செய்திகள்

ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியும் உதய சிறியால் வெளியே வர முடியாத நிலை

சீகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதியதாக கைது செய்யப்பட்டு இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாணவி சின்னத்தம்பி உதயசிறிக்கு ஜனாதிபதி விசேட மன்னிப்பு வழங்கிய போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவரது மேன்முறையீட்டு மனு தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் சிபார்சுக்கமைய அரசியலமைப்பின் 34 ஆம் உறுப்புரையின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த மாணவிக்கு விசேட மன்னிப்பை வழங்கியிருந்தார்.

அவருக்கு மன்னிப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனத்தில் எடுத்த போது சிறைத் தண்டனை அனுபவிப்பவரின் சார்பில் அவரது சிறைத் தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விடுதலைக்கு தடையாகவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

சிறைத் தண்டனை அனுபவிப்பவர் எவரும் தனது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்திருந்தால் அவரது விடுதலை தொடர்பாக வழங்கப்படும் எந்தவிதமான விசேட மன்னிப்பும் பொருந்தாது எனவும் சிறைத் தண்டனை அனுபவிப்பவரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே மன்னிப்பு வழங்க முடியுமெனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.