செய்திகள்

ஜப்பானின் உயர் விருதுக்கு மன்மோகன் சிங் தெரிவு

ஜப்பான் அரசின் உயரிய குடிமக்கள் விருதான ‘தி கிராண்ட் கார்டன் ஆப் தி ஆர்டர் ஆப் தி பவுலோனியா பிளவர்ஸ்’ விருதுக்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மன்மோகன்சிங் இதற்காகத் தெரிவாகியிருப்பதையிட்டு இந்திய காங்கிரஸ் கட்சி தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்ததிருக்கின்றது.

ஜப்பானின் இந்த உயர் விருது 1888-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. பொதுவாக முன்னாள் பிரதமர்கள், மூத்த அமைச்சர்கள், நீதிபதிகள், தூதர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுவது இல்லை. தகுதியான நபர்கள் கண்டறியப்பட்டால் மட்டுமே விருது அறிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ‘தி கிராண்ட் கார்டன் ஆப் தி ஆர்டர் ஆப் தி பவுலோனியா பிளவர்ஸ்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்மோகன் சிங்குக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதால் நாடே பெருமைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் மூத்த தலைவர் அஜய் மக்கான் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் மன்மோகன் சிங்கை வாழ்த்தியும் பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக சாடியும் உள்ளார்.

‘வெற்று கோஷங்களை எழுப்புவோருக்கு (மோடி) உலகம் மரியாதை செலுத்தாது. மன்மோகன் சிங் போன்ற செயல்வீரர்களை மட்டுமே கவுரவிக்கும். அந்த வகையில் ஜப்பானின் மிக உயரிய விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமை மன்மோகன் சிங்குக்கு கிடைத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

டோக்கியாவில் உள்ள ஜப்பான் பேரரசரின் அரண்மனையில் இன்று நடைபெறும் விழாவில் மன்மோகன் சிங் உள்பட 4029 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.