செய்திகள்

ஜப்பானிய பணயக்கைதியின் தாயார் உருக்கமானவேண்டுகோள்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளினால் பணயக்கைதியாக வைக்கப்பட்டுள்ள ஜப்பானியர்கள் இருவரில் ஓருவரின் தாயார் தனது மகனை விடுதலைசெய்யுமாறு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சுயாதீன செய்தியாளரான தனது மகன் கென்ஜிகோட்டோ மனிதாபிமான உணர்வினாலேயே போர்கள் நடைபெறும் பகுதிகளுக்கு செய்திசேகரிக்கச்சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
எனது மகன் இஸ்லாமிய தேசத்தின் எதிரியல்ல,செய்தியாளர் மாநாட்டில் கண்ணீர் சிந்தியபடி தெரிவித்துள்ள அவர்,தனது மகன் ஏதாவது பிரச்சினைகளை உருவாக்கியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளதுடன்,கப்ப பணத்தை செலுத்தியாவது தனது மகனை விடுதலைசெய்யுமாறு ஜப்பானிய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு தாயார் என்ற ரீதியில் என்னால் எனது மகனின் விடுதலைக்காக மன்றாடவே முடியும்,எனது மகனின் விடுதலைக்காக எனது உயிரை தியாகம் செய்ய தயாராகவுள்ளேன் என 74 வயது தாயார் தெரிவித்துள்ளார்.
எனது மகன் உலகின் கொந்தளிப்பான பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு உதவ ஆர்வம் கொண்டிருந்தான்,தனது நண்பனை காப்பாற்றவே தனது இரண்டு வயது குழந்தையை விட்டுவிட்டு சிரியா சென்றான், என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறிப்பிட்ட சுயாதீன ஊடகவியலாளர் சிரியாவில் பயணக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டிருந்த தனது நண்பனை விடுதலைசெய்வதற்காக முயல்வதற்காவே அங்கு சென்றதாக தகவல்வெளியாகியுள்ளது.