செய்திகள்

ஜனாதிபதி மைத்திரியை வியாழன் சந்தித்துப் பேசுகின்றார் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடமாகாண நிலைமைகள் தொடர்பில் இச்சந்திப்பில் முக்கியமாக ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை வடக்கு முதலமைச்சருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெறவிருந்த நிலையில் முதலமைச்சர் திடீர் சுகயீனமடைந்ததால் அவரால் இந்தச் சந்திப்புக்காக வரமுடியாத நிலையேற்பட்டது.

இந்த நிலையில் வடமாகாண சபையில் நேற்று முன்தினம் புதிய அரசியலமைப்பில் வடமாகாண மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளை உள்ளடக்கும் விதத்தில் வடமாகாண சபையால் முன்மொழியப்பட்ட இணைந்த வடக்குகிழக்கிற்குள் சமஷ்டித் தீர்வு குறித்த பிரேரணைக்கு வடமாகாண சபை ஏகமனதாக அங்கீகாரமளித்திருந்தது.

வடமாகாண சபையால் முன்மொழியப்பட்டுள்ள இந்தத் தீர்வு யோசனைக்கு தென்பகுதியில் கடும்போக்காளர்கள் மத்தியிலும் பௌத்த அமைப்புக்களிடையேயும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதுடன், வடமாகாணசபையின் இந்தத் தீர்வு யோசனைக்காக விக்னேஸ்வரனை கைதுசெய்யுமாறு கோரிக்கைகளும் விடுக்கப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார்.

எனினும் முன்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒருமித்தே சந்திப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஜனாதிபதியுடன் மட்டுமே முதலமைச்சர் சந்திப்பை நடத்துவாரென தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பில் வடக்கின் நிலைமைகள் குறித்தும் காணி நிலைமைகள் மற்றும் இடம்பெயர்ந்தோருக்காக கட்டப்படவுள்ள 65,000 வீட்டுத்திட்டம் தொடர்பிலும் விசேடமாக ஆராயப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
R-06