செய்திகள்

ஜனாதிபதி மாளிகை பகுதியில் முடப்பட்டிருந்த வீதிகள் திறப்பு: பெருமளவு வாகனங்களும் மீட்பு!

உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் கொழும்பு மாநகரில் மூடப்பட்டிருந்த பல வீதிகள் நேற்று முதல் மீண்டும் பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மாளிகையை அடுத்துள்ள பல வீதிகளே இவ்வாறு திறக்கப்பட்டன. இதன்போது அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பெருந்தொகையான வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.

திறந்து விடப்பட்ட உயர்பாதுகாப்பு வலையப் பகுதியில் கோடிக்கணக்கான இலங்கை ரூபாய்கள் பெறுமதியான பல்வித வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வீதிகளில் நிரையாக அடுக்கி விடப்பட்டு இருந்த வாகனங்கள், தூசி படிந்தனவாக காணப்பட்டதாகவும், வெள்ளை வான்கள், வெள்ளை டிறக்குகள், கறுப்பு மற்றும் வேறு நிறங்களிலான வாகனங்கள், இலக்கத் தகடு உள்ளவை, இலக்கத் தகடுகள் அற்றவை, புதியவை, பழையவை என பலவித வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்ததால் பாவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கும் அமைச்சர் ஜோன் அமரதுங்க இவை சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பாவிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டு உள்ளார்.

உயர்பாதுகாப்பு வலையங்கள் எனக் கூறப்பட்டு மூடப்பட்ட வீதிகளில் எதற்காக இவ்வளவு தொகை வாகனங்கள் நிரைப்படுத்தப்பட்டு  இருப்பதாக கேள்ளி எழுப்பிய ஜோன் அமரதுங்க இவை பற்றிய முழு விசாரணைகள் இடம்பெறும் எனவும் பின்னர் அவை குறித்து நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

உயர்பாதுகாப்பு வலயமாக மூடப்பட்டிருந்த ஜனாதிபதி மாவத்தை, பரோன் ஜயதிலக மாவத்தை, சதாம் வீதி உள்ளிட்ட வீதிகள் மக்கள் பாவனைக்காக நேற்றுமுதல் திறக்கப்பட்டுள்ளன. பழைய பாராளுமன்ற சுற்றுவட்டத் திலிருந்து ஜனாதிபதி மாவத்தை ஊடாக மணிக்கூட்டுக் கோபுரம் வரையான வீதியில் சில இடங்களில் ஒருவழி போக்குவரத்து அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேநேரம், பெளத்தாலோக மாவத்தையில் ஸ்டான்லி விஜயசுந்தர மாவத்தை சந்திக்கும், தும்முள்ளை சந்திக்கும் இடைப்பட்ட வீதியில் பல வருடங்களாக பஸ் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளது. இந்த வீதியூடாக இனிமேல் பஸ் போக்குவரத்து இடம்பெறும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.