செய்திகள்

ஜனாதிபதி மைத்திரியை வடக்கு முதலமைச்சர் அடுத்த வாரம் சந்திப்பார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் அவரது அமைச்சர்களும் அடுத்த வாரத்தில் சந்தித்துப் பேசவுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாளைய தினம் இந்த சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கிக்கொடுப்பதற்கு ஜனாதிபதி செயலகம் முன்வந்திருந்த போதிலும், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால் மற்றொரு தினத்தை முதலமைச்சர் கேட்டுள்ளார்.

இதனையடுத்தே அடுத்த வாரத்தில் ஒரு தினத்தை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சருடன் வடமாகாண அமைச்சர்களும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்பார்கள் எனவும் தெரியவந்திருக்கின்றது.

வடமாகாண சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான ஆவணம் ஒன்று வடமாகாண முதலமைச்சரால் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகவே கையளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.