செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி நாளை சீனா பயணம்: உறவுகளைப் பாதுகாக்க முயற்சி

சீனாவுக்கான பயணத்தை நாளை ஆரம்பிக்கவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீனாவின் தலைமையைச் சந்தித்து இலங்கையில் தடைப்பட்ட சீனாவின் திட்டங்கள் தொடர்பில் சுமூகமான பேச்சுக்களை நடத்தவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

மூன்று நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு சீனாவுக்குச் செல்லவுள்ள சிறிசேன, சீனத் தலைமையுடன் பேச்சுக்களை நடத்தும் போது பொருளாதார அபிவிருத்தியில் குழப்பம் ஏற்படாதவாறே தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள முயற்சிப்பார் எனவும் இந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இப்பயணத்தின் போது சீன ஜனாதிபதி ஜின்பிங் மற்றும் முக்கிய தலைவர்களுடன் சிறிசேன பேச்சுக்களில் ஈடுபடுவார் என கொழும்பு வட்டாரம் தெரிவிக்கின்றது.

“முன்னைய அரசாங்கம் இலங்கையில் சீனா சுதந்திரமாகச் செயற்படுவதற்கு அனுமதித்தது. ஆனால் இந்தியாவை எரிச்சலடைய வைக்காத சாதாரண உறவை சீனாவுடன் கட்டியெழுப்பவே ஜனாதிபதி சிறிசேன விரும்புகிறார்’ என பத்திரிகை ஆசிரியரான விக்ரர் ஐவன் குறிப்பிடுகிறார்.

ஜனவரியில் இடம்பெற்ற தேர்தலின் பின்னர் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவையே தேர்ந்தெடுத்திருந்தார். இதன்மூலம் இவர் சீனாவை விட இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவது தெளிவாகிறது.

இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்த பின்னர் சீர்குலைந்திருந்த உறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி தற்போது மேற்கொள்கிறார்.