திட்டங்கள் என பலவேலைகளை செய்து மோடியை வெற்றிபெறச் செய்தது.

2005 மற்றும் 2010 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் பிரசாரப் பணிகளை ரைஎட் என்ற நிறுவனமே மேற்கொண்டது.

அமைச்சர் சரத் அமுனுகமவின் மகளான வருனி அமுனுகம மற்றும் பிரபல தொழிலதிபர் டிலித் ஜெயவீர ஆகியோர் மகிந்தவின் வெற்றிக்காக ரைஎட் விளம்பர நிறுவனத்தினூடாக செயற்பட்டனர்.

ஆனால், இம்முறை சர்வதேச விளம்பர நிறுவனத்தை மகிந்த அரசு நாடியுள்ளது. அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா என பல நாடுகளின் தலைவர்களின் வெற்றிக்காக உழைத்த அப்கோ வேர்ல்ட் வைட் நிறுவனம் தெரிவாகியுள்ளது.

ஆசியாவில் மோடியின் வெற்றியை உறுதிசெய்த அமெரிக்க நிறுவனம் மகிந்தவின் வெற்றியை உறுதி செய்யும் என்ற நம்பிக்கையில் தான் இந்த நிறுவனத்தை அணுகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.